அம்பாறை: பாதுகாப்பு செயலாளராக தான் இருந்த போது, பித்தளைச் சந்தியில் தன்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி, புலிகளின் தலைவர் பிரபாகரன் ‘வேலை’யை ஆரம்பித்ததாகவும், பின்னர் பிரபாகரனை நந்திக் கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, தான் அதனை முடித்து வைத்ததாகவும் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
சனிக்கிழமை காலை அம்பாறை, உஹன பிரதேசத்திலுள்ள லாத்துகல கிராமத்தில் நடந்த “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசும்போது இதனைக் குறிப்பிட்டார் கோட்டாபய.
தான் எதற்கும் தயாரானவர் என்றும், ஆனால் மக்களுக்கு சேவை செய்வதே தனது தேவையாக உள்ளது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறினார்.
2009ம் ஆண்டு நடந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி யுத்தம் நந்திக்கடல் பகுதியில் நடந்ததும், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் உடல் அப்பகுதியில் கிடைத்ததாக இலங்கை அரசு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

தான் அதிகாரத்துக்கு வந்த பின்னர் – அரசியல் பழிவாங்கலில் ஈடுபடவில்லை என்று இதன்போது தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ, சட்டத்துக்கு முரணாக நடந்திருந்தால், சட்ட ரீதியாகவே அந்த விடயம் அணுகப்படும் எனவும் குறிப்பிட்டார்.