யார் இந்த ஜெசிந்தா ஆர்டெர்ன்?

New Zealand Prime Minister Jacinda Ardern (L) visits a building site to announce Labour"s housing policy during campaigning in Auckland, New Zealand,

கிரைஸ்ட் சர்ச் தீவிரவாத தாக்குதல், எரிமலைச் சீற்றம், இப்போது கொரோனா தொற்று என அனைத்திலும் நியூசிலாந்து நாட்டை வழிநடத்தி சென்ற ஜெசிந்தா ஆர்டெர்ன் அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது முதல் குழந்தையை பெற்றெடுத்த ஜெசிந்தாவை பார்த்து, உங்களால் தாயாக இருந்துகொண்டு, பொது வாழ்விலும் வென்று காட்ட முடியுமா என்று கேட்கப்பட்டது. இப்போது அந்தக் கேள்வியே நகைப்புள்ளாகி இருக்கிறது.

ஜெசிந்தா ஆர்டெர்ன் தலைமையிலான தொழிலாளர் கட்சி அந்த நாட்டில் நடந்த பொதுத் தேர்தலில் 120 இடங்களில் 60க்கும் மேலான இடங்களைப் பெற்று பெரும்பான்மை வெற்றியைப் பெற்றுள்ளது.

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகள் பெரும்பாலும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், ஜெசிந்தாவின் தொழிலாளர் கட்சி 49 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதன் மூலம், நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையுடன் இவர் மீண்டும் ஆட்சியமைக்கிறார்.

1980ஆம் ஆண்டு ஹேமில்டனில் பிறந்த ஜெசிந்தா, தன்னுடைய குழந்தை பருவத்தை சிறு கிராமப்புற பகுதிகளில் கழித்தார். அவருடைய தந்தை காவல்துறை அதிகாரியாக இருந்தார். அவரது தாய் பள்ளிகளில் சமையலர் பணி செய்து வந்தார்.

சிறு கிராமங்களில் அவர் பார்த்து வளர்ந்த வறுமை, அவரது அரசியல் சிந்தாந்தத்தை வடிவமைத்தது. தனது 17 வயதில் தொழிலாளர் கட்சியின் ஆதரவாளரானார் ஜெசிந்தா.

அரசியல் மற்றும் பொது தொடர்புத் துறையில் பட்டம் பெற்ற அவர், அப்போதைய பிரதமர் ஹெலன் கிளர்க்கிடம் பணிபுரிய தொடங்கினார். 2006ல் பிரிட்டர் கேபினட் அலுவலகத்துக்காக பணிபுரிந்தார்.

பின்னர் 2008ஆம் ஆண்டு நியூசிலாந்து திரும்பிய அவர், நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது குழந்தை வறுமை ஒழிப்பு, ஒருபாலினத்தவர்களின் உரிமைகள் தொடர்பான சட்ட மசோத்தக்களை ஆதரித்தார்.

2017ஆம் ஆண்டு நியூசிலாந்து தேர்தல் நடக்கவிருந்த ஏழு வாரங்களுக்கு முன்புதான் ஜெசிந்தா தொழிலாளர் கட்சியின் தலைவரானார். அப்போது அவர் வெற்றிபெற வாய்ப்பு குறைவு என்றே கூறப்பட்டது.

அவருக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும், அந்நாட்டின் தேசியவாத கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தார் ஜெசிந்தா.

அதனை தொடர்ந்து அவர் பிரதமராக இருக்கும்போது குழந்தை பெற்றுக் கொண்டது, உலகத்தை அவர் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தது.

குழந்தை பெற்றெடுத்த ஆறு வாரங்களில் ஜெசிந்தா பணிக்கு திரும்பினார்.

“நான் ஒன்றும் ‘சூப்பர் வுமன்’ அல்ல, என் கணவர் வீட்டில் இருந்து குழந்தையை பார்த்துக் கொள்வதால் மட்டுமே என்னால் பணியை பார்க்க முடிகிறது. நானும் சாதாரண பெண்தான். எனக்கு சூப்பர் உமன் போன்ற தோற்றம் தேவையில்லை. பெண்கள் எல்லாம் அப்படி இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது,” என்று 2018ஆம் ஆண்டு த ஃபினான்சியல் டைம்ஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த ஜெசிந்தா தெரிவித்திருந்தார்.

2019ஆம் ஆண்டு கிரைஸ்ட்சர்ச் தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை அவர் அணுகிய விதம், ஜெசிந்தாவை வலிமையான, அதே நேரத்தில் இரக்கமுள்ள தலைவராக உலக அரங்கில் பதிவு செய்தது.

கொலையாளியின் பெயரைக்கூட வெளிப்படையாகக் கூற மறுத்த ஜெசிந்தா, அவர் நியூசிலாந்து மக்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றும், அவரை அந்நாடு ஏற்காது என்றும் தெரிவித்தார்.

அடுத்த ஒரு சில நாட்களில் அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது உறவினர்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

அதோடு, அந்நாட்டின் துப்பாக்கி வைத்திருத்தல் தொடர்பான சட்டங்களை மாற்றி அமைத்தார். இதனால், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் துப்பாக்கிச் சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற குரல் எழுந்தது.

பின்னர் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், அந்நாட்டில் எரிமலைச் சீற்றம் சம்பவம் நிகழ, அதில் ஆஸ்திரேலியா, அமெரிக்க நாட்டினர் உள்பட 17 பேர் உயிரிழந்தனர். அப்போதும் ஜெசிந்தா தனது பொறுப்பை சரியாக செய்தார் என்று பாரட்டப்பட்டது.

அதற்கு அடுத்து வந்த கொரோனா பெருந்தொற்றை நியூசிலாந்து கையாண்ட விதத்திற்கு உலகளவில் ஜெசிந்தாவுக்கு பாராட்டுகள் குவிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s