ரோஹிங்கிய முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்பு செய்த குற்றவாளி யார் ? கொலைகாரர்களுடன்இலங்கைக்கு உள்ள தொடர்பு

உலக நாடுகள் மத்தியில் “இரும்புத்திரை” என்று அழைக்கப்படுகின்ற பௌத்த நாடான மியன்மாரில் மீண்டும் அந்த நாட்டு இராணுவத்தினர் ஆட்சியை கைப்பெற்றியதுடன், ஆங்சான் சூக்கியையும் கைது செய்ததாக செய்திகள் வெளிவந்ததையடுத்து “அல்ஹம்துலில்லாஹ்” என்றும் “நீதி கிடைத்துவிட்டது” என்றும், சமூக வலைத்தளங்களில் காணக்கிடைகின்றது.

மியன்மாரில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டதற்கும், இலட்சக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டதற்கும் இவர்தான் கரணம் என்ற கற்பனை கண்ணோட்டத்திலேயே ஆங்சான் சூக்கி கைது செய்யப்பட்டதற்காக மகிழ்ச்சி அடைகின்றனர்.   

ஆனால் மியன்மார் நாடு நீண்ட காலங்களாக இராணுவத்தினரின் ஆட்சியில் இருந்துள்ளது. இராணுவ ஆட்சி இல்லாத காலங்களிலும் இராணுவத்தின் விருப்பத்திற்கு மாற்றமாக ஆட்சியாளர்களினால் எதுவும் செய்துவிட முடியாது. 

நோபல் பரிசு பெற்ற ஆங்சான் சூக்கி அவர்கள் சுமார் பதினைந்து வருடங்கள் அந்த நாட்டு இராணுவ ஆட்சியாளர்களினால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

1990 இல் மியன்மாரில் நடைபெற்ற பொது தேர்தலில் இவரது தலைமையிலான கட்சி அமோக வெற்றியினை பெற்றிருந்தும், ஆட்சி அமைப்பதற்கு இராணுவத்தினர் இவரை அனுமதிக்கவில்லை.

சர்வதேசத்தின் கடுமையான அழுத்தம் காரணமாகவும், பொருளாதார கெடுபிடிகளாலும் இவர் 2010 இல் இராணுவத்தினரினால் வீட்டுக்காவலிலிருந்து விடுவிக்கப்பட்டார். 

அப்போது “பர்மா” என்று அழைக்கப்பட்ட மியன்மாரில் 1977 இல் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான இனச்சுத்திகரிப்பு ஆரம்பிக்கப்பட்டதுடன், 1982 இல் ரோஹிங்கிய முஸ்லிம்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது.   

இலங்கையில் பௌத்த இனவாத இயக்கங்கள் முஸ்லிம்களுக்கெதிராக செயல்படுவதுபோன்று மியன்மாரில் அசின் விராது தேரர் தலைமையில் 969 என்னும் இயக்கம் நீண்டகாலமாக செயல்பட்டு வருகின்றது.    

ரோஹிங்கிய முஸ்லிம்களை கொடூரமான முறையில் கொலை செய்தும், பெண்களை கற்பழித்தும், அவர்களின் பொருளாதாரத்தினை சூறையாடிவிட்டு நாட்டைவிட்டு துரத்தியடித்ததும் அந்த நாட்டு இராணுவத்தினரும், 969இயக்கமுமாகும். 

இவ்வாறு முஸ்லிம்களின் கொலைகளுக்கு காரணமான 969 இயக்கத்தின் தலைவர் அசின் விராது தேரர் 2014 இல் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இலங்கைக்கு அழைக்கப்பட்டு அவருக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. 

அத்துடன் நாட்டின் பல பாகங்களிலுமிருந்து பௌத்த பிக்குகள் வரவழைக்கப்பட்டு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மாநாடு நாடாத்தப்பட்டதுடன், பொதுபலசேனா இயக்கத்தின் தலைவர் ஜானசார தேரருக்கும், அசின் விராது தேரருக்குமிடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. 

அந்த ஒப்பந்தத்திற்கு பின்பு இலங்கையில் பல அசம்பாவிதங்கள் முஸ்லிம்களுக்கெதிராக நடைபெற்றது. இது பற்றி நீண்ட விரிவான கட்டுரை தொடரினை அப்போது எழுதியிருந்தேன்.  

நீண்டகால போராட்டங்களுக்கு மத்தியில் மியன்மார் இராணுவம் சில விட்டுக்கொடுப்புக்களை செய்ததுடன், ஆங்சான் சூக்கி அவர்களுக்கு 2016 இல் ஆட்சி அதிகாரம் கிடைத்தது.

மியன்மாரில் ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிராக இனச்சுத்திகரிப்பு நடைபெற்றபோது அரசியல் தலைவர் என்றவகையில் அதற்கு எதிராக ஆங்சான் சூக்கி வாய் திறக்கவில்லை. அவ்வாறு திறந்தால் என்ன நடக்குமென்பது அவருக்கு தெரியும். 

இனச்சுத்திகரிப்புக்கு பின்பு ரோஹிங்கிய முஸ்லிம் மக்கள் விவகாரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு சென்றுள்ளதுடன், சர்வதேச நீதிமன்றத்தையும் அடைந்தது. ஆனாலும் குற்றவாளிகளை காப்பாற்றும் முயற்சியில் ஆங்சான் சூக்கி செயல்பட்டாரே தவிர, பாதிக்கப்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமென்று அவர் செயல்படவில்லை. 

எனவே ஆங்சான் சூக்கி கைது செய்யப்பட்டார் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைய முடியாது. மாறாக அவரை யார் கைது செய்தார்களோ, அந்த இரானுவத்தினர்களும் மற்றும் அசின் விராது தேரர் தலைமையிலான 969 இயக்கமுமே குற்றவாளிகளாகும். அதனால் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டுமென்பது எமது பிரார்த்தனையாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s