கொழும்பு: இலங்கையர்களின் ஒத்துழைப்புடன் புதிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றத்தில் இன்று மாலை அக்ராசன உரையை நிகழ்த்திய ஜனாதிபதி, தமது அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை ஜனாதிபதி கோட்டாபய வெளியிட்டார்.
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் 19ஆவது திருத்தத்தை முழுமையாக ரத்து செய்து, அதற்கு பதிலாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியலமைப்பை கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் இந்த அரசியலமைப்பு உருவாக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, புதிதாக கொண்டு வரப்படும் அரசியலமைப்பின் ஊடாக தற்போது நடைமுறையிலுள்ள தேர்தல் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
1978ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பில் இதுவரை 19ஆவது திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் (19) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 19ஆவது திருத்தம் ரத்து செய்யப்பட்டு, 20ஆவது திருத்தத்தை கொண்டு வர அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும், 19ஆவது திருத்தத்தை ரத்து செய்து, புதிய அரசியலமைப்பொன்றை கொண்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார்.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ள அதேவேளை, ஏனைய சமயங்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.