20ஆவது திருத்தச் சட்டத்துக்கு முஸ்லிம் காங்கிரசின் நேரடி பிரதிநிதியாக இருந்த நிலையில் அதற்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுக்கு உலமா கட்சி நேரில் பாராட்டு தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டுடனான தொலைபேசி உரையாடலின் போதே உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அவரிடம் மேலும் தெரிவிக்கையில்,
20ஆவது திருத்த சட்ட பாராளுமன்ற விவாதத்தின் போது முஸ்லிம் சமூகத்திற்கு ரணில், சஜித் அரசு செய்த அநியாயங்கள் பற்றி முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஆற்றிய உரை மிக சிறப்பாக இருந்தது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் நிறைவேற்று அதிகாரத்தை உறுதிப்படுத்தும் 20ஆவது திருத்த யாப்புக்கு ஆதரவளித்தமை மிகச்சிறந்த செயலாகும்.
கோட்டா, மஹிந்த தலைமையிலான இந்த அரசாங்கம் என்பது மிகவும் பலம் பொருந்திய அரசாங்கமாகும். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் கூட அரச கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் போது முஸ்லிம்கள் மஹிந்த அரசை எதிர்க்க எந்த நியாயமும் இல்லை. மஹிந்த தரப்பினர் எமது தலைவர்களை கொன்றிருக்கிறார்களா? இல்லையே.
யுத்தத்தை முடித்தது மட்டுமல்ல முழு கிழக்கைக்கும் மஹிந்த அரசு நன்மைகள் செய்துள்ளன.
இதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவாரா என்று தெரியாத நிலையிலும் உலமா கட்சி முன்வந்து அவரை ஆதரித்தது. காரணம் முஸ்லிம் சமூகம் நன்றியுள்ள சமூகமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே.
இந்த நிலையில் முஸ்லிம் காங்கிரசின் நேரடி உறுப்பினரான ஹாபீஸ் நஸீரின் முடிவு மிகச்சிறந்த முடிவாகும். இந்த அரசாங்கத்தை கொண்டு வர பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்ட முதலாவது முஸ்லிம் கட்சி உலமா கட்சி என்ற வகையில் உங்களின் முடிவை நாம் பாராட்டுவதுடன் சமூகத்தினதும், நாட்டினதும் நலனுக்கான முயற்சிகளில் நாம் உங்களுக்கு பக்க பலமாக இருப்போம் எனவும் உலமா கட்சித் தலைவர் அவரிடம் தெரிவித்தார்.