உடதலவின்ன படுகொலைக்கு 19 வருடங்கள்! மு.காங்கிரசின் பெயரால் உல்லாசம் அனுபவிக்கின்றவர்களுக்கு இது தெரியுமா ?

முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்காக இரத்தம் சிந்தியும், உயிரை அர்பநித்தும், சொத்துக்களை இழந்தவர்களும் ஏராளம். அன்று சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த பலர் இன்று கோடீஸ்வரர்களாகவும், அந்தஸ்தில் உயர்ந்தவர்களாகவும் கான்பிப்பதென்றால் அதற்கு அடிமட்ட போராளிகளின் தியாகமே காரணமாகும்.

இந்த பயணத்தில் உடதலவின்ன படுகொலைக்கு இன்று 19 வருடங்கள் கடந்துள்ளன. கட்சியினால் நன்றாக அனுபவித்து இன்று உல்லாசமாக வாழ்ந்துகொண்டிருக்கின்ற எத்தனை பேருக்கு இது நினைவிருக்கின்றதோ தெரியவில்லை. 

கண்டி மாவட்டம் உடதலவின்ன பிரதேசத்தில் 2001.12.05தேர்தல் தினமான நோன்பு பத்தொன்பதில் தலைவர் ரவுப் ஹக்கீமுக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பன்னிரெண்டு முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் சுட்டு கொலை செய்யப்பட்டார்கள்.  

இன்று முஸ்லிம்கள் மத்தியில் பல கட்சிகள், தலைவர்கள் இருந்தாலும், அன்று இவர்கள் அனைவரும் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர்கள்.    

2001 இல் அன்றைய ஆட்சி கவிழ்ப்புக்கு ரவுப் ஹக்கீம் உடந்தையாக இருந்தார். அதனாலேயே திடீர் பொது தேர்தலுக்கு வழிவகுத்தது என்ற காரணத்தினால் அவரை பழி வாங்கும் நோக்கிலேயே இந்த படுகொலை நடைபெற்றதாக அன்றைய பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருந்தது. 

கச்சேரிக்கு எடுத்துச் செல்லப்படும் வாக்கு பெட்டிகளை கண்காணிக்கும் பொருட்டு, பதின்மூன்று போராளிகளுடன் டொல்பின் வேன் ஒன்றில், வாக்குப்பெட்டிகளுடன் சென்ற பஸ்வண்டியினை பின்தொடர்ந்தார்கள். இவர்கள் சென்ற வாகனத்தில் இடநெருக்கடி காரனமாக ஒருவர் இடையில் இறங்கிவிட்டார். 

ரமழான் மாதம் என்பதனால், தாங்கள் நோற்ற நோன்பினை திறப்பதற்கு தங்களுக்கு அவகாசம் இருக்காது என்றும், இது தங்களது இறுதிப்பயணம் என்றும் அந்த போராளிகளால் ஊகித்திருக்க வாய்ப்பில்லை. 

பின்தொடர்ந்தவாறு சென்று கொண்டிருக்கையில், சிவில் உடையில் ஆயுதம் தரித்த சிங்கள காடையர்கள் சிலர் போராளிகளின் வாகனத்தினை பின்தொடர்ந்து அச்சுறுத்தல் விடுத்தார்கள். 

நிராயுதபாணிகளான இவர்கள் இந்த நிலைமையில் தங்களை காப்பாற்றிக்கொள்ளும் பொருட்டு குறுக்குப்பாதையூடாக கண்டி கச்சேரியை அடைவதற்கு வாகனம் செலுத்தப்பட்டது. சன நடமாட்டம் இல்லாத அந்த பாதை, பின்தொடர்ந்துவந்த ஆயுததாரிகளுக்கு மிகவும் சாதகமாக அமைந்தது. 

போராளிகளின் வாகனத்தினை நோக்கி ஆயுததாரிகள் துப்பாக்கி பிரயோகம் செய்தனர். இதனால் தொடர்ந்து வாகனத்தினை ஓட்டமுடியாமையினால் ஒரு மின் கம்பத்தில் மோதுண்டு வாகனம் நிறுத்தப்பட்டது.

பின்பு வாகனத்தினை சுற்றி வளைத்துக்கொண்ட ஆயுததாரிகள், தங்களது மனித வேட்டைக்கு இவ்வளவு இலகுவாக அகப்படுவார்கள் என்று நினைத்திருக்க வாய்ப்பில்லை. எவரும் தப்பிச்செல்ல முடியாத நிலைமை அங்கு காணப்பட்டது. 

பின்பு ஒவ்வொரு போராளியையும் அடித்து கொடுமைப்படுத்திவிட்டு வாகனத்தில் இருந்து வெளியே எடுத்து தங்களது துப்பாக்கியால் ஒவ்வொருவராக சுட்டார்கள். அதில் அஸ்வர் என்னும் போராளியின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டதில் அவரது தலையின் பின்பக்கம் சிதறியது.

அனைவரும் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்பதனை உறுதிப்படுத்தியபின்பு வாகனத்துக்குள் வெடிகுண்டினை பொருத்திவிட்டு, கொலைகாரர்கள் அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றார்கள். இந்த சம்பவம் நடைபெறும்போது மாலை ஐந்து மணியாகும். 

இந்த சம்பவத்தின் பிரதான கொலை சந்தேக நபர்களாக அன்றைய பாதுகாப்பு பிரதி அமைச்சர் அனுருத்த ரத்வத்தவும், அவரது புதல்வர்களான லொகான் ரத்வத்த, சாணுக ரத்வத்த ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள். இவர்கள்தான் கொலையாளிகள் என்ற ஆதாரங்கள் இருந்தும், இறுதியில் இம்மூவரும் நிரபராதிகள் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்கள்.  

முஸ்லிம் காங்கிரஸ் வரலாற்றில் இது ஓர் துன்பகரமான நிகழ்வாகும். இவ்வாறான சம்பவங்களை கட்சியின் தலைவர் உற்பட இன்று கட்சியின் பெயரால் உல்லாசம் அனுபவித்து வருகின்ற எத்தனை பேர்கள் நினைவில் வைத்துள்ளார்கள் ? அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் ஏதாவது நன்மைகள் அடைந்தார்களா ? அல்லது நினைவு கூறப்பட்டார்களா ? என்பது பற்றி எதுவும் தெரியவில்லை.  

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s