இருபதை ஆதரித்ததில் மு.கா உறுப்பினர்களின் புதிய தந்திரோபாயமும், புதைந்து கிடக்கின்ற அரசியலும்

ஆரம்பத்தில் என்னதான் பாசாங்கு காட்டினாலும், இறுதியில் இருபதாவது திருத்தத்துக்கு எங்கள் கட்சி உறுப்பினர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று கடந்த இருவாரங்களுக்கு முன்பு “முஸ்லிம் தலைவர்களே பாய்ச்சலுக்கு தயாரா” என்ற தலைப்பில் எதிர்வு கூறியிருந்தேன். அதுவே நேற்று நடைபெற்றுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (18.10.2020) நடைபெற்ற அதியுயர்பீட கூட்டத்தில் “நாங்கள் இருபதுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால் எங்களுக்கு எதிராக விகிதாசார தேர்தல் முறைமை நீக்கம் அல்லது இன்னும் வேறு சட்டங்களை கொண்டுவந்து எங்களை பழிவாங்குவார்கள்” என்று தலைவர் கூறியிருந்தார். 

அதாவது அன்றைய கூட்டத்தில் இருபதுக்கு ஆதரவான கருத்தினை தலைவர் கூறியதாகவே அன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட அதிஉயர்பீட உறுப்பினர்கள் சிலர் என்னிடம் தெரிவித்தார்கள்.     

அமைச்சர் பதவிகளுக்காக கடந்த காலங்களில் பாய்ச்சலை மேற்கொள்ளும்போது வழமையாக கையாளும் தந்திரோபாயங்கள் அனைத்தும் மக்களுக்கு பரீட்சயம் என்பதனால், இம்முறை புதிய நுட்பங்களை பயன்படுத்தி உள்ளார்கள். அதாவது தலைவர் எதிர்கட்சிகளின் கூட்டுப்பொறுப்புடன் செயல்பட, மற்றவர்கள் அதிகாரத்தின் பக்கம் சைகை காண்பித்துள்ளார்கள். 

2005 ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை கடுமையாக விமர்சித்தார்கள். தேர்தல் முடிந்ததன் பின்பு சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு மகிந்தவுடன் சேர்ந்து அவருக்கு கும்பிடு போட்டுக்கொண்டு அமைச்சர் பதவிகளை அனுபவித்தார்கள். 

அதுபோலவே 2010  தேர்தல்களிலும் மகிந்தவை திட்டி தீர்த்துவிட்டு மீண்டும் தேர்தலுக்கு பின்பு சில மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு மகிந்தவுடன் இணைந்து அதிகாரத்தை அடைந்ததுடன், ஒரு மன்னருக்கு நிகரான அதிகாரத்தை வழங்குகின்ற 18 வது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள். 

பின்பு நன்றாக பதவிகளை அனுபவித்துவிட்டு மீண்டும் 2015 இல் மகிந்தவைவிட்டு விலகி அவர்களை பாவிகளாக முஸ்லிம் மக்களிடம் சித்தரித்தார்கள். அப்போது நடைபெற்ற தேர்தலில் மகிந்த தரப்பு தோல்வியடைந்ததன் காரணமாகவே நல்லாட்சியில் தொடர்ந்து ஒட்டிக்கொண்டு அதி உச்ச அதிகாரங்களை அனுபவித்தார்கள். 

இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது 2019 ஜனாதிபதி தேர்தலிலும், 2020 பொது தேர்தலிலும் மகிந்த தரப்பினரை ஒரு தீண்ட தகாத பாவிகளாக முஸ்லிம் மக்களிடம் கண்பித்தார்கள். இருந்தாலும் தற்போது ராஜபக்ச குடும்பம் ஆட்சியை மீண்டும் கைப்பேற்றி உள்ளது.   

தற்போது ராஜபக்ச குடும்பம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததன்பின்பு எம்மவர்கள் அமைதியாக உள்ளார்கள். அதாவது முஸ்லிம்களுக்கு எவ்வளவோ பிரச்சினைகள் ஏற்பட்டிருந்தும் எந்தவித சண்டித்தனமும், வாய் உளறலும் காண்பிக்கவில்லை. 

இன்னும் சில மாதங்களில், அதாவது 2021 இல் மீண்டும் ராஜபக்சவினர்களின் பக்கம் தாவுவார்கள். அதற்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்காகவே தலைவரின் ஒப்புதலுடன் இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளார்கள்.  

இவர்களது கொள்கை என்ன ? இத்தனை அதிகாரத்தை அனுபவித்தவர்களினால் குவிந்துகிடக்கின்ற சமூக பிரச்சினைகளை தீர்க்க முடிந்ததா ? 

இவர்கள் தூரநோக்கோடு செயல்பட்டிருந்தால் முஸ்லிம் மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் ஏற்பட்டிருக்குமா ? இவ்வாறெல்லாம் நடைபெறும் என்று ஊகிக்க தெரியாதவர்களையா நாங்கள் இவ்வளவு காலமும் தலையில் வைத்து சுமந்துகொண்டிருந்தோம் ? என்ற விடயங்களை இறைவன் நாடினால் எதிர்வரும் நாட்களில் விரிவாக ஆராய்வோம்.

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s