குருநாகல்: இலங்கை பல்லின சமூகம் வாழும் நாடு. ஒரு
மாகாணத்தை ஒரு தரப்பினர் மாத்திரம் உரிமை
கொண்டாடுவது தவறானதாகும். தெற்கில்
பிறந்தவருக்கும், வடக்கில் பிறந்தவருக்கும்
சமவுரிமை உண்டு. ஒரு இனத்திற்கு மாத்திரம்
முக்கியத்துவம் வழங்கி, தேசியத்தை
கட்டியெழுப்புவது எமது நோக்கமல்ல என
தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, மதம்,
மற்றும் மத தலைவர்களை அவமதிக்கும்
விதத்தில் தேர்தல் பிரச்சாரங்களை
முன்னெடுப்பதை அரசியல்வாதிகள்
தவிர்த்துக் கொள்ளவேண்டும்.

கர்தினால் ஆண்டகை தொடர்பில்
எதிர்தரப்பினர் குறிப்பிட்டுள்ள கருத்து
கவலைக்குரியது. மெல்கம் ரஞ்சித் கர்தினால்
ஆண்டகை அரசியல்வாதிகளுக்கு சார்பாக
செயற்படவில்லை என்பதை உறுதியாக
குறிப்பிட முடியும் எனவும் குறிப்பிட்டார்.
குருநாகல் – தலவத்தேகெதர பகுதியில் நேற்று
இடம்பெற்ற ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில்
கலந்துக் கொண்டு உரையாற்றுகையில்
பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது, இலங்கை
பல்லின சமூகம் வாழும் நாடு. அனைத்து இன
மக்களின் உரிமைகளும்
பாதுகாக்கப்பட்டுள்ளது. தெற்கில் பிறந்தவர்
வடக்கிலும், வடக்கில் பிறந்தவர் தெற்கிலும்
வாழ்வதற்கு உரிமை உண்டு. ஒரு
மாகாணத்தை ஒரு இனத்திற்குரியது என்று
எவராலும் உரிமைக் கொண்டாட முடியாது.
என்பதை மிக தெளிவாக குறிப்பிட வேண்டும்.