உங்கள் பாலியல் ஆபாச படம் சமூக ஊடகங்களில் பரவினால் எப்படி நீக்குவது?

டெல்லியில் ஒரு பள்ளியில் படித்த 16 வயது மாணவிக்கு தனது வகுப்பில் படிக்கும் ஒரு பையனுடன் நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இந்த உறவு தவறான பாதையில் செல்வதை அந்தப் மாணவி விரைவில் உணர்ந்தாள்.

தனது அந்தரங்கமான புகைப்படங்களை அனுப்பும்படி அந்த மாணவன் கட்டாயப்படுத்தியதாக மாணவி கூறினாள். சிறிது காலம் கழித்து அந்த உறவை அவள் முடித்துக்கொண்டாள்.

2014இல் பள்ளிப்படிப்பு முடிந்ததும் மாணவி படிப்பதற்காக வெளிநாடு சென்றாள். ஆனால் அந்த மாணவன் அவளைப் பின்தொடர்வதை நிறுத்தவில்லை.

அவளை சந்திக்க அவன் பிரிட்டன் சென்றான். அவளது வீட்டிற்கும் போனான். அந்தப் பெண்ணின் கூற்றுப்படி அங்கே அவளை உடல் ரீதியாக துன்புறுத்தினான். அந்தப் பெண் உள்ளூர் போலீசில் புகார் செய்தாள்.

இங்கிலாந்தின் ஒரு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 2017ஆம் ஆண்டில் அந்த மாணவன் குற்றவாளி என்று தீர்ப்பளித்ததுடன், மாணவியை எந்த வகையிலும் தொடர்பு கொள்வதற்கும் தடை விதித்தது. மாணவி இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்த நகரத்தில் அவன் நுழைவதற்கும் நீதிமன்றம் தடை விதித்தது.

சமூக ஊடகங்கள் மூலம் பழிவாங்கல்

தனது சில அந்தரங்க படங்களை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் போன்ற சமூக ஊடக தளங்களில் அந்த மாணவன் (குற்றம் சாட்டப்பட்டவர்) பதிவேற்றியுள்ளார் என்று 2019 அக்டோபர்-நவம்பரில் மாணவிக்கு தெரிய வந்தது. தனது 16வது வயதில் இந்த படங்களை அந்தப் பெண் சிறுவனுடன் பகிர்ந்து கொண்டிருந்தார்.

அந்தப்பெண் டெல்லி சைபர் போலீசில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார். கூடவே, சமூக ஊடக தளத்திலிருந்து புகைப்படங்களை அகற்றவும் வேண்டுகோள் விடுத்தார்.

அந்தப் பெண்ணுக்கு இப்போது 24 வயது. அந்தப்பெண் டெல்லி உயர்நீதிமன்றத்தை அணுகி, தான் முன்னர் அனுப்பியிருந்த அந்த URL-களை, சமூக ஊடக தளங்கள் அகற்றத் தவறிவிட்டதாகக் கூறினார். இதுபோன்ற 50 க்கும் மேற்பட்ட URL-கள், தன்னுடைய அந்தரங்க படங்களை கொண்டிருப்பதாக அவர் மேலும் கூறினார்.

சமூக ஊடகங்கள் கூறுவது என்ன ?

இந்த விவகாரத்தில், இன்ஸ்டாகிராமின் உரிமையாளரான ஃபேஸ்புக், மற்றும் யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் ஆகியவை URL-கள் அகற்றப்பட்டதாக இந்த ஆண்டு ஜூலை மாதம் நீதிமன்றத்தில் தெரிவித்தன. ஆனால் புகைப்படங்கள் இன்னும் இணையத்தில் உள்ளன. ஏனெனில் பல பயனர்கள் அவற்றை மீண்டும் பதிவேற்றியுள்ளனர். 

இங்கு நிறுவனங்கள் சொல்வதன் பொருள் என்னவென்றால், குற்றம் சாட்டப்பட்டவர், சிறுமியின் தனிப்பட்ட ‘ஆட்சேபத்திற்குரிய’ படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றியபோது, அந்த படங்கள் பலரை சென்றடைந்தன. பலர் அவற்றைப் பதிவிறக்கம் செய்து பின்னர் இணையத்தில் மறு பதிவேற்றம் செய்தனர்.

