பீஜிங்: சீனாவில் தோன்றி பெருந்தொற்றாக மாறி உலகெங்கிலும் பரவி ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்ட கொரோனா வைரஸை அடுத்து, மற்றொரு பெருந்தொற்றாக மாறக்கூடிய ஒரு புதிய காய்ச்சல் சீனாவில் விஞ்ஞானிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் பன்றிகளால் சுமக்கப்படுகிறது. ஆனால் இது மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சீன விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அதோடு இந்த வைரஸ் மேலும் மாற்றமடையக்கூடும் என்பதால் அது எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடும். மேலும் உலகளவில் பரவி பெரும் வெடிப்பை உண்டாக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
புதிய வகை பன்றி காய்ச்சல் வைரஸ் உடனடியாக பரவக்கூடியது இல்லை என்றாலும், இந்த வைரஸ் மனிதர்களைப் பாதிக்கக்கூடியது என்பதற்கான அனைத்து அடையாளங்களும் உண்டு என்பதால் மிகவும் நெருக்கமான கண்காணிப்பு அவசியமாக உள்ளது. இந்த வைரஸ் புதியது என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் மக்களை எளிதில் தாக்கலாம். பன்றிகளில் வைரஸைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், பன்றித் தொழிலாளர்களை மிகவும் நெருக்கமாக கண்காணிப்பதை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்றும் தேசிய அறிவியல் அகாடமியின் புரோசிடிங்ஸ் இதழில் சீன ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.