லங்கா ப்ரீமியர் லீக் இன்று ஆரம்பமாகிறது

கொழும்பு: லங்கா ப்ரீமியர் லீக்கின் முதல் போட்டியில், கொழும்பு கிங்ஸ் அணி கண்டி டஸ்கர்ஸ் அணியை இன்று 26ஆம் திகதி பிற்பல் 7.30 மணிக்கு அம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன.

இலங்கையில் முதன்முறையாக நடைபெறவுள்ள லங்கா ப்ரீமியர் லீக் ரி 20 கிரிக்கெட் தொடரில் களமிறங்கவுள்ள பலமிக்க அணிகளில் ஒன்றாக கொழும்பு கிங்ஸ் அணி பார்க்கப்படுகிறது. இந்த அணி இலங்கை தேசிய அணியின் முன்னாள் தலைவர் அஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமையில் களமிறங்கவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு தடைகளுக்கு பின்னர், கொழும்பு கிங்ஸ் அணி 22 பேர்கொண்ட அணியை உறுதிப்படுத்தியிருக்கிறது.

டுபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபரான முர்பாட் முஷ்தபாவுக்கு சொந்தமான “பாசா குழுமம்” கொழும்பு கிங்ஸ் அணியை வாங்கியுள்ளதுடன், பாசா குழுமம் ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் வெற்றிகரமான வளர்ச்சியை பெற்றுவருகின்றது.

பங்களாதேஷ் ப்ரீமியர் லீக், ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற ரி 20 லீக் தொடர் மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற உள்ளூர் போட்டிகள் போன்றவற்றில் விளையாடிய பல அணிகளுக்கு பயிற்றுவித்த அனுபவம் கொண்ட தென்னாபிரிக்காவின் ஹேர்ஷல் கிப்ஸ் கொழும்பு கிங்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படவுள்ளார். இவருக்கு உதவியாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் செயற்படவுள்ளார்.

கொழும்பு கிங்ஸ் அணி

துடுப்பாட்ட வீரர்கள் – அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால், லஹிரு உதார, ரவீந்திரபோல் சிங், லோரி எவன்ஸ், டேனியல் பெல்-ட்ரெம்மண்ட், கரீம் சகிட், *நவோத் பரனவிதான
சகலதுறை வீரர்கள் – அன்ரே ரசல், திக்ஷில டி சில்வா, அசான் பிரியன்ஜன்
சுழல் பந்துவீச்சாளர்கள் – அமில அபொன்சோ, ஜெப்ரி வெண்டர்சே, தரிந்து கௌஷால், குவைஸ் அஹமட், தரிந்து ரத்நாயக்க
வேகப் பந்துவீச்சாளர்கள் – இசுரு உதான, துஷ்மந்த சமீர, தம்மிக்க ப்ரசாத், மன்பிரீட் சிங், கலன பெரேரா, ஹிமேஷ் ரத்நாயக்க

(*துணை வீரர்கள்)

கொழும்பு கிங்ஸ் குழாமானது அனுபவம் மற்றும் இளம் வீரர்களை கொண்ட சிறந்த குழாமாக அமையப்பெற்றுள்ளது. அஞ்செலோ மெதிவ்ஸ், தினேஷ் சந்திமால் மற்றும் இசுரு உதான ஆகியோருக்கு இடையில் 400 ரி 20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளதுடன், அன்ரே ரசல் சர்வதேசத்தில் நடைபெற்ற அத்தனை ரி 20 தொடர்களிலும் விளையாடிய அனுபவத்தை தனக்குள் வைத்துள்ளார்.

அணித்தலைவர் அஞ்செலோ மெதிவ்ஸ் ஐ.பி.எல். தொடரில் பூனே வொரியர்ஸ் அணிக்கு தலைமை தாங்கியுள்ளார். அத்துடன் ஸ்ரீலாங்கா ப்ரீமியர் லீக் தொடரில் நெகனஹிர நாகாஸ் அணிக்கும் தலைமை தாங்கியுள்ளார். அதேநேரம், தன்னுடைய உடற்தகுதி மற்றும் பந்துவீச்சு திறமையினையும் மெதிவ்ஸ் சிறப்பாக வெளிக்காட்டி வருகின்றார்.

இவருடன் இலங்கை அணியின் மற்றுமொரு முன்னாள் தலைவரான தினேஷ் சந்திமால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் உள்ளூர் போட்டியில் அதிகூடிய ஓட்டங்களை (354) விளாசி சாதனைபடைத்திருந்தார். அதுமாத்திரமின்றி முதன்முறையாக நடைபெற்ற இராணுவ தளபதி ரி 20 தொடரில் அதிகூடிய ஓட்டங்களை விளாசியவர் என்ற பெருமையையும் பெற்றார்.