சமூக ஊடக தளங்களில் ஆட்சேபனைகுரிய உள்ளடக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அதைத் தொடர்ந்து புழக்கத்தில் விடாமல் தடுக்கும் பிரச்சனை மீது தற்போது கவனம் செலுத்தப்படுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

சமூக ஊடக தளங்கள் புகார்களை பெற்ற உடன் சட்டவிரோத தகவல்களை அகற்ற வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

முன்னர் அகற்றப்பட்ட URL-களுடன் ஒத்துப்போகும் பிற உள்ளடக்கங்களையும் அகற்றுவதற்கு , பதிலளித்தவர் எண் 2 (ஃபேஸ்புக்) மற்றும் எண் 3 (கூகுள்) ஆகியவை, சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பல பயனர்கள் பெண்ணின் அனுமதியின்றி சமூக ஊடக தளங்களில் பதிவேற்றியுள்ள அவருடைய “ஆட்சேபகரமான” புகைப்படங்களை நீக்குமாறு டெல்லி உயர் நீதிமன்றம் கூகுள் மற்றும் ஃபேஸ்புக்கை கேட்டுக் கொண்டுள்ளது.

புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றுபவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை 

அதே நேரத்தில் காவல்துறை ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கத்தை மீண்டும் பதிவேற்றும் நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள் ஆகியவை தங்கள் தளங்களில், குழந்தை ஆபாச படங்கள் தொடர்புடைய உள்ளடக்கம் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது.

போக்சோ ( பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல்) சட்டத்தின் பிரிவு -20 மற்றும் போக்சோ விதிகள் 2020 இன் விதி -11 ஆகியவற்றையும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

மனுதாரர் தொடர்பான ஆட்சேபத்திற்குரிய உள்ளடக்கம், குழந்தை பாலியல் மூலக்கூறின் கீழ் வருகிறது, ஏனெனில் அந்த நேரத்தில் அந்த சிறுமிக்கு 16 வயது தான் என்று நீதிமன்றம் கூறியது.

ஆன்லைன் சைபர் கிரைம் புகார்களுக்கான நோடல் ஏஜென்சியான என்.சி.ஆர்.பி அதாவது தேசிய குற்ற பதிவு பணியகத்திற்கு, இந்த விவகாரத்தை அனுப்புமாறு நீதிமன்றம் போலிஸ் அமைப்புகளை கேட்டுக் கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த அமைப்பும் இந்த உள்ளடக்கத்தை அகற்ற தங்கள் சார்பாக நடவடிக்கை எடுக்கமுடியும்.

எந்தவொரு படத்தையும் வீடியோவையும் பதிவிறக்கம் செய்து மீண்டும் பதிவேற்றும் நபர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எவ்வளவு கடினம் அல்லது எளிது? இந்த பிரச்சனை எந்த அளவிற்கு தீர்க்கப்படும்?

நிறுவனங்களிடம் பெரும்பாலும் சமூக ஊடக பயனர்களின் தொலைபேசி எண்கள் இருக்கும். ஏனெனில் பெரும்பாலான மக்கள் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் கணக்குகளை உருவாக்க மின்னஞ்சல் முகவரிகள் அல்லது கைபேசி எண்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இணைய நிபுணர் நிகில் பஹ்வா கூறுகிறார்.

இந்த வழியில் மறு பதிவேற்றல் அதாவது புகைப்படங்களை மீண்டும் பதிவேற்றுவோரை அடையாளம் காண புலனாய்வு அமைப்புகளுக்கு உதவி கிடைக்கும்.

நிறுவனங்களிடமிருந்து இந்த தகவலைப் பெற்ற பிறகு மொபைல் சேவை நிறுவனத்தின் உதவியை காவல்துறை நாட வேண்டும் என்று பஹ்வா கூறுகிறார். இதன் மூலம் அவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

“என்னைப் பொருத்தவரை, இந்த விஷயத்தில் சிலர் மீது நடவடிக்கை எடுத்து யாராவது கைது செய்யப்பட்டால் அது சமூகத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள், மறு பதிவேற்றம் செய்வதற்கு முன் சிந்திப்பார்கள். எனவே இந்த பெண்ணுக்கு நீதி கிடைப்பது மிகவும் முக்கியம், “என்று அவர் கூறுகிறார்.

கடந்த 20 ஆண்டுகளாக இதுபோன்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் சைபர் சட்ட நிபுணர் டாக்டர் கர்னிகா சேத், இதுபோன்ற வழக்குகளைச் சமாளிப்பது சாத்தியம் என்றும் சட்டத்தில் இதற்கு தீர்வு இருப்பதாகவும் கூறுகிறார். அத்தகைய விவகாரங்களைத் தீர்ப்பதில் அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞரிடம் பாதிக்கப்பட்டவர்கள் செல்ல வேண்டும் என்பதே இதற்கான ஒரே தேவை.

தொழில்நுட்ப மற்றும் சட்ட தீர்வு

ஒரு புகார்தாரர் நீதிமன்றத்திற்குச் சென்றால், புகார் கிடைத்தவுடன் அந்தரங்கமான படங்களை உடனடியாக அகற்றுமாறு சமூக ஊடகங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்துகிறது என்று டாக்டர் கர்னிகா சேத் கூறுகிறார்.

இதுபோன்ற வேறு ஒரு வீடியோ அல்லது படங்கள் மீண்டும் தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ளதாக புகார்தாரர் கூறினால் அவர் மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஊடக தளங்கள் அவற்றை தாமாகவே நீக்கவேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார். இது போன்ற பல நிகழ்வுகள் முன்னரும் நடந்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்

இந்த விஷயத்தில், தொழில்நுட்ப உதவியும் நாடப்படுகிறது. ‘டி.என்.ஏ புகைப்பட ஹாஷ் இயக்குமுறை’ கருவி போன்ற பல தொழில்நுட்ப கருவிகள் இதற்காக உள்ளன என்று டாக்டர் கர்னிகா சேத் தெரிவிக்கிறார்.

ஒவ்வொரு தயாரிப்புக்கும் ஒரு பார் குறியீடு இருப்பதைப் போலவே, டி.என்.ஏ புகைப்பட ஹாஷ் இயக்குமுறையும் செயல்படுகிறது. புகைப்படத்தின் ஹாஷ் மதிப்பு உருவாக்கப்படுகிறது. அந்த ஹாஷ் மதிப்பை இயக்கினால், அந்த படம் இணையத்தில் எங்கு இருந்தாலும் அது கிடைக்கும்.

இதன் மூலமாக அந்த உள்ளடக்கத்தின் சுழற்சியை தடுக்கலாம் என்று டாக்டர் கர்னிகா கூறுகிறார்.

குழந்தை பாலியல் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது

குழந்தை பாலியல் உள்ளடக்கம் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது. காணாமல் போன மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் அதாவது என்.சி.எம்.இ.சி உடன் நெருக்கமாக பணியாற்றுவதும் இதில் அடங்கும்.

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், குழந்தை பாலியல் துன்புறுத்தலை குறைப்பதற்கும், குழந்தைகள் சுரண்டல்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவும் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பு என்.சி.எம்.இ.சி. 

என்.சி.எம்.இ.சி, சைபர் டிப்லைன் (தொலைபேசி சேவை) ஒன்றை உருவாக்கியுள்ளது என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு ஆன்லைன் மன்றம். இங்கு இணையத்தில் சந்தேகத்திற்குரிய குழந்தை பாலியல் உள்ளடக்கம் பற்றி புகார் செய்யமுடியும். 

குழந்தைகள் பாலியல் உள்ளடக்கம் தங்கள் மேடையில் அடையாளம் காணப்படும்போதெல்லாம், அது உடனடியாக நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

குழந்தை பாலியல் பிரச்சனை எவ்வளவு தீவிரமானது

குழந்தை பாலியல் உள்ளடக்கம் பரவாமல் தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ஃபேஸ்புக் நீதிமன்றத்தில் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது. காணாமல் போன மற்றும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளான குழந்தைகளுக்கான தேசிய மையம் அதாவது என்.சி.எம்.இ.சி உடன் நெருக்கமாக பணியாற்றுவதும் இதில் அடங்கும்.

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிப்பதற்கும், குழந்தை பாலியல் துன்புறுத்தலை குறைப்பதற்கும், குழந்தைகள் சுரண்டல்களுக்கு உள்ளாவதை தடுப்பதற்காகவும் செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பு என்.சி.எம்.இ.சி. 

என்.சி.எம்.இ.சி, சைபர் டிப்லைன் (தொலைபேசி சேவை) ஒன்றை உருவாக்கியுள்ளது என்று சமூக ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஒரு ஆன்லைன் மன்றம். இங்கு இணையத்தில் சந்தேகத்திற்குரிய குழந்தை பாலியல் உள்ளடக்கம் பற்றி புகார் செய்யமுடியும். 

குழந்தைகள் பாலியல் உள்ளடக்கம் தங்கள் மேடையில் அடையாளம் காணப்படும்போதெல்லாம், அது உடனடியாக நீக்கப்படுவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.

யூடியூபில் குழந்தை பாலியல் ஆபாச படங்கள் அல்லது குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான உள்ளடக்கத்தை கையாள பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறி கூகுள் ஒரு பிரமாணப் பத்திரத்தையும் தாக்கல் செய்துள்ளது.

யாராவது இதுபோன்ற விஷயங்கள் குறித்து தனிப்பட்ட முறையில் புகார் அளித்தால், அதை நீக்குவதாகவும் கூகுள் கூறியது.

எந்தவொரு நபரும், அரசு நிறுவனங்களும் அல்லது அரசு சாரா நிறுவனங்களும் யூடியூபில் ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை அறிவிக்கக்கூடிய, நம்பகமான ஃப்ளாகர் திட்டத்தையும் தான் உருவாக்கியுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

“அவர்கள்(இன்ஸ்டாகிராம் மற்றும் கூகுள்) தங்கள் தளங்களில் இருந்து ஆட்சேபகரமான உள்ளடக்கத்தை அகற்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற கருவிகளை பயன்படுத்துகிறார்கள் என்பதை அந்த நிறுவனங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்கள் சுட்டிக்காட்டுகின்றன,” என்றும் நீதிமன்றம் கூறியது.

குழந்தை பாலியல் ஆபாசத்தைத் தடுக்க சமூக ஊடக நிறுவனங்கள் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்கின்றன என்று சைபர் நிபுணர்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் இன்னும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

குழந்தை ஆபாச படங்கள் பிரச்சனையை கையாள்வதில் உலகளாவிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த விஷயத்தில் தொழில்நுட்பம் இன்னும் முழுமையாக சரியாகவில்லை. அதற்கு நேரம் எடுக்கும் என்று நிகில் பஹ்வா கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மணிநேர வீடியோக்களும் படங்களும் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படுகின்றன. எனவே 100% அவற்றை கையாள்வது கடினம் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், அது பற்றித் தெரிந்தவுடன் அதை அகற்றுவது சமூக ஊடக தளத்தின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

“இணையத்தில் ஒரு கிளிப் மிக விரைவாக வைரலாகி, குறுகிய காலத்தில் பாதிக்கப்பட்டவருக்கு நிறைய தீங்கு விளைவிக்கும். எனவே விரைவாக செயல்பட வேண்டியது அவசியம்,” என்று சைபர் சட்ட நிபுணர் டாக்டர் கர்னிகா சேத் தெரிவிக்கிறார்.

இந்தியாவில் இந்த தளங்களின் பிரதிநிதிகள் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

“புகாருக்கு தானியங்கி பதிலை (கணினி உருவாக்கிய பதில்) பெறுவது போதாது. புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கூடிய பொறுப்புள்ள ஒருவர் இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் குறிப்பிடுகிறார்.

இணையத்தை ஒழுங்குபடுத்துவது எளிதானது அல்ல. ஆனால் தொழில்நுட்பம் மற்றும் சட்டத்தின் உதவியுடன் இதை பெருமளவு செய்ய முடியும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

  • குர்ப்ரீத் சைனி,
  • பிபிசி செய்தியாளர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s