‘ஒரே நாடு ஒரே சட்டம்” என்ற மந்திரத்தின்கீழ் இனவாதத்தை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்து ஆட்சிக்கு வந்த இன்றைய அரசாங்கம் பாம்புக்கு தலையையும், மீனுக்கு வாலையும் காண்பிக்கும் வகையில் ஜனாஸாவில் அரசியல் செய்துவருகின்றது.

அதாவது சிங்கள இனவாதிகளுக்கு ஒரு முகத்தையும், முஸ்லிம்களுக்கும், உலகத்துக்கும் இன்னுமொரு முகத்தை காண்பிக்க வேண்டிய ராஜதந்திர சிக்கல் அரசாங்கத்துக்கு உள்ளது.
உலக சுகாதார ஒன்றியத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மரணிக்கின்ற உடல்கள் புதைக்கப்படுகின்றது.
அடக்குமுறைகள், சர்வாதிகாரம், குழப்பங்கள், கொடூர யுத்தங்கள் நடைபெறுகின்ற நாடுகளில் மரணித்த முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்படவில்லை. அதாவது அந்த நாடுகளின் ஆட்சியாளர்கள் ஜனாஸாவில் அரசியல் செய்யவில்லை.
சீனாவின் ஜின்சியாங் மாகாணத்தில் திறந்தவெளி சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம்கள் கொரோனாவினால் மரணித்தபோது அவர்கள் எரிக்கப்படவில்லை.
ஆனால் அத்தனை கொடூரங்கள் நடைபெறுகின்ற நாட்டில் இல்லாத மனித உரிமை மீறல் எமது ஜனநாயக நாட்டில் காணப்படுவதனை நினைக்கின்றபோது கவலை தருகின்றது.
உலக சுகாதார ஒன்றியமும், உலகில் உள்ள நிபுணர்களும் கொரோனாவினால் மரணிக்கின்றவர்களை புதைப்பதன் மூலம் சூழலுக்கு எந்த பாதிப்புமில்லை என்று சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், எமது நிபுணர்களின் கருத்து இதற்கு மாறுபட்டதாக உள்ளது.
முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதனை கண்டித்து அரசாங்கத்துக்கு எதிரான கண்டனக் குரல்கள் சர்வதேசரீதியில் அதிகரித்து வருகின்றது. சர்வதேச மன்னிப்புச் சபையும் தங்களது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டில் மாற்றத்தைக் கொண்டுவந்து ஜனாஸாக்களை புதைப்பதற்கு அனுமதி வழங்கினால், அது தெற்கில் தங்களது ஆதரவு தளத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதுடன், தங்களால் பாலூட்டி சீராட்டி வளர்க்கப்பட்ட இனவாதிகள் வீதிக்கு வந்துவிடுவார்கள் என்று அரசாங்கம் அஞ்சுகிறது.
அதற்காகவே புதைப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக கதைகளை நீதி அமைச்சர் அலி சப்ரி ஊடாக பரவவிட்டு வேடிக்கை பார்க்கிறது. அவ்வாறு பரவச்செய்வதன் மூலம் இனவாதிகளின் நாடித்துடிப்பை அறிந்துகொள்ள அரசாங்கம் முயற்சித்துள்ளது.
எனவேதான் தெற்கில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தை விதைத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம், ஜனாஸா விடயத்தில் தங்களது ஆதரவு தளத்தில் எந்தவித பாதிப்புமில்லாதவாறே முடிவினை மேற்கொள்வார்கள்.
இந்த உண்மையை புரிந்துகொள்ளாமல் ஒவ்வொருவரும் தங்களது அரசியல் எஜமான்களினால்தான் அனைத்தும் நடந்துள்ளது என்று விளம்பரம் செய்வதானது அறியாமையின் வெளிப்பாடாகும்.
அத்துடன் புதைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்ற செய்திகள் பரவியதனால்தான் ஜானசார தேரர் போன்ற தென்னிலங்கை இனவாதிகள் அதற்கு எதிராக கோசம் எழுப்பியுள்ளார்கள். இந்த உண்மையை மறைத்து CTJ கருத்து கூறியதனால்தான் இனவாதிகள் கிளம்பியுள்ளார்கள் என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாத அப்பட்டமான பொய்யாகும்.
இது CTJ க்கு எதிரான சக்திகள் அவர்களை பழிவாங்கும் நோக்கில் சந்தர்ப்பத்தினை பயன்படுத்துகின்றார்கள் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
– முகம்மத் இக்பால், சாய்ந்தமருது