பலமுள்ள மு.காங்கிரசை எவ்வாறு கட்டியமைக்கலாம் ?

மு.கா தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் சுயநல அரசியல் தேவைக்காகவே அதியுயர்பீடம் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டுக்கள் தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ச்சியான இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முடிவு கட்டுவதுடன், பலமுள்ள முஸ்லிம் காங்கிரசை எவ்வாறு கட்டியெழுப்பலாம் என்பதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.

ஒரு அரசியல் கட்சியின் நிருவாகிகளுக்கு சமூகப்பற்று, தூரநோக்கு, அறிவாற்றல், துணிச்சல், தியாக மனப்பான்மை ஆகியவைகள் இருத்தல் வேண்டும். அப்போதுதான் அந்த கட்சி பலமானதாகவும், அதன் தேசிய தலைவர் சக்தியுள்ள தலைவராகவும் பயணிக்க முடியும். 

ஆனால் எமது முஸ்லிம் காங்கிரசின் இன்றைய நிலை என்ன ? 

முஸ்லிம் காங்கிரசின் அதியுயர்பீடத்தில் உள்ளவர்களில் அறிவாற்றல், சமூகப்பற்று, தூரநோக்கு ஆகியவைகளை கொண்டவர்கள் மிகக்குறைவு. அவ்வாறானவர்கள் அதியுயர்பீடத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.

அதாவது கொந்தராத்துக்காரர்கள், பணக்கார வர்த்தகர்கள், ஊழல்வாதிகள், கோடீஸ்வரானக வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளவர்கள், தனிப்பட்ட அரசியல் அதிகாரத்தினை அடைய ஆசைப்படுபவர்கள் ஆகியோர்களே அதிகமாக உள்ளார்கள்.   

இவர்கள் அதியுயர்பீடத்திற்கு எவ்வாறு தெரிவு செய்யப்பட்டார்கள் ?

சில காலங்கள் தலைவரிடம் வால்பிடித்து, காக்காய் பிடித்து, கால்பிடித்து, மற்றவர்களை கோள் மூட்டி, கெஞ்சி அழுது புலம்பி தன்னை தலைவரின் விசுவாசியாக காண்பித்ததன் பின்பு, இறுதியில் இவர் தனது விசுவாசிதான் என்று தலைவர் நம்பியதன் அடிப்படையில் தலைவரினால் நியமிக்கப்பட்டவர்கள். 

அத்துடன் தனது பணத்தை செலவுசெய்து காண்பிகின்ற சில அரசியல் அறிவற்ற முட்டாள்களும், மற்றும் தலைவருக்கு தனது ஆதரவாளர்கள் மூலமாக பாரிய நெருக்கடி கொடுத்து அதன்பின்பு வேறுவழியின்றி தலைவரினால் வேண்டா வெறுப்புடன் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுமே அதில் உள்ளார்கள். 

இவ்வாரானவர்களிடமிருந்து சமூகம் பற்றிய எதிர்கால திட்டங்களையும், உறுதியான கொள்கையினையும் எவ்வாறு எதிர்பார்க்க முடியும் ? 

தலைவர் மூலமாக எதையாவது பிடிங்கி பொக்கட்டை நிரப்பிக்கொண்டால் போதும் என்ற மனோநிலையில் உள்ள இவ்வாறான சமூக உணர்வற்றவர்களிடமிருந்து கட்சியை மீட்பதுதான் இன்றுள்ள பாரிய சவாலாகும்.  

அதியுயர்பீடத்தில் சமூக சிந்தனையுடன், அறிவுள்ள சிலர் இருந்தாலும் அவர்களது கருத்துக்கள் அங்கு எடுபடுவதில்லை. தலைமைத்துவ விசுவாசம் என்றபோர்வையில் தலைவரின் மனோநிலையை அறிந்து அதற்கேற்ப கருத்து கூறுகின்ற சந்தர்ப்பவாதிகளே அதிகமாக உள்ளார்கள்.         

இதனை எவ்வாறு மாற்றியமைக்கலாம் ? 

கட்சிப் போராளிகள் மற்றும் அரசியல் அனுபவம் உள்ளவர்களுக்கு ஐம்பது வீதமும், ஏனைய ஐம்பது வீதம் நாட்டிலுள்ள அறிவு சார்ந்த புத்திஜீவிகளுக்கு அதியுயர்பீடத்தில் இட ஒதுக்கீடு வழங்குதல் வேண்டும். இந்த அறிவு சார்ந்தவர்களில் சமூகப்பற்றுள்ள மார்க்க அறிஞர்களுக்கும், துறை சார்ந்த நிபுணர்களுக்கும் இடம் வழங்குதல் வேண்டும்.  

அதுபோன்று பிராந்தியங்களுக்கு பொறுப்பாக தலைவரினால் நியமிக்கப்பட்டிருக்கின்ற அப்பாவிகளையும், செயல்திறன் இல்லாதவர்களையும், மற்றவர்கள் அரசியலில் முன்னேறிவிடுவார்கள் என்ற பொறாமையினால் காய்வெட்டித்திரிகின்ற நயவஞ்சகர்களையும் நீக்கிவிட்டு புதிய அமைப்பாளர்களை நியமிக்க வேண்டும். 

இவ்வாறு பொது நோக்குடன் அடிமட்டம் தொடக்கம் அதியுயர்பீடம் வரைக்கும் மாற்றங்களை ஏற்படுத்தாமல், தனது விசுவாசிகள் என்ற போர்வையில் தனது தனிப்பட்ட சுயநல அரசியலுக்காக அதியுயர்பீடத்தில் சில தலையாட்டி பொம்மைகளை வைத்துக்கொண்டு தொடர்ந்து ஏமாற்று அரசியல் செய்ய முற்படுவதானது, என்றோ ஒருநாள் தனது கழுத்தை இறுக பிடித்துக்கொள்ளும். அதன்பின்பு அதிலிருந்து மீள்வது கடினமாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s