– நூருல் ஹுதா உமர்
கல்முனை மாநகர சபையில் இன்று காலை பிரதம சுகாதார வைத்திய அதிகாரியை அவரது காரியாலயத்தில் வைத்து சிற்றூழியர் ஒருவர் தகாத வார்த்தைகளை கொண்டு பேசியமையால் சிறிய சலசலப்பு உண்டானது .இது தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கல்முனை மாநகர சபையில் சிற்றூழியராக கடமையாற்றும் மருதமுனை பிரதேசத்தை சேர்ந்த ஹபீல் என்பவர் சில தினங்களாக கல்முனை மாநகர சபையின் சுகாதார பிரிவின் பொறுப்பாளர் மற்றும் சுகாதார பிரிவினரை விமர்சித்து வருவதாக தகவல் அறிந்த கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜி.கா.மு. அர்சத் காரியப்பர் அவர்கள் குறித்த நபரிடம் விடயம் தொடர்பில் வினவி அது சம்பந்தமாக ஆராய தனது அலுவலக அறைக்கு இன்று காலை அழைத்தபோது அங்கு சென்ற சிற்றூழியர் ஹபீல் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் கூச்சலிட்டு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
இருதரப்பினருக்கும் இடையில் மாநகர சபையில் உச்சகட்ட வாய்த்தர்க்கம் நடைபெற்றதுடன் இறுதியாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜி.கா.மு. அர்சத் காரியப்பர் கல்முனை பொலிஸில் இது தொடர்பில் முறைப்பாடொன்றையும் பதிவு செய்துள்ளார். விடயமறிந்த கல்முனை மாநகர சபையின் ஊழியர்கள் அநாகரிகமாக நடந்து கொண்ட சிற்றூழியர் ஹபீலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட ஆயத்தங்களை முன்னெடுத்தனர்.
சம்பங்களை அறிந்துகொண்ட கல்முனை மாநகர சபை ஆணையாளர் எம்.சி. அன்ஸார், இதுதொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிமொழி வழங்கியதையடுத்து பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதை தவிர்த்து மாநகர ஊழியர்கள் தமது பணிக்கு திரும்பினர்.
கல்முனை மாநகர சபையின் நிர்வாகம் ஒழுங்கில்லாமல் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளுராட்சி ஆணையாளர், கிழக்கு மாகாண ஆளுநர், குறித்த துறைக்கு பொறுப்பான அமைச்சுக்கள் என பலருக்கும் அண்மையில் பல கடிதங்கள் பொதுமக்கள் மற்றும் சமூகநல அமைப்புக்களினால் அனுப்பப்பட்டிருந்ததும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது.