– முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்

காத்தான்குடி: புலிப்பயங்கரவாதிகளின் மெகா கொள்ளையை அடுத்து (முன்னைய ஆக்கத்தைப் பார்க்க) காத்தான்குடி பட்டினையை நோக்கி நகர்கிறது. 1990 மட்டக்களப்பு, கல்முனை பொலிஸ் நிலைய படுகொலைக்குப் பின்னர் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருள் சூழ்ந்துகொள்கிறது.
ஓட்டமாவடிக்கும், புனானைக்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் இராணுவத்திற்கும் புலிப்பயங்கரவாதிகளுக்கும் இடையில் சண்டை இடம்பெற்றுக்கொண்டிருந்ததால், நமது மக்களின் அவ்வழியூடான கொழும்பிற்கான போக்குவரத்தும் தடைப்பட்டது.
ஹஜ் யாத்திரைக்குச் சென்றவர்களின் வாகனங்களுக்கு அருகாமையில் மோட்டார் ஷெல்கள் வீழ்ந்து வெடித்துச் சிதறின. தொடர்ந்தும் கொழும்புக்குச் செல்லமுடியாத நிலையில் ஊர்திரும்பினர். ஆண்கள் ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்ஆ பள்ளிவாயலிலும், பெண்கள் சித்தீக்கிய்யா பெண்கள் அரபிக்கல்லூரியிலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.
மக்களிடம் பணமில்லை. சிலரிடம் பணமிருந்தும் வாங்குவதற்குப் பொருட்கள் இல்லை. அனைத்தையும் வடித்துத் துடைத்துச் சென்றுவிட்டனர் புலிகள்.
காத்தான்குடி கடைகள் கொள்ளையடிக்கப்பட்ட ஒரு வாரத்தில் புலிகளின் வரி அதிகாரியான ரன்ஜித் அப்பாவும், நியூட்டனும் காத்தான்குடிக்கு வந்து, 15 பேர்கள் கொண்ட ஓர் குழுவைச் சந்தித்து, கொள்ளையடிப்பு ஓர் தவறுதலாக இடம்பெற்ற சம்பவம் எனவும், அதற்காக தாங்கள் வருந்துவதாகவும், இனிமேல் முஸ்லிம்களுக்கு குறிப்பாக காத்தான்குடி மக்களுக்கு தாங்கள் எந்த இடைஞ்சல்களும் தரப்போவதில்லை எனவும் கூறிச்சென்றனர்.
பொலன்னறுவை ஊடான கொழும்பு போக்குவரத்து சீராகத நிலையில் கல்முனை ஊடாக கொழும்பை நோக்கி மக்கள் பயணித்தனர். தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்ட ஹாஜிகளும் கல்முனையூடாகவே கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
12.07.1990. வழமைபோல் பொழுது புலர்ந்தது. கொழும்பிலிருந்து வந்துசேர்ந்த காத்தான்குடி மக்கள் ஊருக்குச் செல்வதற்கு வாகனங்களைக் காத்துக்கொண்டு கல்முனையில் நிற்கின்றனர்.
பகல்வேளையை நெருங்கும் பொழுது கல்முனையிலிருந்து காத்தான்குடிக்குப் பயணித்தவர்கள், காத்தான்குடியை அடைவதற்கு இன்னும் 3 கி.மீ. தூரமே இருக்கும் நிலையில் குருக்கல்மடத்தில் வைத்து கடத்தப்படுகிறார்கள்.
அரிசி, மாவு, பருப்பு, சீனி, மண்ணெண்ணெய் பீப்பாய்கள் நிரம்பிய லொறிகள், வேன்கள் என வாகனங்னளையும் கடத்தினர்.

மணி என அழைக்கப்பட்ட சுந்தரம் லோகேஸ்வரன் (26-04-1973) மட்டக்களப்பு, கொம்மாதுறையைச் சேர்ந்த புலிப்பயங்கரவாதியின் தலைமையில்தான் இந்தக் கடத்தல் இடம்பெற்றது. இவன் 1995 இல் கொல்லப்பட்டதாக அறியப்படுகிறது.
ஒரு வாகனத்தில் ஏறி, இடம் இல்லாததால், காத்திருந்து பின்னர் மற்றுமொரு வாகனத்தில் பயணித்தவர்கள் ஊர் வந்து சேர்ந்துவிட்டார்கள். ஆனால் முன்னாள் வந்தவர்கள் ஊருக்கு வந்து சேரவில்லை.
இதேபோலதான் முன்னால் வந்தவர்கள் வந்து சேர்ந்துவிட்டார்கள், பின்னால் வந்தவர்கள் கடத்தப்பட்டார்கள்.
இரண்டு வாகனங்களையும் அதில் பயணித்தவர்களையும் கடத்திவிட்டு, ஒரு வாகனத்தை கடத்தாமல் அனுப்பும் தந்திரத்தில், சந்தேகம் வராத நோக்கில் புலிகள் மக்களைக் கடத்திக்கொண்டிருந்தனர்.
தந்தை-பிள்ளைகள், நானா-தம்பி, சகோதரன்-சகோதரி…. என்று காத்தான்குடி தன் உறவுகளை இழந்து கொண்டிருந்தது. எமது உறவுகள் கடத்தப்பட்டு வேறுவழியாக அழைத்துச் செல்லப்படுவதை அவ்வழியூடாகப் பயணித்தவர்களும் உறுதிப்படுத்தினர்.
