பரிஸ்: வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய ‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது.

வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்டு எழுதிய டிரான் டோ ங்கா என்ற 78 வயது வியட்நாமிய – பிரெஞ்சு பெண் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார்.
ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியை போரில் பயன்படுத்தியது தனக்கும் தன் குழந்தைகளுக்கும் தீங்கு விளைவித்ததாக அவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ஏஜென்ட் ஆரஞ்ச் பயன்படுத்தியதற்கு எதிராக பாதிக்கப்பட்ட குடிமக்களில் ஒருவரது வழக்கை நீதிமன்றம் விசாரணை செய்வது இதுவே முதல் முறை.
‘ஏஜென்ட் ஆரஞ்ச்‘ என்றால் என்ன?
‘ஏஜென்ட் ஆரஞ்ச்’ என்பது மிகக் கொடிய நச்சுத்தன்மை உள்ள தாவரக் கொல்லி வேதிப் பொருள்.
வியட்நாம் மீது அமெரிக்கா படையெடுத்து ஆக்கிரமித்தபோது, அதை எதிர்த்துப் போராடிய ‘வியத்காங்’ என்ற உள்நாட்டுப் படையினர் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டனர். வியத்காங் படையினர் காடுகளில் ஒளிந்திருந்தது அமெரிக்காவின் வலிமையான ராணுவத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது.
விமானத் தாக்குதல் நடத்துவதென்றால், வியத்காங்குகள் எங்கே பதுங்கியிருக்கிறார்கள் என்பது தெரியவேண்டும். ஆனால், வியட்நாமின் அடர்ந்த காடுகள் விமானத்தில் இருந்து கண்காணித்து அவர்கள் பதுங்கியிருக்கும் இடத்தைப் பார்க்கத் தடையாக இருந்தது.
அதற்காக ஏஜென்ட் ஆரஞ்ச் என்ற தாவரக் கொல்லியை அந்தக் காடுகள் மீது விமானம் மூலம் தூவியது அமெரிக்கா. இதனால், அடர்ந்து சடைத்த தாவரங்கள், மரங்கள் கருகி வியத்காங்குகள் பதுங்கியிருந்த இடங்கள் தெரியத் தொடங்கின.
1962 முதல் 1971 வரை போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாவரக் கொல்லியில், ‘டயாக்சின்’ என்ற கொடிய நச்சுப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் மிக அதிகமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த ஏஜெண்ட் ஆரஞ்ச் பயன்படுத்தப்பட்ட பகுதிகளில் புற்றுநோயும், குழந்தைகள் பிறவிக் குறைபாடுகளுடன் பிறப்பதும் அதிகரித்ததற்கு இந்த டயாக்சின்தான் காரணம் என்று கூறப்பட்டது.
பத்து லட்சக் கணக்கான மக்கள் இந்த ஏஜென்ட் ஆரஞ்ச் தாக்குதலில் பாதிக்கப்பட்டதாகவும், 1. 5 லட்சம் குழந்தைகள் மோசமான பிறவிக் குறைபாடுகளோடு பிறந்ததாகவும் வியட்நாம் கூறுகிறது.
இது வியட்நாமியர்களை மட்டுமல்ல அங்கிருந்த அமெரிக்க ராணுவத்தினரையும், அவர்களது சந்ததிகளையும்கூட கடுமையாகப் பாதித்தது.