கொழும்பு: உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலை குண்டுத்
தாக்குதல்களுடன் ஐ.எஸ்.ஐ.எஸ். சர்வதேச
பயங்கரவாத அமைப்பு நேரடியாக
தொடர்புபடவில்லை என்பதும், தாக்குதலின்
பின்னர் அதற்கான பொறுப்பை அவ்வமைப்பு
ஏற்பதற்கான நடவடிக்கைகளை ‘மாத்தளை
சஹ்ரான்’ எனும் சந்தேக நபரே
முன்னெடுத்திருந்ததாகவும் விசாரணைகளில்
வெளிப்பட்டுள்ளது.

தனது ஆலோசனைகளின் கீழ், சி.ஐ.டி.யின்
டிஜிட்டல், கணினிக்குற்றம் மற்றும் சைபர்
குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப்
பிரிவினை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட
பெண் பொலிஸ் அத்தியட்சர் தர்ஷிகா குமாரி ,
பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர்
சேனாரத்ன ஆகியோரின் குழுவினர்
முன்னெடுத்த விசாரணைகளில் இது
தெரியவந்ததாக சி.ஐ.டி.யின் முன்னாள்
பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர்
ஷானி அபேசேகர கூறினார்.
உயிர்த்த ஞாயிறு ஜனாதிபதி விசாரணை
ஆணைக் குழுவில் சாட்சியமளிக்கும் போது,
அவர் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி
உபுல் குமாரப்பெருமவின் கேள்விகளுக்கு
பதிலளித்து சாட்சியமளிக்கும் போதே அவர்
இதனை வெளிப்படுத்தினார்.
‘இவ்விசாரணைகளில் மாத்தளை சஹ்ரான்
எனும் சந்தேக நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டிருந்தார். அவரே ஐ.எஸ்.ஐ.எஸ்.
தாக்குதலின் பின்னர்
தொடர்புகொண்டிருந்தமை விசாரணைகளில்
தெரியவந்தது. தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்க
அப்பயங்கரவாத அமைப்புக்கு
கோரிக்கையானது அவர் ஊடாக சென்றுள்ளது.
‘இந்த தாக்குதலுடன் ஐ.எஸ். ஐ.எஸ்.
அமைப்புக்கு நேரடி தொடர்பு இல்லை என
அப்போது விசாரணைகளில் தெரியவந்தது.
வெளிநாட்டு உளவுச் சேவைகள், விசாரணைப்
பிரிவுகள் மற்றும் இன்டர்போல் எனும் சர்வதேச
பொலிஸாரின் ஒத்துழைப்புடன்
அவ்விசாரணைகள்
முன்னெடுக்கப்பட்டிருந்தன.
எனினும் அத்தாக்குதலை நெறிப்படுத்தியவர்
யார் எனும் கேள்வி இன்றும் தொடர்கிறது.
காரணம், எந்தவொரு பயங்கரவாத
அமைப்பினதும் தலைவர் முதல் அணியிலேயே
தானும் தற்கொலை செய்துகொண்டதாக
வரலாறு இல்லை. எனவே சஹ்ரானை
இயக்கியவர் யார் என்ற கேள்வி இன்னும்
உள்ளது.’ என தெரிவித்தார்.