இதுவரை சிறுவர்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த வயதெல்லையை அதிகரிக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது. நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவையில் நீதியமைச்சர் அலி சப்ரி முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டம் மற்றும் இளம் குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலை) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் தொடர்பில், குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இன்று (17) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இதில், 18 வயதுக்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் என அடையாளப்படுத்தி சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கு, நீதியமைச்சர் அலி சப்ரி யோசனை முன்வைத்துள்ளார்.
அத்துடன், 18 – 22 வயதுக்குட்பட்டவர்கள் இளைஞர்கள் என அடையாளப்படுத்தி, சிறுவர் இளம் குற்றவாளிகள் (சீர்திருத்தும் பாடசாலை) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த பிரிந்துரைகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது
சிறுவர் மற்றும் இளைஞர்கள் தொடர்பான கட்டளைச் சட்டத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, 14 வயதிற்கு குறைந்தவர்கள் சிறுவர்கள் என்ற ரீதியில் அர்த்தப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஆயினும், இளம் குற்றவாளிகள், பயிற்சி பாடசாலை தொடர்பான கட்டளைச் சட்டத்திற்கு அமைவாக 16 – 22 வயதிற்கு உட்பட்டவர்கள் இளைஞர்கள் என்ற ரீதியில் அர்த்தப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 16 வயதிற்கு குறைந்த சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் மூலம் நல்வழிப்படுத்தும் செயற்பாடுகளுக்காக நன்னடத்தை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் உறுதி செய்யப்பட்ட நன்னடத்தை பாடசாலைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன், 16 வயதிற்கு மேற்பட்ட சிறுவர்களினால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பில் நீதிமன்றத்தினால் சிறையிலடைத்தல் அல்லது இளம் குற்றவாளிகளுக்கான பயிற்சி பாடசாலைகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆயினும் சிறுவர் உரிமை தொடர்பான பிரகடனத்தின் ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக, 18 வயதிற்கு குறைந்தவர்களை சிறையில் அடைத்தல், தண்டனை வழங்குதல் போன்றவை மேற்கொள்ள கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, இந்த சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில் 18 வயதிற்கு குறைந்தவர் சிறுவர் என்ற ரீதியில் அர்த்தப்படுத்துவதற்காக சிறுவர் மற்றும் இளைஞர் தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும், சிறுவர் பிரிவு வயதை 18 – 22 வயதிற்கு உட்பட்ட நபராக அர்த்தப்படுத்துவதற்காகவும் இளம் குற்றவாளிகள் (பயிற்சி பாடசாலை) தொடர்பான கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்கும் நீதி அமைச்சரினால் சமர்ப்பித்த பிரிந்துரைக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.