2020 ஜனவரி 01 தொடக்கம் 2020 டிசம்பர் 31 வரைக்கும் உள்நாட்டில் மற்றும் சர்வதேசரீதியிலும் முக்கியத்துவம் பெற்று முஸ்லிம்களுடன் தொடர்புபட்ட அரசியல் விவகாரங்கள் பற்றி என்னால் அலசி ஆராய்ந்து எழுதப்பட்ட செய்திகள் அல்லது கட்டுரைகளின் சுருக்கத்தினை தொடர் இலக்கத்துடன் இங்கே ஆண்டறிக்கையாக பதிவிடுகிறேன்.

ஜனவரி
01. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள உடுகும்புற பிரதேச நூர் ஜும்மாஹ் மஸ்ஜித்துக்கு சொந்தமான காணியில் கடந்த 29.12.2019 அதிகாலை இரண்டு மணிக்கு புத்தர் சிலையொன்று இமாம் தொழுகை நடாத்துகின்ற பள்ளியின் மிஹ்ராபுக்கு பின்புறமாக வைக்கப்பட்டது.
02. முஸ்லிம் தலைமைகள் சிலைவைப்பு விடயம் பற்றி அலட்டிக்கொள்ளவுமில்லை, கண்டுகொள்ளவுமில்லை. பள்ளி நிருவாகசபையின் எந்த முயற்சியும் பலனளிக்காத நிலையில், அந்த சிலை பள்ளிவாசல் வளவுக்குள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
03. ஈரானின் புரட்சிகர காவல் படையின் தளபதியான காசிம் சுலைமானி 03.01.2020 காலை ஈராக்கின் பக்தாத் விமானநிலையத்தில் வைத்து அமெரிக்காவின் ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதலினால் கொலை செய்யப்பட்டார்.
04. ஹாசிம் சுலைமானியின் கொலைக்கு பதலடியாக 08.01.2020 அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் நிலைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடாத்தியது. ஆனால் ஈரானின் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா பதில் தாக்குதல் எதுவும் நடாத்தவுமில்லை.
பெப்ரவரி
05. சினாவின் வூஹான் மாகாணத்திலிருந்து உருவான கொரோனா வைரசானது சீனா முழுவதும் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி ஏராளமான சீனர்கள் மரணித்ததுடன் உலகின் பல நாடுகளுக்கும் அது பரவ ஆரம்பித்தது.
06. இது சீனாவின் “உயிரியல் ஆயுதம்” என்று இஸ்ரேலிய விஞ்ஜானி ஒருவர் முதன் முதலாக அறிவிப்பு செய்த நிலையில் இது “சீனா வைரஸ்” என்று டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார்.
07. கொரோனாவின் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், உலக நாடுகள் சீனாவை தனிமைப்படுத்தின. அதற்காக சீனாவுக்கான விமானப்பயனத்தினை ரத்து செய்ததுடன் உலக நாடுகளில் வாழ்ந்துவந்த சீனர்கள் பெரும் அசௌகரிகங்களையும், அவமானங்களையும் எதிர்கொண்டார்கள்.
மார்ச்
08. உலகம் கொரோனா அச்சத்தில் இருந்த நிலையில், இது பற்றி எந்தவித கவலையும் இல்லாத சூழ்நிலையில் சிரியாவின் போர்க்களம் இருந்தது. ஆக்கிரமித்தல்., அதிகாரத்தை நிலைநாட்டுதல் என்பன சிரியாவின் போர்க்களத்தில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.
09. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மக்களை ஒன்றுகூட வேண்டாமென்று அரசாங்கம் வலியுறுத்தியதுடன், அதற்கு ஏதுவாக அனைத்து அரச, தனியார் காரியாலயங்களுக்கு விடுமுறை வழங்கியது.
10. அரசாங்கம் வழங்கிய விடுமுறையை உல்லாச பிரயாணத்துக்காகவும், ஒன்றுகூடலுக்காக இலங்கை மக்கள் பயன்படுத்தினர். அதனால் சுற்றுலா இடங்களில் வைரஸ் தொற்று பரவியது.
இதன் விபரீதத்தை உணர்ந்த அரசாங்கம் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்ததுடன், அதனை கடுமையாக நடைமுறைப்படுத்தி வருகின்றது.
ஏப்ரல்
11. கொரோனா வைரசுக்கான மருந்தினை உருவாக்கியுள்ளதாக கியூபா அறிவிப்பு செய்தது. ஆனால் கியூபாவின் இந்த அறிவிப்பை அமெரிக்கா நிராகரித்து.
12. கொரோனாவின் பாரிய தாக்கத்தினை அமெரிக்கா எதிர்கொண்டதுடன் அதனை சமாளிக்க முடியாமல் ரஷ்யாவின் உதவியை அமெரிக்கா கோரியது.
இக்கோரிக்கையை ஏற்று ரஷ்யா தனது விசேட மருத்துவ குழுவினர்களை அமெரிக்காவுக்கு அனுப்பியது. இதனை உலகம் வியந்து பார்த்தது.
13. உலக சுகாதார ஒன்றியத்தின் அறிவுறுத்தலை மீறி கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணிக்கின்ற அனைவரது உடல்களும் எரிக்கப்படும் என்று வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அரசாங்கம் வெளியிட்டது. இது முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை தோற்றுவித்தது.
மே
14. பாதுகாப்பு அதி உயர்மட்ட தூதுக்குழுவினர் 14.05.2020 அன்று அம்பாறை மாவட்டத்தின் சர்ச்சைக்குரிய விகாரைகளான தீகவாப்பி, மாணிக்கமடு, பொத்துவில் முகுது விகாரை போன்றவற்றுக்கு விஜயம் செய்தனர். இதுபற்றி முஸ்லிம் அரசியல் தலைமகள் எதனையும் கண்டுகொள்ளாமல் இருந்தனர்.
15. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் சமூக இடைவெளி, மாஸ்க் அணிதல் போன்ற சட்டங்களை முஸ்லிம் இளைஞர்கள் பின்பற்றவில்லை என்ற விமர்சனங்கள் நாடுதழுவியரீதியில் பிரச்சாரம் செய்யப்பட்டது.
ஜூன்
16. கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் இடங்களை இனம்கண்டு அவைகளை பாதுகாத்து நிர்வகிப்பதற்காக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனெரல் கமால் குணரத்ன தலைமையில் பன்னிரெண்டு பேர்கள்கொண்ட செயலணி ஒன்று 01.06.2020 ஆம் திகதி ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டது.
17. ஆனையிறவில் மூவாயிரம் இராணுவத்தினரை ஒரே நாளில் கொலை செய்ததாக கருணா அம்மான் தெரிவித்த கருத்தினால் இலங்கை அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
18. இந்தியா எல்லை அருகில் சீனா தனது படைகளை குவித்ததன் காரணமாக சீனா – இந்தியா ஆகிய நாடுகளுக்கிடையில் போர் பதட்டம் அதிகரித்ததனால் கொரோனா தாக்கத்தின் மத்தியிலும் உலகத்தின் கவனம் “லடாக்” எல்லையை நோக்கி திரும்பியது.
ஜூலை
19. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அமைவாக கிழக்கு மாகான தொல்பொருள் செயலணியில் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்வதாக 01.07.2020 ஆம் திகதி ஜனாதிபதி தனது முகநூளில் பதிவிட்டிருந்தார்.
20. ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி மீறப்பட்டு அஸ்கிரிய, மல்வத்து பீடங்களைச்சேர்ந்த நான்கு தேரர்கள் மேலதிகமாக கிழக்குமாகான தொல்பொருள் செயலணிக்கு நியமிக்கப்பட்டு வர்த்தமாணியில் பிரசுரிக்கப்பட்டது. இது சம்பந்தமாக முஸ்லிம் தலைவர்கள் எவரும் வாய்திறக்கவில்லை.
21. இலங்கையின் பொது தேர்தல் சூடுபிடித்திருந்ததனால், தேர்தலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில், அம்பாறை மாவட்ட தமிழ் இளைஜர்களை எப்படியெல்லாம் கவர முடியுமோ அவ்வாறெல்லாம் கவர்வதற்காக முஸ்லிம் என்ற துரும்பை கையில் எடுத்து மேற்கொண்ட கருணா அம்மானின் தேர்தல் பிரச்சாரம் தேசியரீதியில் கவனம் செலுத்தப்பட்டது.
22. தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்பதற்காக சில முஸ்லிம் வேட்பாளர்கள் சாராயம் விநியோகித்ததாகவும், இன்னும் சில வேட்பாளர்கள் அரிசி, பணம் என்ற இலஞ்சம் வழங்கியதாகவும் சர்ச்சைகள் எழுந்தது.
