நீர்கொழும்பு: போலி வீசா மூலம் கனடா செல்ல முயற்சித்த 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இக்கைது நேற்று (16) இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் போலி வீசாவை பயன்படுத்தி, கட்டார் ஊடாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 7 ஆண்களும் 5 பெண்களும் குற்றப்புலனாய்வு பிரிவின் கட்டுநாயக்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்தேகநபர்கள் கிரிபத்கொடை, பமுணுகம, கேகாலை, மாவனல்லை, பொல்கஹவெல, அலவத்துகொடை, நுகேகொடை, பிலியந்தலை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட பெண் சந்தேகநபர்கள் இடையே, போலி வீசா மூலம் வெளிநாடு செல்ல திட்டம் தீட்டிய பெண் ஒருவர் இருந்ததோடு, அப்பெண் சந்தேகநபரினால் 5ஆவது ஒழுங்கை, கந்தெவத்த வீதி, பத்தரமுல்லை எனும் முகவரியில் மொழி பயிற்சி மற்றும் வீசா வழங்கும் நிறுவனமொன்று நடத்தப்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இச்சந்தேகநபர்கள் நேற்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து, குறித்த திட்டத்தை தீட்டிய பெண் சந்தேகநபருக்கு எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய சந்தேகநபர்கள் தலா 600,000 ரூபா கொண்ட சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.