அதிகமான வாக்காளர்களைக்கொண்ட சம்மாந்துறை ஏன் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இழந்தது ?

ஒரு வெற்றிக்கும் தோல்விக்கும் பின்னணியில் பல காரணங்கள் இருக்கும். அதில் ஒருசிலதை மட்டும் அலசுவதானது எதிர்காலத்தில் அந்த குறைகளை களைவதற்கு உதவும்.

சம்மாந்துறையைவிட குறைந்த வாக்காளர்களைக்கொண்ட கிராமங்களிலுள்ள வேட்பாளர்கள் வெற்றிபெற்ற நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அதிகமான வாக்காளர்களைக்கொண்ட சம்மாந்துறை கிராமம் பிரதிநிதித்துவத்தை ஏன் இழந்தது என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

இதற்காக அம்மக்களை குறைகூற முடியாது. ஏனெனில் கல்முனைக்குடி, நிந்தவூர் மக்களைவிட சம்மாந்துறை மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளார்கள். 

விகிதாசார தேர்தல் முறையில் சொந்த கிராமத்து வாக்குகளினால் மட்டும் வெற்றிபெற முடியாது. கல்முனைக்குடி, நிந்தவூர், அக்கரைப்பற்று, பொத்துவில் வேட்பாளர்கள் தங்களது ஊர் வாக்குகளினால் மட்டும் வெற்றிபெறவில்லை என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.   

அன்வர் இஸ்மாயிலின் மறைவுக்கு பின்பு சம்மாந்துறையை சேர்ந்த அரசியல்வாதிகள் “ஊர்” என்ற பிரதேச வரையறைக்குள் முடங்கினார்களே தவிர, வெளியூர் தொடர்புகளை சரியாக பேணவில்லை.

அதாவது மர்ஹூம் அன்வர் இஸ்மாயில், ஹரிஸ், பைசல் காசிம் போன்றவர்கள் தங்களது கிராமத்தோடு மட்டும் நின்றுவிடாமல் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களோடும் தங்களது சொந்த கிராமங்கள் போன்று நெருக்கமான உறவுகளை பேணிவந்தார்கள்.

அதனை இன்றும் ஹரீஸ், பைசால் காசிம் போன்றோர்கள் தொடர்கின்றார்கள். அந்த உறவானது கட்சி என்ற வரையறைக்கு அப்பால் தனிப்பட்ட நட்பாக இருந்துவருகின்றது. அதில் ஒவ்வொரு ஊரிலுமுள்ள விளையாட்டு கழகங்கள், இளைஞர் அமைப்புக்கள் மற்றும் தனிப்பட்ட நட்புக்களும், கட்சி போராளிகளும் அடங்கும். இவ்வாறானவர்கள்தான் மக்களிடமிருந்து வாக்குகளை பெறுவதற்காக உழைக்கின்றவர்கள்.    

இவ்வாறான உறவுகளை ஹரீஸ், பைசல் காசிம் போன்றோர் தேர்தல் காலங்களில் மட்டும் தேடுவதில்லை. ஏனய காலங்களில் அவர்களது இன்பத்திலும், துன்பத்திலும் பங்கேற்பார்கள். இவ்வாறான வெளியூர்காரர்கள் தங்களை வந்து சந்திப்பதில் நீண்ட இடைவெளி ஏற்பட்டால், ஏன் அவர்கள் வரவில்லை என்று தேடிச்செல்வார்கள்.

மர்ஹூம் அன்வர் இஸ்மாயிலுக்கு பின்பு சம்மாந்துறையை சேர்ந்த எவரும் வெளியூர் உறவுகளை சரியாக பேணியதில்லை. அதாவது தான் போடியாராகவும், ஏனையவர்கள் வயல்காரர்கள் போன்ற மேட்டுக்குடி சிந்தனையே இதற்கு காரணமாகும். 

அத்துடன் கடந்த 2015 பொது தேர்தலில் சம்மாந்துறை வேட்பாளருக்கு சம்மாந்துறை தவிர்ந்து மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலிருந்தும் சுமார் 53,000 வாக்குகள் வழங்கப்பட்டது. வெற்றிபெற்றதன் பின்பு அவ்வேட்பாளர் அம்மக்களை திரும்பியும் பார்க்கவில்லை. 

பைசால் காசிம், ஹரீஸ் போன்றவர்கள் தனது கிராமத்தோடு மட்டும் நின்றுவிடாமல் சம்மாந்துறைக்கு பல உதவிகளை செய்தார்கள். ஆனால் பாராளுமன்றம் செல்வதற்கு வாக்குகள் வழங்கிய வெளியூர் மக்களுக்கு சம்மாந்துறை உறுப்பினர் என்ன செய்தார் ? 

அவர் எம்பிதானே ! பிரதி அமைச்சர் இல்லையே என்று காரணம் கூற முடியாது. தலைவரின் நிதியை கொண்டு ஏதாவது செய்து உறவுகளை பேணியிருக்கலாம். ஆனால் அத்தனையும் சம்மாந்துரையோடு மட்டும் முடங்கியது. 

ஒன்றும் செய்யாவிட்டாலும் பருவாயில்லை, உறவுகளை தொடர்ந்தார்களா ? போராளிகளை தேடினார்களா ? போன்ற கேள்விகளுக்கு விடை தேடுவது கடினம்.  

அத்துடன் இந்த தேர்தலுக்கான வேலைகள் ஆரம்பித்த உடனேயே “ஊருக்கு எம்பி வேண்டும்” என்று சம்மாந்துறையில் செய்துவந்த பிரச்சாரமானது ஏனய வேட்பாளர்கள் உள்ள ஊர்களில் தாக்கத்தினையும், அச்சத்தையும் ஏற்படுத்தியது. 

எனவேதான் மேற்கூறிய அடிப்படை குறைபாடுகளை களைவதன் மூலம் மட்டுமே எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்புரிமையை சம்மாந்துறையில் பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறில்லாது பிடிவாதமும், முரட்டுத்தனமும், மேட்டுக்குடி அரசியலும், பிரதேசவாத சிந்தனையும் மற்றும் குறைபாடுகளை களைய முற்படாமலும் இருந்தால் அது எதிர்காலங்களில் சம்மாந்துறை மக்களேயே பாதிக்கும்.

முகம்மத் இக்பால்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s