மண்ணைவிட்டுச் சென்று 15ஆண்டுகள் 2005.12.04-2020.12.04
உலகில் பலர் உருவாகலாம் அவர்களுள் சிலரே உத்தமர்கள் ஆகின்றனர். பிறப்பு ஒரு சம்பவம் ஆனாலும் இறப்பு ஒரு சரித்திரம் ஆகவேண்டும் என அணு விஞ்ஞானி அப்துல் கலாம் குறிப்பிடுகின்றார்.
அந்தவகையில் மர்ஹூம் ஏ.எல்.எம்.பளீல் நற்பிட்டிமுனையின் ஒரு சரித்திர புருஷன்.
அன்னாரை இன்றுவரை மக்கள் மனதில் சுமக்கின்றனர். மண்ணை விட்டு மறைந்தாலும் மனதை விட்டு அகலாத மனிதராய் இன்னும் நினைவுகூரப்படுகிறார். நற்பிட்டிமுனை மண்ணின் பெயரை நாடெல்லாம் பறைசாற்றிய பெருந்தகையை எழுதுவதற்கு இந்த முகநூல் போதாது. இன்றிருக்கின்ற இளஞ்சந்ததிகள் அறிந்து கொள்வதற்காகவும் நற்பிட்டிமுனையும் உயர்ந்தவர்கள் வாழ்ந்த உத்தம பூமி என புரிந்து கொள்வதற்காகவுமே இந்தப் பதிவு…
1965.01.01ல் நற்பிட்டிமுனையில் பிறந்த பளீல் சிறு வயது முதல் கல்வியில் ஆர்வம் காட்டினார். தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை வரை நற்பிட்டிமுனை அல் அக்ஸா ம.வி.ல் கல்விகற்று முதல் தர மாணவனாக திகழ்ந்த அவர் தரம் ஆறிலிருந்து உயர்தரம் வரை கல்முனை கார்மேல் பாத்திமாக் கல்லூரியில் கற்றுயர்ந்தார்.
உயர்தரத்தில் விஞ்ஞானாப் பிரிவில் கற்ற பளீல் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி விஞ்ஞானப் பட்டதாரியாக வெளியேறி தான் உயர்தரம் கற்ற பாடசாலைக்கே ஆசிரியராக நியமனம் பெற்றார்.
தான் கற்ற காலத்தில் எவ்வாறு திறமையான மாணவராகக் காணப்பட்டாரோ அவ்வாறு தான் கற்பித்த காலத்திலும் திறமையான ஆசிரியராகத் திகழ்ந்தார். இதனை இன்றும் அவருக்கு கற்பித்த ஆசிரியர்களிடத்திலும் அவர் கற்றுக் கொடுத்த மாணவர்களிடத்திலும் கேட்டறிந்து கொள்ளலாம்.
“Botany Faleel ” என்று பிரபலமாகும் அளவிற்கு மாணவர்கள் மத்தியில் தாவரவியல் பாடத்தினை இலகுவாக விளங்கும் அளவிற்கு கற்பித்தார்.
ஆசிரியர்களை உளமார மதித்தார் நேசித்தார்.
தனது ஆசிரியர் ஸ்ரிபன் மத்தியு அவர்கள் வேண்டியதற்கிணங்க தான் நிருவாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டதிலிருந்து இறுதிவரை white & white உடையினையே அணிந்தார்.
எந்த நேரமும் அவர் ஏதாவது எழுதிக்கொண்டும் படித்துக்கொண்டுமே இருப்பார். தன்னைத் தேடிவரும் அனைவருடனும் அன்பாக பழகக் கூடிய அவர் படிக்கும் படியே ஆலோசனை கூறுவார் “படி…படி… இல்லையேல் செத்து மடி…” என்றும் “
“படித்துச் செத்தவன் பாரில் யாருமில்லை” ஆகவே சாகும் வரை படி.. ” எனப் படிப்போரை ஆர்வமூட்டிக் கொண்டே இருப்பார்.
சிறுவயது முதல் சமூகசேவை அமைப்புக்களை உருவாக்கி அதன் தலையவராகவும் இருந்து தான் சார்ந்த சமூகத்திற்கு பல்வேறு பட்ட சேவைகளை ஆற்றினார்.

சர்வோதயம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் சர்வோதய பாலர் பாடசாலையை நிறுவி ஊரின் அடிப்படைக்கல்வியில் அக்கறை செலுத்தினார்.
மாணவர்களும் அரச உத்தியோகத்திற்கு செல்வோரும் பயன்பெறும் வகையில் பொது உழச் சார்வு, பொது விவேகம், பொது அறிவு, தெரிந்திருக்க வேண்டிய சட்டங்கள் எனப் பல நூல்களை அவரது ஆயிரம் வேலைப்பழுக்களுக்கு மத்தியிலும் எழுதினார்.
புத்தகங்களை அச்சிடுவதற்கென அச்சகம் ஒன்றினையும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தில் பங்களிப்பு செய்யக் கூடிய பல நூல்களை பல பிராந்தியங்களில் இருந்து வரவழைத்து “Book World ” என்ற புத்தகக் கடையினையும் கல்முனை நகரில் உருவாக்கி இப்பிரதேச மக்கள் பயன் பெறும் வகையில் வழிவகுத்தார்.
பன்முக ஆழுமை கொண்ட பளீல் விளையாட்டுத் துறையிலும் கவனம் செலுத்தினார். வேலியன்ஸ் விளையாட்டு கழகத்தினை உருவாக்கி அவரது அந்திம காலம் வரை மாலையில் விளையாடும் பழக்கத்தினை கொண்திருந்ததோடு மட்டுமல்லாமல் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதான உருவாக்கத்திலும் பல்வேறுபட்ட சவால்களுக்கு முகம் கொடுத்து வெற்றி கண்டார்.
இலக்கியத்துறையிலும் பளீல் தனக்கென தனி இடத்தினை பேணி வந்தார். தான் படிக்கின்ற காலத்திலிருந்து இலக்கிய இரசனை கொண்டவராக திகழ்ந்த அவர் “மெல்லச்சாகும் வாலிபம்” எனும் சிறுகதைத் தொகுதியினையும் “மடிக்குள் விழுந்த வெள்ளிகள்” எனும் கவிதைத் தொகுதியினையும் வெளியிட்டதோடு மட்டுமல்லாமல் “சொந்தமில்லா நினைவுகள்” எனும் பல்கலைக்கழக அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு தொடர் நாவல் ஒன்றை எழுதினார். இத்தொடர் வாரம் தோறும் பத்திரிகையில் வெளிவந்தது. ஆனாலும் அது நூலுருப் பெறவில்லை என்பது வேதனைக்குரிய விடையமாகும்.
சொந்த ஊரைச் சொல்வதில் வெட்கப்படுபவர்கள் பலர் இருந்த காலத்தில் தனது பெயருக்கு முன்னாலே “நற்பிட்டிமுனை பளீல்” என தனது ஊரை பிரபலப்படுத்தி நாடு முழுவதும் வலம்வந்தார்.
ஆசிரியர் சேவையில் இருந்த பளீல் 1991.04.01ல் இலங்கை நிருவாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டு கல்முனை உதவி அரசாங்க அதிபர் ஆனார். இவரே நற்பிட்டிமுனையின் முதலாவது SLAS பரீட்சையில் சித்தியடயந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கல்முனை பிரதேச செயலாளராகவும் கல்முனை மாநகர சபையின் விசேட ஆணையாளராகவும் செயற்பட்ட போது பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தார். தான் மேலதிகாரியாக கடமை புரியும் காரியாலயத்திலே அவருக்கெதிரான சதித்திட்டங்கள் பல தீட்டப்பட்டன. ஒரு இலிகிதரை இடமாற்றம் செய்தமைக்காக பாராளுமன்றம் வரை பேசப்பட்டார். உள்ளிருந்த துரோகிகளால் அவர் துவம்சம் செய்யப்பட்டமையே அவரது வாழ்கையில் மறக்கமுடியாத சம்பவமாக இருந்திருக்க வேண்டும் என நினைக்கின்றேன்.
எதையும் திட்டமிட்டு செய்யும் திறனை இயற்கையாக வளர்த்துக்கொண்ட அவர் எதனையும் முன்னின்று செயற்படுத்துவதில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். காரியாலயத்தில் கடமையாற்றும் போது ஒரு நாளைக்கு ஒரு பேனாவால் எழுதுவதையும் அந்தப் பேனாவைக் கொண்டே தனது நாட்குறிப்பினை எழுதுபவராகவும் திகழ்ந்தார். இந்த செயற்பாடு ஏமாற்றும் உலகில் ஏமாறக் கூடாது என்ற வாழ்க்கைத் தத்துவத்தினை உணர்த்தி நிற்கிறது.
அவரது முன்னேற்ற கரமான நிகழ்வுகள் அத்தனையையும் முதலாம் திகதியிலேயே ஆரம்பித்தார்.
அந்தவகையில் அவரது திருமணம்கூட 1993.05.01லேயே இடம்பெற்றது. பதவியுயர்வு, இடமாற்றம் அத்தனையும் முதலாம் திகதியிலேயே ஆரம்பித்ததன் மூலம் தன்னை ஒரு முதன்மையானவராங் காட்டிக் கொண்டார்.
சிறிதுகாலம் அம்பாரைக் கச்சேரியில் கடமை பரிந்த பளீல் காத்தான்குடி பிரதேசசெயலகத்திற்கு இடமாற்றம் பெற்று சென்று அங்கும் அம்மக்கள் போற்றும் வண்ணம் பணி செய்தார்.
அங்கும் எதிரிகள் அவருக்கு குறையவில்லை. அவரது வாழ்க்கை தொடர்ந்து சவால் நிறைந்ததாகவே காணப்பட்டது.
அது ஒரு வெள்ளிக்கிழமை 2005.12.02ம் திகதி மதியம் 12.40 காரியாலய கடமையில் அவர் மூழ்கி இருந்தார். ஜும்ஆ நாள் என்பதால் காரியாலயம் காலியாய் கிடந்தது. பளீல் சேர் ஜும்ஆவிற்கு தயாராகிக் கொண்டிருந்தார் அந்த நேரமாப்பார்த்து கயவர்கள் கண்ணாடி யன்னல் ஊடாக கன்னம் வைத்தனர்.
துப்பாக்கி சன்னங்களை தோள் புயத்திலிருந்து ஊடறுத்து நெஞ்சுக்குழி ஊடாக செலுத்தி உயிர் பிழிந்தனர். நடந்து சென்றே தனது வாகனத்தி்ல் ஏறி மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலைக்கு சென்ற பளீல் சேர் சூடுபட்ட வேதனையைகூட பொருட்படுத்தாமல் தன்னை எதிர்கொண்டோரை புன்னகையால் வரவேற்கத் தவறவில்லை.
2005.12.04ல் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அவரது உயிர் பிரிந்தது. ….
மரணித்தும் மறக்க முடியாத மனிதராய் மனதிற்குள் வாழும் பளீல் சேர்…
அன்னாரது பாவங்களை மன்னித்து உயர்ந்த சுவர்கத்தினை பரிசளித்துவிடு யாஅல்லாஹ்….
– Riyas– Prince College