இந்த தொடரில் கொழும்பு கிங்ஸ் அணி சார்பாக அதிகம் எதிர்பார்க்கப்படுபவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் அன்ரே ரசல். ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தாலும், இம்முறை சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

எனினும், இவ்வருட ஆரம்பத்தில் இலங்கை வந்திருந்த இவர், 10 சிக்ஸர்கள் அடங்கலாக 28 பந்துகளுக்கு 75 ஓட்டங்களை விளாசி மிரட்டியிருந்தார்.

முன்னணி வீரர்களை தவிர்த்து, புதுமுக வீரர்களில் எதிர்பார்க்கக்கூடியவர், இம்முறை உள்ளூர் போட்டிகளில் 1000 ஓட்டங்களை கடந்த துடுப்பாட்ட வீரர் லஹிரு உதார. கொழும்பு கிங்ஸ் அணியின் பிரதான குழாத்தில் இடம்பெற்ற ஒரேயொரு புதுமுக வீரராக இவர் உள்ளார். ஏனைய வீரர்களான நவோத் பரனவிதான, கலன பெரேரா, தரிந்து ரத்நாயக்க, ஹிமேஷ் ராமநாயக்க ஆகியோர் துணை வீரர்களாக குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளனர்.

பந்துவீச்சு பக்கம் பார்க்கும் போது, இசுரு உதான மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் முன்னணி வேகப் பந்துவீச்சாளராக உள்ளனர். இவர்களுடன், அனுபத்தை பகிர்ந்துக்கொள்ளும் முகமாக தம்மிக பிரசாத் மற்றும் மன்ப்ரீட் கோனி ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். சுழல் பந்துவீச்சை பொருத்தவரை, ஆப்கானிஸ்தான் அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் குவைஸ் அஹமட் மற்றும் இலங்கை அணியின் அமில அபோன்சோ ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த தொடரில் ஆடுகின்ற கண்டி நகரினை பிரதிநிதித்துவம் செய்யும் கண்டி டஸ்கர்ஸ் குழாம் அனுபவம் குறைந்த வீரர்களுடன் இந்த தொடரில் களம் காண காத்திருக்கின்றது.

”சொஹைல் கான்” திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான இந்திய பொலிவூட் நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர் சொஹைல் கான் மூலம் கொள்வனவு செய்யப்பட்டிருக்கும் இந்த கண்டி டஸ்கர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் உலகக் கிண்ண நாயகன் ஹஷான் திலகரட்ன காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஹஷான் திலகரட்ன தவிர கண்டி டஸ்கர்ஸ் பயிற்சிக் குழாத்தினை நோக்கும் போது அவ்வணிக்கு நுவான் குலசேகர, லங்கா டி சில்வா ஆகியோர் முறையே பந்துவீச்சுப் பயிற்சியாளராகவும், களத்தடுப்பு பயிற்சியாளராகவும் செயற்பட, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறைவீரரான பர்வீஸ் மஹரூப் அணியின் முகாமையாளர் பொறுப்பினை எடுத்திருக்கின்றார்.

கண்டி டஸ்கர்ஸ் அணி

துடுப்பாட்டவீரர்கள் – குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ், ப்ரியமால் பெரேரா, ப்ரன்டன் டெய்லர், றஹ்மத்துல்லா குர்பாஸ், நிஷான் மதுஷ்க
சகலதுறைவீரர்கள் – கவிஷ்க அஞ்சுல, சீக்குகே பிரசன்ன, அசேல குணரட்ன, கமிந்து மெண்டிஸ், லஹிரு சமரக்கோன், இஷான் ஜயரட்ன
சுழல் பந்துவீச்சாளர்கள் – தில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, கெவின் கொத்திகொட, சாமிக்கர எதிரிசிங்க
வேகப் பந்துவீச்சாளர்கள் – நுவான் ப்ரதீப், விஷ்வ பெர்னாந்து, இர்பான் பதான், முனாப் படேல், டேல் ஸ்டெய்ன், நவீன் உல் ஹக், சொஹைல் தன்வீர்

கண்டி அணியின் முன்வரிசை துடுப்பாட்டத்தினை நோக்கும் போது அவ்வணிக்கு அதன் தலைவர் குசல் ஜனித் பெரேரா, குசல் மெண்டிஸ் ஜிம்பாப்வே நட்சத்திரம் ப்ரன்டன் டெய்லர் போன்றோர் சிறந்த ஆரம்பத்தினை கொடுக்க எதிர்பார்க்கப்படுகின்றது. அதேநேரம், மத்திய வரிசையினை நோக்கும் போது நட்சத்திர சகலதுறைவீரர் அசேல குணரத்ன, கமிந்து மெண்டிஸ் மற்றும் ப்ரியமால் பெரேரா ஆகியோரின் பங்களிப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மறுமுனையில் பந்துவீச்சு வரிசையினை நோக்கும் போது டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய போன்ற, இலங்கை அணிக்கு தொடர்ச்சியாக ஆடும் சுழல் பந்துவீச்சாளர்கள் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைக்கப்பட்ட போதும் இவர்கள் ரி 20 போட்டிகளுக்கான சிறப்பு வீரர்களாக இருக்கும் சீக்குகே பிரசன்ன, கமிந்து மெண்டிஸ் மற்றும் மாய சுழல்பந்துவீச்சாளர் கெவின் கொத்திகொட ஆகியோரிடம் போட்டியிட்டே முதல் பதினொருவர் அணிக்குள் வாய்ப்பினை பெறும் சூழ்நிலை இருக்கும்.

கண்டி அணியின் வேகப் பந்துவீச்சு வரிசையை நோக்கும் போது அவ்வணிக்கு மிகப்பெரிய பலமாக இருப்பது அனுபவம் கொண்ட தென்னாபிரிக்க பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் உள்ளடக்கமாகும். ஆனால், ஸ்டெய்னுக்கு இலங்கை வந்த பின்னர் தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டியிருப்பதால் கண்டி டஸ்கர்ஸ் அணி ஆடும் ஓரிரு போட்டிகளில் விளையாட முடியாத நிலை காணப்படுகின்றது.

ஆனாலும் இலங்கை அணியின் அனுபவம் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் நுவன் ப்ரதிப், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான இர்பான் பதான், முனாப் படேல் போன்றோரும் வேகப் பந்துவீச்சாளர்களாக கண்டி அணியினை பலப்படுத்த காத்திருக்கின்றனர். இவர்களுக்கு மேலதிகமாக அண்மையில் கண்டி டஸ்கர்ஸ் அணியில் இணைந்த விஷ்வ பெர்னாந்துவும் ஒரு மேலதிக வேகப் பந்துவீச்சாளராக கடமை புரிய தயார் நிலையில் உள்ளார்.

எல்பிஎல் தொடரில் கண்டி அணிக்காக பிரகாசிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் யார் என நோக்கினால் நமக்கு கிடைக்கும் பதிலாக குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் ஆகியோரின் பெயர் வருகின்றது.

இதில் அடிக்கடி உபாதைக்கு ஆளாகும் குசல் ஜனித் பெரேரா இந்த ஆண்டில் பெரிதாக கிரிக்கெட் போட்டிகளில் பிரகாசிக்காது போனாலும், குசல் மெண்டிஸ் இராணுவப்படை தளபதி லீக் ரி 20 தொடர் போன்ற உள்ளூர் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.

இவர்கள் தவிர கமிந்து மெண்டிஸ், கெவின் கொத்திகொட போன்ற இளம்வீரர்களும் கண்டி டஸ்கர்ஸ் அணியின் இளம் நட்சத்திரங்களாக ஜொலிக்க எதிர்பார்க்கப்படுகின்றனர். இதில் இரண்டு கைகள் மூலமும் பந்துவீசும் ஆற்றல் கொண்ட கமிந்து மெண்டிஸ் பந்துவீச்சினை விட துடுப்பாட்ட வீரராகவே ஆளுமைகளை அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தியிருந்தார். தனது மாயசுழல் மூலம் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை குழப்படமையச் செய்யும் ஆற்றலை கெவின் கொத்திகொட கொண்டிருக்கின்றார். அதேநேரம் 21 வயது நிரம்பிய வேகப் பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் அண்மையில் நிறைவுக்கு வந்த சிபிஎல் ரி 20 தொடரில் அசத்தல் ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இறுதியாக, கண்டி டஸ்கர்ஸ் அணி தமக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர்களான கிறிஸ் கெயில், லியாம் ப்ளன்கெட், வஹாப் ரியாஸ், சொஹைல் தன்வீர் போன்றோரினை பல்வேறு காரணங்களினால் இந்த தொடரில் இழந்த போதும் சில திருப்பங்களை ஏற்படுத்தும் நம்பிக்கையோடு தமது முதல் போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியினை எதிர்கொள்கின்றது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s