கல்முனைதொகுதியை வெற்றிகொள்வது யார் ? துரும்பு மருதமுனையின் கையிலேயே உள்ளது ?

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது

அம்பாறை மாவட்டத்தினை வெற்றிகொள்ளவேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்ற நாங்கள் கல்முனை தொகுதியை பற்றியும் அலசவேண்டி உள்ளது. 1988 மாகாணசபை தேர்தல் தொடக்கம் 2018 இன் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வரைக்குமான அனைத்து தேர்தல்களிலும் கல்முனை தொகுதியில் அமோக வெற்றி பெற்று கல்முனை தனது கோட்டை என்பதனை முஸ்லிம் காங்கிரஸ் ஒவ்வொரு முறையும் நிரூபித்துக்கொண்டே வருகின்றது.

அதுபோல் இந்த தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் எங்களது பிரார்த்தனையாகும். அதனால் 2015, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத்தேர்தல், உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஆகியவற்றுடன் ஒப்பீடு செய்து ஓர் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியுள்ளது.  

2015 பொதுத்தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு சாய்ந்தமருதின் பதிமூவாயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகள் அடங்கலாக முஸ்லிம் காங்கிரஸ் 24,992 வாக்குகளை பெற்றதுடன், தமிழ் அரசு கட்சி 10,847 வாக்குகளையும், மக்கள் காங்கிரஸ் 8,549 வாக்குகளையும் பெற்றது. 

இதில் வெற்றிபெற்ற முஸ்லிம் காங்கிரசுக்கும் இரண்டாம் இடத்துக்கு வந்த தமிழ் அரசு கட்சிக்கும் இடைப்பட்ட வாக்குகளின் வித்தியாசம் 14,145 ஆகும்.   

2018 உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்டு முஸ்லிம் காங்கிரஸ் 17,424 வாக்குகளையும், சாய்ந்தமருது சுயேற்சை குழு 13,239 யும், தமிழ் அரசு கட்சி 9003 யும், மக்கள் காங்கிரஸ் 7573 வாக்குகளையும் பெற்றது.  

2015 க்கு முன்பு நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் இரண்டாம் இடத்தை பெறுகின்ற கட்சிகளைவிட சுமார் பத்தாயிரத்துக்கு மேலான வாக்குகள் வித்தியாசத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெறுவது வழக்கமாகும்.  

ஆனால் சாய்ந்தமருதில் ஏற்பட்ட எழுச்சி போராட்டத்தின் விளைவாக கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சாய்ந்தமருதிலிருந்து முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கப்படுகின்ற வாக்குகள் சுயேற்சை குழுவுக்கு சென்றதனால் 4,185 வாக்குகள் வித்தியாசத்திலேயே முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிபெற்றது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் இது குறைவான வாக்கு வித்தியாசமாகும். 

சாய்ந்தமருதில் ஆறு வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டு ஏராளமான பணம் செலவளிக்கப்பட்டிருந்தும் 2,278 வாக்குகளையே முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டது. மு.கா வரலாற்றில் பெற்றுக்கொண்ட வாக்குகளுடன் ஒப்பிடுகையில் இது ஓர் பின்னடைவாகும்.  

வழமையாக தொண்ணூறு வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை வழங்குகின்ற சாய்ந்தமருதில் இம்முறை மு.கா சார்பாக வேட்பாளர் எவரும் நிறுத்தப்படவில்லை. அதாவது முஸ்லிம் காங்கிரசின் எதிரிகளுக்கு அங்கே தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சாய்ந்தமருது எழுட்சிக்கு முன்பு இருந்ததுபோன்று மு.காங்கிரசுக்கு ஆதரவான நிலைப்பாடுகளை அங்கு காணமுடியவில்லை. 

தற்போது சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான அணியினருக்குள் பிளவுகள் ஏற்பட்டிருந்தாலும், அது முஸ்லிம் காங்கிரசுக்கு ஆதரவான அலையாக மாறவில்லை. மாறாக மயோன் முஸ்தபாவின் பக்கமே அந்த வாக்குகள் திரும்பியுள்ளது. 

அத்துடன் இந்த தேர்தலில் சாய்ந்தமருது சுயேற்சை குழுவினர் அதாஉல்லாவுடன் இணைந்து போட்டியிடுவதனால் கல்முனை தொகுதியின் ஏனைய ஊர்களில் உள்ள தேசிய காங்கிரசின் வாக்குகளையும் சேர்த்து கணிக்கவேண்டி உள்ளது.  

கடந்த 2018 உள்ளூராட்சிமன்ற தேர்தலில் சாய்ந்தமருது எழுட்சியின் காரணமாக கல்முனை பறிபோகலாம் என்ற அச்சத்தினால் கல்முனைக்குடியில் மு.காங்கிரசின் அலை அதிகமாக இருந்தது. இதற்கு ஐ.தே கட்சியினர்களின் நேரடி ஒத்துழைப்பும் இருந்தது. 

ஆனால் இம்முறை கல்முனைக்குடியில் மக்கள் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ் ஹமீதும், ஜவாதும் களமிறங்கியிருப்பதனால் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பெற்றதுபோன்று இந்த தேர்தலிலும் ஒட்டுமொத்த வாக்குகளையும் எதிர்பார்க்க முடியாது. 

அத்துடன் கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலுடன் ஒப்பிடுகையில் இம்முறை மருதமுனையில் மு.காங்கிரசின் வாக்கு வங்கியில் சரிவினை காணக்கூடியதாக உள்ளது. அங்கு தேசிய காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட சொற்ப வாக்குகள் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பானது மு.காங்கிரசிலிருந்து சென்றதாகும்.        

இவைகள் ஒருபுறமிருக்க, கல்முனையில் இரண்டாவது சக்தியாக இருக்கின்ற தமிழர்களின் பிரதேசங்களில் கருணா அம்மானின் எழுட்சி அதிகரித்து காணப்படுகின்றது. 

முஸ்லிம் மக்களுக்கெதிரான விசம பிரச்சாரமும், வாக்குறுதிகளுமே இதற்கு காரணமாகும். கல்முனையை கைப்பேற்ற வேண்டும் என்ற இலட்சியத்துடன் கருணா தலைமையில் கல்முனை தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளனர். 

கடந்த காலங்களை போலல்லாமல் இந்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்களிக்கும் வீதம் அதிகரிக்கும் என்றும், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக முஸ்லிம்களின் வாக்குவீதம் குறைவடையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. 

இதனால் வழமைபோன்று முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை தொகுதியை வெற்றிபெறுவதென்றால் அது மருதமுனை மக்களின் கையிலேயே தங்கியுள்ளது. மருதமுனை மக்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு அதிகப்படியான வாக்குகளை செலுத்தாவிட்டால் கல்முனை தொகுதியை கைப்பேற்றுவது கருணா அம்மானா அல்லது தேசிய காங்கிரசா என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s