கொழும்பு: கொவிட்-19 தொற்றிய நிலையில் மரணித்தவர்களின் சடலங்களை, அவர்களது உறவினர்கள் அல்லது பாதுகாவலர்களால் ஏற்கப்படாவிடின், அவற்றை அரசாங்க செலவில் தகனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இதனை அறிவித்துள்ளார்.
இவ்வாறு ஏற்கப்படாத சில சடலங்கள், வைத்தியசாலைகளின் பிரேத அறையில் தேங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு அறிவிக்கப்பட்டதற்கு அமைய, அவ்வாறான சடலங்களை, சுகாதார மற்றும் சட்ட ஆலோசனைகளுக்கு அமைய, உடனடியாக அரசாங்க செலவில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு, அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதற்கான செலவுகள், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க சுட்டிக் காட்டியுள்ளார்.