ஓகஸ்ட்
23. 05.08.2020 அன்று நடைபெற்ற பொது தேர்தலில் பல வரலாற்று நிகழ்வுகள் நடைபெற்றது. அதாவது முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரம் தென்னிலங்கையில் வெற்றியடைந்ததன் காரணமாக பொதுஜன பெரமுனவும், அதன் துணை கட்சிகளும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
24. முஸ்லிம் காங்கிரசின் வரலாற்றில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்த தேர்தலாக இது விமர்சிக்கப்பட்டது. தங்களது கொள்கையினை இழந்தநிலையில் தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி சார்ந்தவர்களோடு முஸ்லிம் காங்கிரஸ் பயனிப்பதுவே இதற்கு காரணமாகும்.
25. இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பிரிந்து போட்டியிட்டதன் காரணமாக, தலைவர் ரணில் விக்கிரமசிங்க தோல்வியடைந்தார். இது ஏனைய கட்சி தலைவர்களுக்கு வரலாற்று பாடமாக அமைந்தது.
26. பொதுஜன பெரமுனவின் துணை கட்சிகளான தேசிய காங்கிரஸ், ஈ.பி.டி.பி ஆகியன தனித்து போட்டியிட்டிருந்தது. ஆனால் டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தும் அதாஉல்லாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படாதது விமர்சனத்தை உண்டுபண்ணியது.
27. அலி சப்ரி அவர்களுக்கு நீதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. பதவியேற்ற உடனேயே பத்தொன்பதாவது அரசியலமைப்பை திருத்தம் செய்யப்போவதாகவும், முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்ற போவதாகவும் நீதி அமைச்சரின் அறிவிப்பானது சர்ச்சையை ஏற்படுத்தியது.
28. அமைச்சரவை பதவியேற்பு வைபவத்தின்போது தேசியக்கொடிக்கு பதிலாக தமிழ், முஸ்லிம் மக்களை அடையாளப்படுத்தும் மஞ்சள், பச்சை நிறங்கள் நீக்கப்பட்டு வடிவமைக்கப்பட்ட சிங்கக்கொடி பறக்கவிடப்பட்டிருந்தது. இதனை தமிழ் தலைவர்கள் கண்டித்தார்கள் ஆனால் முஸ்லிம் தலைவர்கள் எவரும் இதனை கண்டுகொள்ளவில்லை.
29. கொரோனா வைரசின் தாக்கத்தினால் மரணித்த முஸ்லிம் ஜனாசாக்கள் தொடர்ந்து எரிக்கப்பட்டுக்கொண்டே வந்தது. ஆனால் இதுபற்றி முஸ்லிம் தலைவர்களோ, மக்கள் பிரதிநிதிகளோ எவரும் கண்டுகொள்ளாத நிலையில் தங்களது வழக்கமான அரசியலையே செய்து வந்தார்கள்.
செப்டம்பர்
30. பௌத்த நாடான இலங்கையில் மாடறுப்பதனை தடை செய்வது குறித்த யோசனையை பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் முன்வைத்திருந்தார். இது முஸ்லிம்கள் மத்தியில் கொந்தளிப்பினை ஏற்படுத்தியதுடன் தென்னிலங்கை இனவாதிகள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருந்தது.
31. மாடறுப்பதனை தடை செய்யும் யோசனை அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றபின்பு சட்டமாக்குவதற்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டால், அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்லப்போவதாக சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர் மிக அழுத்தமாக கூறினார்கள்.
32. சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் மொகமத் பின் சல்மான் இரண்டு வருடங்களுக்கு முன்பு இரகசியமாக இஸ்ரேலுக்கு சென்று வந்ததை 2020..09.12 இல் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
33. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வன்னி மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டமை மற்றும் கட்சியின் தோல்வி பற்றி ஆராய்ந்து அறிக்கை சமர்பிப்பதற்காக நான்கு பேர்கள் கொண்ட குழு ஒன்று 11.09.2020 இல் நடைபெற்ற அதி உயர்பீட கூட்டத்தில் நியமிக்கப்பட்டது.