மதியம் 3 மணிவரை கடத்தப்பட்ட 68 காத்தான்குடி முஸ்லிம் உயிர்கள் மரண புதைகுழியை நோக்கி அழைத்துச் செல்லப்பட்டன. கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில் வரிசையாக வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்கள். நிலத்தில் இரத்தம் உறைந்துபோய் வீழ்ந்துகிடந்த சடலங்களை ஓர் குழிக்குள் புதைத்துவிட்டு ஈழத்தாகத்தைத் தீர்த்துக்கொண்டனர் புலிப்பயங்கரவாதிகள்!
இன்னுமொரு மனித உரிமை அறிக்கையில் எண்ணிக்கை 68ஐ விட அதிகமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
குருக்கல்மடக் கடத்தலை தாங்கள் செய்யவில்லை எனவும், இராணுவமே செய்ததாகவும் புலிகள் மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர் மூலமாக காத்தான்குடிக்குச் பொய்ச் செய்தி ஒன்றினை அனுப்பி இருந்தனர்.
“எவரது கண்களுக்கும் புலப்படாது” என புலிகளால் கூறப்பட்ட அம்பாறை-கஞ்சிக்குடிச்சாறு புலிப்பயங்கரவாதிகளின் முகாமை மறைந்த இராணுவத் தளபதி டென்சில் கொபே கொடுவ தலைமையில் இழகுவாக தாக்கியழித்ததில் பல புலிகள் கொல்லப்படடார்கள். கனவிலும் எதிர்பார்த்திராத பாரிய இழப்பு புலிகளுக்கு.
இந்தத் தாக்குதலுக்கு முஸ்லிம்களே இராணுவத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், அதற்கு பரிகாரமாகவே இந்த ஆட்கடத்தல் கொலை இடம்பெற்றதாகவும் பின்னர் புலிப்பயங்கரவாதிகள் கூறியிருந்தனர்.
கடத்தப்பட்டவர்கள் உயிரோடிருந்தால் அவர்களை மீட்டெடுப்பதற்காக மட்டு கத்தோலிக்க ஆயர் மூலமாக அதிகப் பிரயத்தனத்தை அன்றைய ஊர்த் தலைவர்கள் மேற்கொண்டனர்.
எல்லாம் முடிந்துவிட்டது எனவும் உங்களது மத அனுஷ்டானங்களை இறந்தவர்களுக்கு செய்யுங்கள் எனவும் கண்ணால் கண்ட சாட்சிகளாக குருக்கல்மடத்தைச் சேர்ந்த தமிழ் சகோதரர்கள் இக்கொடூரத்தை புலிகள்தான் செய்ததாக ஓரிரு தினங்களுள் காத்தான்குடிக்கு செய்தி அனுப்பி இருந்தனர்.
காத்தான்குடி பிரதான வீதி, பொதுச் சந்தை கொள்ளையடிப்புக்குப் பின்னர் காத்தான்குடி சந்தித்த மற்றுமொரு சோகம் குருக்கல்மடக் கடத்தல்.
வீதிக்கு வீதி, வீட்டுக்கு வீடு அழுகைச் சத்தங்கள். மக்களின் உள்ளங்களில் தாங்க முடியாத சோகம். பல நாட்கள் தங்களை அறியாமலேயே இழந்த உறவுகளை நினைத்து அதிகமானவர்களின் முகங்களில் கண்ணீர் வடிந்தோடிக்கொண்டிருந்தது.
வெள்ளைக் கொடிகளாலும், வெள்ளை பொலித்தீன்களாலும் ஊர் சோகத்தை வெளிக்காட்டியது. கடத்தப்பட்டவர்களின் வீடுகளின் முன் வெள்ளைக் கொடிகள் தொங்கவிடப்பட்டிருந்தன.
கடத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களின் சிலரது புகைப்படங்ககள் சேகரிக்கப்பட்டு, காத்தான்குடி பிரதான வீதியில் மக்கள் முன் காட்சிப்படுத்தப்பட்டன.
தூக்கம் வந்ததா….? அன்றிலிருந்து காத்தான்குடி தூக்கத்தை இழந்து பல நாட்கள்!!
என்பிள்ளை வருவான், என் நானா, தம்பி வந்திடுவாங்க, எங்க வாப்பா வந்திடுவாரு என்று பல உறவுகள் காத்திருந்த பல இரவுகள் கரைந்து சென்றன.
கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டவர்களின் முழு விபரங்கள், சொத்துக்கள் எவையும் இதுவரையில் ஆவணப்படுத்தப்படவில்லை.
காத்தான்குடி சந்தித்த ஆழ்ந்த துயரங்களில் இச்சம்பவமும் உள்ளடங்கும்.
காத்தான்குடி 1, ஜின்னாஹ் ஹாஜியார் குடும்பத்துடன் ஒன்றுக்கு ஒன்றாகப் பழகி அவர்களது அன்புக்கும், உணவுக்கும் அடிமைப்பட்டவன்தான் ரன்ஜித் அப்பா. குருக்கல்மட சம்பவத்திற்கு முன்னர் ரன்ஜித்தை அழைத்து, “முஸ்லிம்கள் மீது நீங்கள் எல்லை மீறுகிறீர்கள். தயவு செய்து இந்த செயற்பாட்டை நிறுத்துங்கள்” என ஜின்னாஹ் ஹாஜியார் பணிவான வேண்டுகோளை விடுத்தார். சரி என்று கிளம்பிய ரண்ஜித் 03-08-1990 இரவு 8 மணியளவில் ஜின்னாஹ் ஹாஜியாரின் வீட்டுக்கு வருகிறான்.
இன்ஷாஅல்லாஹ் மீண்டும் சந்திப்போம்
- முகமட் ஜலீஸ், ஐக்கிய இராச்சியம்
One thought on “தூக்கத்தை இழந்த காத்தான்குடி”