கொழும்பு: முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அலி சாஹிர் மெளலானா தனது இராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ள விடயங்கள் நியாயமானவை எனவும் அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்த எம்.பிகள் தொடர்பில் கட்சி உயர்மட்ட குழுவும் அதிஉயர் பீடமும் கூடி இறுதி முடிவு எடுக்கும் எனவும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா கட்சி உறுப்புரிமையில் இருந்து இராஜினாமா செய்வதாக கட்சி தலைவருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.அவரின் இராஜினாமாவை அவர் ஏற்றுக்கொள்ளவோ நிராகரிக்கவோ இல்லை எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்கள் மீதும் சமூகம் மீதும் கரிசனை இல்லாத நிலையில் கட்சியில் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்று தெரிவித்து அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.அரசுக்கு ஆதரவு தெரிவித்த எம்.பிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீம்,
அவரின் கடிதம் கிடைத்துள்ளது.நியாயமான விடயங்களை அவர் முன்வைத்துள்ளார்.கட்சி நலனுக்காக சில முடிவுகள் எடுத்திருந்தோம்.அரசுக்கு ஆதரவு வழங்கிய எம்.பிகள் தொடர்பில் ஆராய உயர்மட்ட குழுவும் அதி உயர் பீடமும் கூடி ஆராய்ந்து அடுத்த கட்ட முடிவு குறித்து தீர்மானிக்கும் என தெரிவித்துள்ளார்.