முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிராக இலங்கைக்கு வருகைதந்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள் எந்தவித கருத்துக்களும் கூறாமல் சென்றுவிட்டார் என்று எம்மவர்கள் அவர்மீது அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

பூகோள அரசியல் மற்றும் நாடுகளுக்கிடையிலான ராஜதந்திரம் பற்றி தெரிந்தவர்கள் எவரும் இம்ரான்கான் மீது இவ்வாறு குற்றம் கூறமாட்டார்கள்.
முஸ்லிம் நாடுகளில் அணு ஆயுத மற்றும் இராணுவ பலம்வாய்ந்த பாகிஸ்தான் நாடானது, உரிமைக்காகவும், அநீதிக்கெதிராகவும் போராடுகின்ற பாலஸ்தீன், காஸ்மீர், அல்-கொய்தா, தாலிபான் போன்ற உலகின் ஏராளமான இஸ்லாமிய இயக்கங்களுக்கு தனது நாட்டில் பயிற்சி வழங்கிவருவதுடன், நிதி உதவிகளையும் செய்கின்றது.
இவ்வாறான நடவடிக்கை காரணமாக பாகிஸ்தான் பயங்கரவாதத்திற்கு துணை போகின்ற நாடு என்று இந்தியா உற்பட சில நாடுகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றது.
தெற்காசிய பிராந்தியத்தில் பாகிஸ்தானுக்கு போட்டி நாடாக இந்தியா உள்ளது. காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு விட்டுக்கொடுக்கும் நிலையில் பாகிஸ்தான் இல்லை. இந்த விவகாரத்தில் பல தடவைகள் இந்தியாவுடன் பாகிஸ்தான் யுத்தம் புரிந்ததுடன், இன்று வரைக்கும் எல்லையில் பதட்டம் நிலவிக்கொண்டே இருக்கின்றது.
அத்துடன் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சிக்கு சீனா பெரிதும் உதவி வருகின்றது. எதிரிக்கு எதிரி நண்பன் என்றவகையில் சீனாவின் சின்சியாங் மாகாணத்தில் உய்கூர் முஸ்லிம்களுக்கு அநீதிகள் நடந்துவருகின்ற நிலையிலும், தனது நாட்டின் நலன் கருதி சீனாவை பகைக்ககூடாது என்பதனால் உய்கூர் முஸ்லிம்கள் பற்றி பாகிஸ்தான் வாயே திறப்பதில்லை.
அவ்வாறு சீனாவை பகைத்தால் தனது நாடு பொருளாதார பாதிப்பினை எதிர்கொள்ளும் என்பது மட்டுமல்லாது, காஸ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் கை ஓங்கிவிடும் என்பது பாகிஸ்தானின் நிலைப்பாடு.
இந்த நிலையில் சீனாவின் முத்துமாலை திட்டத்திற்கு இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தை வழங்கி முழுமையாக ஒத்துழைப்பது போன்று, பாகிஸ்தானும் தனது கவ்தார் துறைமுகத்தினை சீனாவுக்கு வழங்கியுள்ளது.
இந்தியாவை சுற்றிவர சீனா வகுக்கின்ற முத்துமாலைதிட்ட கூட்டணிக்குள் பாகிஸ்தான், இலங்கை, பங்காளதேஸ், மியன்மார் போன்ற நாடுகள் உள்ளது.
பிராந்தியத்தில் இந்தியாவை தனிமைப்படுத்த வேண்டும் என்பதில் சீனாவைவிட பாகிஸ்தானுக்கே அதிக ஆர்வம் உள்ளது. இவ்வாறான நிலையில் இலங்கை அரசானது சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு தலையையும், இந்தியாவுக்கு வாலையும் காண்பித்துக்கொண்டு தனது பயணத்தை தொடர்கின்றது.
இந்தியா இலங்கைக்குள் முழுமையாக ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதற்காகவே இறுதி யுத்தத்தின்போது ஏராளமான ஆயுத உதவிகளை பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கியது.
இந்த நிலையில் தனது நற்பு நாடான இலங்கையுடன் இருதரப்பு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடும் நோக்கில் பாகிஸ்தான் பிரதமரின் இலங்கை விஜயத்தில் இடம்பெறுகின்ற நிகழ்வுகளில் எதனை பேச வேண்டும், எதனை பேசக்கூடாது என்று முன்கூட்டியே கொள்கை வகுப்பாளர்களினால் திட்டம் வகுக்கப்பட்டிருக்கும்.
கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தொடரில் இம்ரான்கானின் உரை பாரிய சர்ச்சையினை ஏற்படுத்தியதன் காரணமாக, அதன்பின்பு அவர் மிகவும் நிதானமாக உரையாற்றுவது கவனிக்கத்தக்கது.
அவ்வாறு திட்டமிடப்பட்ட விடையங்களுக்கு அப்பால், ராஜதந்திர சிக்கல்களை ஏற்படுத்துகின்ற சர்ச்சைக்குரிய கருத்துக்கள் எதனையும் பேசமாட்டார். அவ்வாறு பேசுகின்றபோது சில நேரம் இலங்கையுடனான உறவுகளில் விரிசல்கள் ஏற்பட்டு தனது கைக்குள் இருக்கின்ற இலங்கை கைநழுவி தனது எதிரியான இந்தியாவுடன் நெருக்கத்தினை ஏற்படுத்திவிடலாம். இதனை ஒருபோதும் பாகிஸ்தான் விரும்பாது.
இதன் காரணமாகவே இம்ரான்கான் அவர்கள் இலங்கை விஜயத்தின்போது ஜனாஸா விவகாரம் பற்றி எதுவும் கூறவில்லை. பாகிஸ்தான் ஜனாஸா விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று எமது முஸ்லிம் தலைவர்கள் இதயசுத்தியுடன் விரும்பியிருந்தால், இம்ரான்கான் வர உள்ளார் என்ற செய்தி தெரிந்த உடனேயே பாகிஸ்தானுக்கு சென்று பிரதமர் மற்றும் அங்குள்ள இராணுவ அதிகாரிகளை சந்தித்து இதற்கு தீர்வு காண முயற்சித்திருக்கலாம்.
ஆனால் இவ்வாறான ராஜதந்திர நடைமுறைகள் அனைத்தும் எமது தலைவர்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும், அரசியல் ஆதாயங்களுக்காக மக்களுக்கு படம் காண்பித்து நடிக்க வேண்டிய தேவை இருந்ததன் காரணமாகவே பாகிஸ்தான் பிரதமரை சந்திக்கின்ற விவகாரம் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்துக்கொண்டது.
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது