கொழும்பு: ஐக்கிய இராச்சியத்திலிருந்து (UK) இலங்கைக்கு வருவதற்கான தற்காலிக பயணத்தடை நீக்கப்பட்டுள்ளதாக, வெளி விவாகார அமைச்சு அறிவித்துள்ளது.

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த தடை நீக்கப்பட்டுள்ளதாக, அமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கொவிட்-19 வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து இலங்கைக்கு வரும் பயணிகள் தொடர்பில், அரசாங்கத்தினால் தற்காலிக பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, கடந்த வருடம் டிசம்பர் 23ஆம் திகதி முதல் பிரித்தானியாவிலிருந்து வரும் விமானங்கள்இலங்கையில் தரையிறங்க அனுமதிக்கப்படாது என, அறிவிக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், சுகாதார அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 14 நாட்கள் தனிமைப்படுத்தல் மற்றும் PCR சோதனைகளுக்கு உட்பட்டு, பயண கட்டுப்பாடுகளை தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டல்களின் கீழ், சுற்றுலாப் பயணிகள் இங்கிலாந்திலிருந்து இலங்கை வருவதற்கான நடைமுறையும் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என, அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.