ஏமாந்தது யார் ? ராஜபக்சாக்களுக்கு ஜால்ரா அடிப்பதனால் நன்மைகள்யாருக்கு ?

தென்னிலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்துக்களை முன்வைத்து அப்பாவி சிங்கள மக்களின் உணர்வுகளை உசுப்பேத்தியே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதனை மறைப்பதற்கு எதுவுமில்லை.

ராஜபக்ச அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்துவதற்காக சிங்கள இனவாத குழுக்களும், இயக்கங்களும், பௌத்த அமைப்புக்களும் இரவு பகலாக உழைத்தார்கள்.

அவ்வாறு உழைத்த சிங்கள இனவாதிகளை திருப்திப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிராக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற பிரச்சாரத்தின் மூலம் முஸ்லிம்களின் தனித்துவ உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது. 

கொரோனாவினால் மரணித்த முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதன் மூலம் தங்களால் வளர்த்தெடுக்கப்பட்ட இனவாதிகளை திருப்திப்படுத்திய அரசாங்கமானது அதிலிருந்து விலக முடியாத சூழ்நிலைக் கைதியாக மாறியது. 

ஜனாஸா எரிப்புக்கு எதிராக உள்நாட்டைவிட சர்வதேச ரீதியில் எதிர்ப்பலைகள் அதிகரித்ததன் காரணமாக அமைச்சரவை தீர்மானத்தின் மூலமாக ஒரு தீர்வை மேற்கொள்வதாக ஒரு நாடகமாடியது. 

அது சர்வதேசத்தினை சமாளிக்கும் நாடகம் என்பதனை புரிந்துகொள்ளாத சிங்கள இனவாத இயக்கங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு எதிராக வீதியில் இறங்கி போராடப்போவதாக மிரட்டினார்கள். இனவாதிகளின் இந்த அச்சுறுத்தலுக்கு பணிந்த அரசாங்கம், சுகாதார தரப்பின் பக்கம் காயை நகர்த்தியது. 

அதாவது சுகாதாரத்துறை சார்ந்த நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரம் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்ததுடன் கதையை முடித்துக்கொண்டது.

இலங்கையின் வரலாற்றில் அரசியல் அதிகாரத்தினை தாண்டி நிபுணர்களின் கையோங்கிய வரலாறுகள் இல்லாத நிலையில், சில நேரம் இனவாதிகளிடமிருந்து தப்பிப்பதற்காக அரசாங்கம் இவ்வாறு தீர்மானித்திருக்கலாம் என்று நம்பினோம். 

ஆனால் ஜனாஸாக்களை புதைப்பதன் மூலம் நிலத்தடி நீர் மாசடையும் என்று நிபுணர் குழுக்கள் விழுந்தடித்துக்கொண்டு அறிக்கை வெளியிட்டார்கள். 

இந்த நிலையில் ஜனாஸா எரிப்புக்கு எதிராக நீதி கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. முஸ்லிம்களின் கோரிக்கைக்கு செவிமடுக்கும் நோக்கிலும், தன்னால் வளர்க்கப்பட்ட இனவாதிகளிடமிருந்து தப்பிப்பதற்காகவும் அரசாங்கம் விலகியிருக்கும் என்றுதான் எதிர்பார்த்தோம். 

அரசாங்கம் இதில் தலையிடாமல் விலகியிருந்தால், சில நேரம் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டு அது முஸ்லிம்களுக்கு சாதகமாக அமைந்திருக்கலாம். அதற்கான போதிய ஆதாரங்களும் இருந்தது. 

ஆனால் வழக்கினை விசாரணைக்கே எடுக்காமல் தள்ளுபடி செய்ததானது அரசாங்கம் சிங்கள இனவாதிகளுக்கு நடிக்கவில்லை. மாறாக இதயசுத்தியுடன் நடந்துகொள்கின்றார்கள் என்பது புலனாகின்றது. 

எனவே நாங்கள் இன்னமும் அரசாங்கத்தை நம்புவதும், அவர்களை பாராட்டுவதும், அவர்களுக்கு ஜால்ரா அடிப்பதும், பிறந்தநாள் கொண்டாடுவதும், பிரார்த்தனைகள் செய்வதும் தங்களது தனிப்பட்ட எதிர்பார்ப்பினை நிறைவேற்றலாமே தவிர, சமூகத்திற்காக எதனையும் பெற்றுவிட முடியாதென்பது மறைக்கமுடியாத உண்மையாகும்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s