அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தன்னை தோற்கடிப்பதற்காக திட்டமிட்ட மோசடிகள் நடைபெற்றதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் கூறியுள்ளதுடன் நீதிமன்றத்தையும் நாடியுள்ளார்.

இவரது குற்றச்சாட்டானது வழக்கம்போல அவரது கோமாளித்தனம் என்றும், தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுப்பதுடன் தோல்விக்கு நியாயம் கற்பிக்கின்றார் என்றும் மேலோட்டமாக பார்கின்றவர்கள் கூறுகின்றனர்.

ஆனால் அமெரிக்க ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டினை தட்டிக்கழிக்க முடியாது. அவரால் வெளியே கூறமுடியாத சில மர்ம முடிச்சுக்கள் அங்கே புதைந்திருக்கலாம். 

உலக நாடுகளை தன் பிடிக்குள் அடக்கி ஆள்வது மட்டுமல்லாது இஸ்லாமிய கடும் போக்காளர்களையும், இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களையும் அழித்தொழிப்பது அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் நிகழ்ச்சி நிரலாகும். 

கடந்த நாலு வருடங்களில் அந்த தோற்றப்பாட்டில் சிறுது தளர்வு ஏற்பட்டது. இன்னும் தொடர்ந்து ட்ரம்ப் ஆட்சி செய்தால் அமெரிக்காவுக்கு இருக்கின்ற முதன்மை வல்லரசு என்ற அந்தஸ்தும், மரியாதையும் இல்லாமல் போய்விடும் என்பது அமெரிக்க அரச இயந்திரங்களின் அச்சமாகும்.  

ட்ரம்பின் ஆட்சியானது எமது ராஜபக்சாக்களின் ஆட்சியை போன்று அமெரிக்க பெரும்பான்மை வெள்ளையர்களின் வாக்குகளை கவரக்கூடியதாக இருந்தது. கறுப்பு இனத்தவரை கொலை செய்ததனால் ஏற்பட்ட வன்முறையின்போது ஜனாதிபதி என்றவகையில் நடுநிலையாக செயல்படாமல் கறுப்பர்களின் மனது புண்படும்படியாக கருத்து தெரிவித்திருந்தார். இது அமெரிக்க ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலானதென்று பகிரங்கமாக விமர்சித்தனர்.  

அத்துடன் அமெரிக்க – மெக்சிக்கோ எல்லையில் சுவர் எழுப்பப்பட்டது, ஐரோப்பிய ஒன்றியத்துடன் நேரடி மோதல், நேட்டோ நாடுகளுடன் முரண்பாடுகள், கொரோனா பரவலுக்கு உலக சுகாதார ஒன்றியமே காரணம் என்று அதற்கு நிதி வழங்குவதனை நிறுத்தியமை, சீனாவின் பல வர்த்தக நிறுவனங்களுக்கு தடை விதித்தமை, தென்சீன கடல் பகுதியில் ஆதிக்கம்.  

மற்றும் ஈரான் மீதான கடுமையான பொருளாதார தடை, இஸ்ரேலின் தலைநகராக ஜெரூசலத்தை அறிவிப்பு செய்தமை, ஈரான், சிரியா, யேமன், லிபியா, போன்ற நாட்டவர்களுக்கு வீசா வழங்க தடை விதித்தமை என்றெல்லாம் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டிருந்தார். இந்த நடவடிக்கைகள் அமெரிக்க வெள்ளையின மக்களை கவர்ந்தாலும், கொள்கை வகுப்பாளர்களான கடும்போக்காளர்களை திருப்திப்படுத்தவில்லை.  

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியதாகவே அவர்கள் கருதினார்கள். ஒவ்வொரு அமெரிக்க ஜனாதிபதியும் அவரவர் காலத்தில் அமெரிக்காவுடன் முரண்படுகின்ற முஸ்லிம் நாடுகளை இலக்கு வைத்து அழிப்பது வழமை ஆனால் ட்ரம்பின் நடவடிக்கை கோமாளித்தனமாக இருந்தது. 

அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கின்ற நாடு ஈரான். அதனால் ட்ரம்பின் ஆட்சியில் ஈரான்மீது தாக்குதல் நடாத்தி அதன் அணு உலைகளை அழித்தொழிப்பதற்கு திட்டமிட்டார்கள். ஆனால் ட்ரம்ப் அதற்கு உடன்படவில்லை. 

இந்த முரண்பாடுகளினால் பலர் டிராம்பைவிட்டு விலகி சென்றனர். அந்தவகையில் அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்டன் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். உலகில் உள்ள சர்வதிகாரிகளுக்கு ட்ரம்ப் துனைபோகின்றாரென்று இஸ்லாமிய நாடுகளை மறைமுகமாக குறிப்பிட்டு குற்றம்சாட்டியதுடன், டிரம்பிற்கு எதிராக புத்தகமும் எழுதியிருந்தார். 

உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம் அமெரிக்காவின் கழுகுப்பார்வை இருந்துகொண்டே இருக்கும். எந்தவொரு நாட்டிலும் அமெரிக்க நலனுக்கு எதிரானவர் ஆட்சி தலைவராக வராமல் தடுப்பதற்கு அமெரிக்க புலனாய்வுத்துறை தங்களது சதித்திட்டங்களை மேற்கொள்வது வழமை. இதற்காக ஏராளமான பணத்தினையும் செலவழிப்பார்கள். 

அத்துடன் அமெரிக்காவுக்கு நேரடியாக சவால்விடுகின்ற நாடுகளின் தலைவர்களையும், இராணுவ மற்றும் புலனாய்வு பொறுப்பாளர்களையும் இஸ்ரேலின் மொசாட்டின் உதவியுடன் அமெரிக்கா கொலை செய்த சம்பவங்கள் ஏராளம். 

அந்தவகையில் ஈரான் புரட்சிகர இராணுவத்தின் தளபதியான காசிம் சுலைமானி அவர்களை கடந்த ஜனவரி மாதம் ஈராக்கில்வைத்து அமெரிக்காவின் ட்ரோன் விமானம் மூலம் கொலை செய்தனர். 

இதற்கு பதிலடியாக ஈராக்கிலுள்ள அமெரிக்க தளங்கள்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடாத்தி அழித்தது. இந்த சம்பவம் அமெரிக்காவுக்கு தலைகுணிவை ஏற்படுத்தியது. இருந்தும் ஈரானுக்கெதிராக இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள ட்ரம்ப் உடன்படவில்லை. இதனால் ட்ரம்ப் தொடர்ந்து அமெரிக்காவை ஆட்சி செய்வது ஆபத்தானது என்று கருதப்பட்டு வந்தது. 

எனவே ட்ரம்பை மக்கள் விரும்பினாலும், அவர் தொடர்ந்து பதவியிலிருந்தால் உலகின் வல்லாதிக்க சக்தி என்ற கிரீடத்துக்கு ஆபத்து ஏற்படுமென்று கருதியதன் காரணமாக எப்படியாவது ட்ரம்பை வீட்டுக்கு அனுப்ப வேண்டுமென்று அமெரிக்காவின் அரச இயந்திரம் திரைமறைவில் செயல்பட்டிருக்கலாம். இதனையே தான் தோற்கடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறுகின்றார்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது