கொழும்பு: பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை தலைமறைவாக இருப்பதற்கு உதவி புரிந்து அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (19) பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
அண்மையில் கொஹுவள – களுபோவில பகுதியில் உள்ள வீட்டிலிருந்த ரிஷாட் பதியுதீன் எம்.பி., அங்கிருந்து தெஹிவளை, எபினேசர் வீதியிலுள்ள குறித்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அவர் வந்துள்ளதாக, அஜித் ரோஹண தெரிவித்தார்.
ரிஷாட் பதியுதீனை கைது செய்யுமாறு உத்தரவிடுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர், ரிஷாட் பதியுதீன் எம்.பி. குறித்து விழிப்புடன் இருக்குமாறு, சிஐடி அதிகாரிகளுக்கு சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா அறிவுறுத்தியதாக, சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி, அரச சட்டத்தணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, இன்று (19) அதிகாலை கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது, மீள்குடியேற்ற அமைச்சராக இருந்த ரிஷாட் பதியுதீன், 222 இ.போ.ச. பஸ்கள் மூலம் இடம்பெயர்ந்த வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதன் மூலம் தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான குறித்த அமைச்சின் கீழிருந்த ரூபா 95 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை முறைகேடாக பயன்படுத்தியமை மற்றும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் பேரில், 1981ஆம் ஆண்டு இலக்கம் 15 ஜனாதிபதித் தேர்தல் சட்டத்தின் 82 (1) பிரிவுக்கு அமைய, குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டு தொடர்பில், அப்போதைய கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அப்போதைய மீள்குடியேற்ற திட்ட பணிப்பாளர் சம்சுதீன் மொஹமட் யாசீன், மீள்குடியேற்ற திட்ட முன்னாள் கணக்காளர் அழகரத்னம் மனோரஞ்சன் ஆகிய மூன்று பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.