கொழும்பு: இம்முறை பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை, பாராளுமன்றத்தில் அமர்வதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

குறித்த சொத்துகள் மற்றும் பொறுப்புகள்  தொடர்பான அறிவிப்பு, மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பெரும்பாலான வேட்பாளர்களில் பலர், தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த விபரங்களை இதுவரை வழங்காதவர்கள், விரைவாகஅதனை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  அறிவித்துள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை பொதுத் தேர்தலில் வெற்றி பெறாத வேட்பாளர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளை பெற்றுக்கொள்வதற்கான இறுதித் திகதி எதிர்வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தோல்வியடைந்த வேட்பாளர்கள், வேட்புமனுக்களை ஏற்றுக்கொண்ட தினத்திலிருந்து 03 மாதங்களுக்குள் தங்களது சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டிருந்ததாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.