– நூருல் ஹுதா உமர்
மாளிகைக்காடு அந்-நூர் ஜும்மா பள்ளிவாசலின் ஜனாஸா மையவாடியின் பின்புற மதில் கடலரிப்பினால் பாதிப்படைந்து உடைந்து விழக்கூடிய அபாயகரமான நிலையில் உள்ளதாலும் இதன்காரணமாக அடக்கம் செய்யப்பட்ட ஜனாஸாக்கள் தோன்டப்படக்கூடிய வாய்ப்புள்ளதாலும் அந் நூர் ஜும்மாப்பள்ளிவாசலின் தலையீட்டினால் அதற்கான தற்காலிய தீர்வொன்றை பெரும் நோக்கில் மண்மூட்டைகள் அடுக்கி மதில் உடைந்து விழாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டமொன்று நேற்று (23) மாலை குறித்த பிரதேசத்தில் நடைபெற்றது.

காரைதீவு பிரதேச செயலக கரையோரம் பேனலுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர் மப்ரூர் அவர்களின் கண்காணிப்பிலும், ஆலோசனையில் நடைபெற்ற மேற்படி வேலைத்திட்டத்தில் பிரதேச சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசலின் நிர்வாகிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு தொண்டர் அடிப்படையில் இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தனர்.
குறித்த பிரதேசத்திற்கு அண்மையில் (20) விஜயம் செய்திருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் காரைதீவு பிரதேச செயலாளரோடு தொடர்புகொண்டு உடனடியாக அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்ததோடு மேலதிக நடவடிக்கைகளை கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தோடு தொடர்புகொண்டு எடுப்பதாகவும் கூறியிருந்தார். இருந்தாலும் கடலரிப்பு உச்சநிலையில் இருப்பதனால் ஜனாஸாக்கள் தோண்டப்படுகின்றது. அண்மையிலும் இவ்வாறு ஜனாஸாக்கள் வெளிவந்தது. இதனால் பல அசௌகரியங்கள் ஏற்பட்டு வருவதனால் அதிகாரிகள் உடனடியாக கவனத்தில் எடுத்து நிரந்தர தீர்வை பெற்றுத்தர முன்வரவேண்டும் என மாளிகைக்காடு பொதுமக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை முன்வைக்கின்றனர்.
