கொழும்பு: வெளிநாட்டில் சிக்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் மீண்டும் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படும் என, இராணுவத் தளபதியும், கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

திடீரென கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்தமை காரணமாக இநடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்கள், அந்தந்த நாடுகளில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்வதால், மத்திய கிழக்கில் சிக்கியுள்ளவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கி, வெளிநாடுகளில் உள்ள மற்றும் இலங்கைக்கு திரும்ப விரும்பும் அனைத்து இலங்கையர்களும் கட்டம் கட்டமாக அழைத்துவரப்படுவார்கள் எனவும், இச்செயன்முறைகள், சமூகத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாறு நாட்டுக் அழைத்து வரப்படுபவர்கள் PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதோடு, அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் அல்லது கட்டணம் செலுத்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.