34. இருபதாவது திருத்தம் பற்றி பேசப்பட்டுவந்த நிலையில், விழுந்தடித்துக்கொண்டு அறிக்கை விடுகின்ற முஸ்லிம் அரசியல் தலைவர்கள் எவரும் இருபதாவது பற்றி உறுதியாக எதனையும் கூறாதது முஸ்லிம்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
35. தியாகி திலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கு அரசாங்கம் தடை விதித்தது. இதனை கண்டித்து அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், அமைப்புக்களும் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிரான எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தது.
ஒக்டோபர்
36. யுத்தம் நடைபெற்ற காலத்தில் தமிழர்களிடமிருந்து முஸ்லிம் மக்களை பிரிப்பதில் அன்றைய ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் இயந்திரம் பல சூழ்சிகள் செய்ததென்று ரணில் விக்ரமசிங்க சாட்சியம் வழங்கினார்.
37. இருபதாவது அரசியலமைப்பு திருத்தம் செய்வதற்கு சில சரத்துக்களை சேர்த்துக்கொள்வதென்றால் சர்வர்ஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டுமென்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
38. புத்தளத்திலிருந்து மக்களை அரச பேரூந்துகளில் வன்னிக்கு அழைத்துச் சென்றார் என்ற குற்றச்சாட்டில் மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீனை கைது செய்வதற்காக தேடப்பட்டு வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.
39. இறை தூதர் முஹம்மது நபி அவர்களை கேலி சித்திரம் வரைந்து மாணவர்களுக்கு கற்பித்த சாமுவேல் என்னும் வரலாற்று ஆசிரியர் ஒருவர் 17.10.2020 பிரான்சின் தலைநகரான பாரிசில் முஸ்லிம் மாணவர் ஒருவரினால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
40. இந்த கேலிச்சித்திரம் வரைந்த ஆசியருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்ததன் காரணமாக பிரான்ஸ் அதிபருக்கு எதிராக கண்டனங்கள் வலுவடைந்ததுடன், இஸ்லாமிய நாடுகளில் பிரான்சின் பொருட்களை புறக்கணிப்பு செய்தனர்.
41. சீயா, சுன்னி என்றும், அரபி, அரபியல்லாதவர் என்ற எந்தவித பிரிவினைகளும் இல்லாமல் உலகில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் ஒன்றுபட்டு இந்த போராட்டத்தினை மேற்கொண்டதனை காணக்கூடியதாக இருந்தது.
42. முன்னாள் கிரிக்கட் சுழல்பந்து வீச்சாளர் முத்தைய்யா முரளீதரனின் வாழக்கை வரலாற்றை ‘800” என்ற தமிழ் திரைப்படம் எடுப்பதற்கு முரளீதரனின் பாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதற்காக இருந்தது.
43. தமிழின துரோகியான முரளீதரன் என்ற சர்ச்சை வலுவடைந்து தமிழகம் எங்கும் போராட்டம் வெடித்ததன் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.
44. 19.10.2020 இல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
45. 20.10.2020 அன்று இரு தரப்புக்களுக்கிடையில் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் அகப்பட்டு பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துற மதுஸ் என்பவர் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்தது.
46. 21.10.2020 இல் நடைபெற்ற இருபதாவது திருத்த சட்டத்தை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்ததன் காரணமாக அந்த சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமனறத்தில் நிறைவேற்றப்பட்டது.
47. இருபதுக்கு ஆதரவளித்ததனால் ஏற்பட்ட சர்ச்சையின் காரணமாக, தான் சூழ்நிலை கைதியாக உள்ளதாக தலைவர் கூறிய நிலையில், தலைவரின் அனுமதியுடனேயே தாங்கள் இருபதை ஆதரித்ததாக முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூறினார்கள்.
48. முஸ்லிம் உறுப்பினர்கள் இருபதாவது திருத்த சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிக்க உள்ளார்கள் என்ற செய்தி முன்கூட்டியே கசிந்ததன் காரணமாக பொதுஜன பெரமுன கட்சிக்குள் ஏற்பட இருந்த பிளவு தடுக்கப்பட்டது.
49. அமெரிக்கா, இலங்கை ஆகிய இரு நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பொம்பியோ அவர்கள் 28.10.2020 இல் இலங்கைக்கு அவசரமாக வந்து திரும்பினார். இவரது விஜயத்திற்கு இலங்கையில் உள்ள சீன தூதரகம் கண்டனத்தை வெளியிட்டிருந்தது.
