றியாத்: சவூதி அரேபியாவில் கொரோனா வைரஸுக்கு எதிராக அமுல்படுத்தப்பட்டிருந்த தேசிய அளவிலான ஊரடங்கு நேற்று அகற்றப்பட்டது. எனினும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. அனைத்து பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகளும் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோதும் சர்வதேச பயணங்கள் மற்றும் சமய யாத்திரைகள் மீதான தடை தொடர்ந்து நீடிக்கிறது. இதில் புனித மக்கா நகரில் உள்ள பள்ளிவாசல்களும் நேற்று திறக்கப்பட்டன.
எனினும் வரும் ஜூலை இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆண்டு ஹஜ் கடமை பற்றி சவூதி நிர்வாகம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தோனேசியா, மலேசியா உட்பட ஒருசில நாடுகள் ஏற்கனவே இந்த ஆண்டு ஹஜ் கடமைக்கு தமது மக்களை அனுப்புவதில்லை என்று தீர்மானித்துள்ளன. வசதி படைத்த அனைத்து வயதான முஸ்லிம்களும் வாழ் நாளில் ஒரு தடவை நிறைவேற்ற வேண்டிய ஹஜ் கடமைக்கு பொதுவாக உலகெங்கும் இருந்து 2.5 மில்லியன் யாத்திரிகர்கள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சவூதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 155,000ஐ நெருங்கி இருப்பதோடு 1,230 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் தொற்று தீவிரம் அடைந்ததை அடுத்து கடந்த மார்ச் மாதம் 24 மணி நேர ஊரடங்கு உட்பட கடும் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.