கொழும்பு: இலங்கையில் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் இராணுவ மருத்துவமனையில் மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு தடுப்பூசி வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 500,000 டோஸ் Oxford Astrazeneca Covishield கொரோனா தடுப்பூசிகள் நேற்று (28) இலங்கையை வந்தடைந்து.
அதற்கமைய, கொவிட்-19 கட்டுப்பாட்டில் முன்னின்று செயற்படும், சுகாதாரப் பிரிவினருக்கான தடுப்பூசி வழங்கும் திட்டம், முதலில் தேசிய தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவான, IDH மருத்துவமனையில் உத்தியோகபூர்வ நிகழ்வாக இடம்பெற்றது.
இதில், முதல் மருத்துவ அதிகாரியாக, IDH வைத்தியசாலையின், விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமவுக்கு முதலாவது தடுப்பூசி வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, மேல் மாகாணத்தின் 6 பிரதான மருத்துவமனைகளில் பணி புரியும் சுகாதார ஊழியர்களுக்கான தடுப்பூசிகள் வழங்கல் இன்று இடம்பெறுகின்றது.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் முன்னணியில் நின்று செயற்படும் சுமார் 150,000 சுகாதாரப் பிரிவு ஊழியர்கள், முப்படை, பொலிஸார் மற்றும் ஏனைய பாதுகாப்புப் படையினர்கள் 120,000 பேருக்கு முதல் கட்டமாக தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.