நவம்பர்
50. உலக நாடுகளில் கொரோனாவின் தாக்கம் ஏற்படுத்தியிருந்தாலும், உலகத்தின் கவனம் அனைத்தும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலை நோக்கியே இருந்தது.
51. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டதுபோன்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தோல்வியடைந்த நிலையில், ஜோ வைடன் வெற்றியடைந்தார். ஆனாலும் ஜனாதிபதி ட்ரம்ப் இன்று வரைக்கும் தனது தோல்வியினை ஏற்றுக்கொள்ள மறுத்துவருகின்றார்.
52. நான்கு வருட ட்ரம்பின் ஆட்சியில் சர்வதேச ரீதியில் அமெரிக்கா தனது செல்வாக்கினை இழந்து பின்னடைவை சந்தித்துள்ளதாக ஆய்வாளர்கள் கூறிவருகின்றார்கள்.
53. அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேசத்தின் மாட்டுப்பளை குறிஞ்சாப்பிட்டியில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான 100 ஏக்கர் உறுதிப்பத்திரமுள்ள காணிகளை வனப்பாதுகாப்பு திணைக்களம் சுவீகரிக்க எடுத்த முயற்சி தற்காலிகமாக தடுத்து நிறுத்தப்பட்டது.
54. 21.11.2020 இல் நடைபெற்ற வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் மக்கள் காங்கிரஸ் தலைவர் சிறையில் இருக்கத்தக்கதாக அவரது கட்சி உறுப்பினர்கள் ஆதரவாகவும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எதிராக வாக்களித்த நிலையில், அவரது கட்சி உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாத வினோத நிகழ்வும் நடைபெற்றது.
55. 27.11.2020 ஈரானின் பிரதம அணு விஞ்ஜானி மொஹ்சன் பக்ரிசாதி அவர்கள் அமெரிக்காவின் கூலிப்படைகளான யூதர்கள் மூலமாக ஈரானில்வைத்து கொலை செய்யப்பட்டார். இவரது கொலையில் சவூதி அரேபியாவின் அனுசரணையும் இருந்ததாக ஈரான் தரப்பிலிருந்து குற்றச்சாட்டப்பட்டது.
டிசம்பர்
56. முஸ்லிம்களின் ஜனாசாக்கள் எரிக்கப்படுவதற்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாணாக்கியன் ராசமாணிக்கம் அவர்கள் 05.12.2020 இல் பாராளுமன்றத்தில் ஆற்றிய உணர்வுபூர்வமான உரை முஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பினை பெற்றிருந்தது.
57. முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிப்பதா ? புதைப்பதா ? என்பதனை சுகாதார துறையினரே தீர்மாணிப்பார்கள் என்று அரசாங்கம் அறிவித்த நிலையில், புதைக்க கூடாது என்று தென்னிலங்கை இனவாதிகள் அரசாங்கத்திற்கு வெளிப்படையாக அழுத்தம் வழங்க ஆரம்பித்தனர். இந்நிலையில், முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பு விவகாரம் உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் எதிர்ப்பலைகள் வெளிப்பட துவங்கியது.
58. ஜனாஸா எரிப்புக்கு எதிராக நீதியை வேண்டி செய்யப்பட்டிருந்த வழக்கானது விசாரணைக்கே எடுக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்பட்டது.
59. முஸ்லிம்களின் ஜனாஸா எரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாங்கத்தின் அராஜக செயலை கண்டித்தும் கொழும்பு பொரளை கனத்தைக்கு முன்பாக 23.12.2020 இல் கவன ஈர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இது இன, சமைய, மொழி, கட்சி, அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பெரும்திரளான மக்கள் ஒன்றிணைந்து கலந்துகொண்டார்கள்.
60. எத்தனை அழுத்தங்கள் வழங்கியிருந்தும் ஜனாஸா எரிப்பு விடயத்தில் அரசாங்கம் கருத்தில்கொள்ளாத காரணத்தினால் 31.12.2020 அன்று சிலோன் தௌஹீத் ஜமாஅத்தினர்கள் தலைமையிலான இயக்கங்கள் ஒன்றிணைந்து ஜனாஸா எரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொரல்லையில் பாரிய ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டார்கள்.
முகம்மத் இக்பால், சாய்ந்தமருது