கொழும்பு: தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலிக்கு எதிராக சி.ஐ.டி.யின் சிறப்பு
விசாரணைக் குழு விஷேட விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது. சி.ஐ.டி.யின் பிரதானி பிரதிப்
பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவின்
உத்தரவில், பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ்
அத்தியட்சகர் நிசாந்த டி சொய்ஸாவின்
ஆலோசனைக்கமைய, சி.ஐ.டி.யின் விஷேட
விசாரணைப் பிரிவு – 3 இன் பொறுப்பதிகாரி
பிரதான பொலிஸ் பரிசோதகர்
குமாரசிங்கவின் கீழ் செயற்படும் சிறப்புக்
குழுவொன்றே இவ்விசாரணைகளை
ஆரம்பித்துள்ளது.

கடந்த 5 ஆம் திகதி ஊடகவியலாளர்
சந்திப்பொன்றினை நடாத்தி, அசாத் சாலி,
‘உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்களை அடக்கம்
செய்ய அனுமதித்துள்ள நிலையில் இலங்கை
மட்டுமே அதனை மருத்துவருவதாகவும்,
அதற்கான நட்ட ஈட்டை அரசாங்கம் செலுத்த
வேண்டி வரும் எனவும் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் சட்டத்தரணி ரவீந்திர மனோஜ்
குமார பொலிஸ் தலைமையகத்தில் செய்த
முறைப்பாட்டுக்கமையவே சி.ஐ.டி.
விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கொழும்பு பிரதான நீதிவான்
மொஹம்மட் மிஹாலிடம் அறிக்கை
சமர்ப்பித்துள்ள விசாரணையாளர்கள்,
விசாரணைகளுக்கு தேவையான, அசாத்
சாலியின் குறித்த ஊடக சந்திப்பு தொடர்பில்
ஊடகங்கள் வெளியிட்ட ஒளிப்பதிவுகளின்
செம்மைப்படுத்தப்பட்ட, செம்மைப்படுத்தப்படாத
பிரதிகளை பெற்றுக்கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளது.