ஏன் இருபதை எதிர்க்க வேண்டும் ? திரைமறைவில் நடக்கும் “டீலிங்” என்ன?

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

கொழும்பு: இருபதாவது திருத்தத்துக்கான வாக்கெடுப்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ன தீர்மானத்தினை மேற்கொள்ளப் போகின்றார்கள் ? எதிர்த்து வாக்களித்து பழக்கம் இல்லாத காரணத்தினால் இருபதுக்கும் ஆதரவளிப்பார்களா ?

அல்லது ஏதாவது அதிசயம் நிகழ்வது போன்று எதிர்த்து வாக்களிப்பார்களா ? அல்லது எல்லோருக்கும் நல்லபிள்ளையாக நடுநிலை வகிப்பார்களா ? என்ற பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. 

குறிப்பாக இருபதாவது திருத்தத்தினை எதிர்த்து நீதிமன்றம் சென்ற முஸ்லிம்களின் பிரதிநிதியான முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் நிலைப்பாடு என்ன ?

“இருபதாவது திருத்தமானது 1978 இல் ஜே.ஆர் ஜெயவர்தனவினால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதியின் அதிகாரத்தை போன்றதுதானே ! இதனை ஏன் எதிர்க்க வேண்டும்” ? என்று சிலர் முட்டாள்தனமாக தர்க்கம் செய்கின்றனர். 

அன்று ஜே.ஆர் ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக இருந்தும் அந்த அதிகாரம் அவரை சர்வாதிகாரியாக்கியது. “போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம்” என்று சர்வாதிகாரப்போக்கில் செயல்பட்டார். 

ஜே.ஆரின் சர்வாதிகார செயல்பாடானது தமிழ் மக்களை அதிகம் பாதிப்படைய செய்ததுடன், பாரிய யுத்தம் ஒன்றுக்கு அவர்களை அழைத்துச் சென்றது. ஜே.ஆர் மட்டுமல்லாது அவருக்கு பின்பு ஆட்சி செய்த ஏனைய ஜனாதிபதிகளினது முழு கவனமும் தமிழ் மக்கள் மீது இருந்ததனால் சர்வாதிகாரத்தின் பிரதிபலிப்பினை முஸ்லிம்களால் உணர முடியவில்லை. 

ஆனால் 2010 க்கு பின்பு ஆட்சியாளர்களின் சர்வாதிகாரப் போக்கினை முஸ்லிம்களும் உணர தொடங்கினார்கள். 

அது மட்டுமல்லாது இன்று உள்ள நிலைப்பாடு முற்றிலும் மாறுபட்டது. அதாவது சர்வாதிகாரப் போக்குடைய முன்னாள் இராணுவ அதிகாரியின் கையில் இந்த அதிகாரம் செல்ல இருக்கின்றது. 

ஒரு சிவில் சமூகத்தை சேர்ந்தவர்களை சர்வாதிகாரியாக மாற்றிய அதி உச்ச அதிகாரமானது இராணுவ துறையை சார்ந்தவரின் கையில் சிக்கினால் நிலைமை என்னாகும் என்று நாங்கள் சிந்திக்க வேண்டும்.  

அதிகாரம் குறைவாக இருக்கின்ற நிலையிலேயே சிவில் அதிகாரிகள் கடமை புரிகின்ற பதவிகளுக்கு முன்னாள் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டு நாடு இராணுவ ஆட்சியை நோக்கி செல்கின்றது.

இந்த நிலையில் இருபதாவது திருத்தத்துக்கு முஸ்லிம் எம்பிக்கள் ஆதரவு வழங்குவதானது இராணுவ ஆட்சிக்கு மகுடம் அணிவிப்பது போன்றதாகும். 

அதாவது முஸ்லிம்களுக்கெதிரான அத்தனை நடவடிக்கைகளையும் முழுமைப்படுத்துவதுடன், கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற போர்வையில் முஸ்லிம்களின் நிலங்களை இலகுவாக கையகப் படுத்திக்கொள்ள முடியும்.   

முஸ்லிம் மக்களை பிழையாக வழிநடத்தும் நோக்கில், நாங்கள் இருபதுக்கு ஆதரவாக வாக்களித்தால் மட்டும் சமூகம் பாதுகாக்கப்படும் என்றும், வாக்களிக்காவிட்டால் அது சமூகத்துக்கு பாதிப்பாக அமையும் என்றும் எமது உறுப்பினர்கள் கூறுவார்களேயானால், அது திரைமறைவில் இடம்பெறுகின்ற பணப் பெட்டிகளின் பரிமாற்றத்தின் பிரதிபலிப்பே தவிர, வேறு ஒன்றுமில்லை. 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s