கொழும்பு: கருணா அம்மான் முன்வைத்துள்ள
கருத்துக்கள் பாரதூரமானதாகும். 2000 – 3000
இராணுவ வீரர்களை கொன்றதாகக் கூறுவது
நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டத்திற்கு
முரணானதாகும். எனவே அவரை மனித கொலையுடன்
தொடர்புபட்ட சட்டத்தின் கீழ் கைது செய்ய
முடியும். இதற்கான நேரடியாக நடவடிக்கையை
முன்னெடுக்குமாறு ராவணா பலய அமைப்பின்
தலைவர் இத்தேகந்த சுததிஸ்ஸ தேரர்
தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை ஊடகவியலாளர்
சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும்
கூறுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை
விடவும் இது மிகப் பாரதூரமானதாகும்.
இந்த சம்பவம் மாத்திரமின்றி இதே போன்று
இவர் இன்னும் பல மனிதப்படுகொலைகளுடன்
தொடர்புபட்டவராவார். எனவே தற்போது
அவருக்கு எதிராக சட்டத்தை
நடைமுறைப்படுத்த முடியும்.
தான் செய்த குற்றத்தை அவரே ஒத்துக்
கொண்டுள்ளார். சஹரானைப் போன்றே
இவரும் மனிதப் படுகொலையைச்
செய்துள்ளார்.
தேர்தல் களத்தில் இருந்து கொண்டு
இவ்வாறான கருத்தினை பகிரங்கமாக
தெரிவிப்பதன் மூலம் மீண்டும் தனி ஈழ
கோரிக்கையை முன்வைக்கின்றாரா என்ற
சந்தேகம் எழுகின்றது.
எனவே ஜனாதிபதி உள்ளிட்ட உயர்
அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கையை
துரிதமாக முன்னெடுக்குமாறு கோரிக்கை
விடுக்கின்றோம்.
நாட்டிலுள்ள சாதாரண மக்களின் பிள்ளைகளே
இராணுவ வீரர்களாக யுத்த களத்திற்குச்
சென்றனர். அவர்களே எல்.டி.டி.ஈ. பயங்கரவாத
குழுவுக்கு எதிராக முகாம் அமைத்தார்கள்.
அவ்வாறான அப்பாவிகள் 2000 – 3000 பேரை
ஒரே நேரத்தில் கொன்ற இவர் அரசியலில்
அங்கத்துவம் வகிக்க முடியுமா?
கொலைகாரரொருவர் பாராளுமன்ற
உறுப்பினராக இருக்க முடியுமா? நாட்டின்
சட்டத்தை சவாலுக்குட்படுத்திய இது போன்ற
நபர்களுக்கு அரசியலில் வாய்ப்பளிக்க
முடியுமா? எனவே கருணா அம்மானுக்கு ஒரு
விடயத்தைக் கூற விரும்புகின்றேன். முன்னரை
போல தற்போது விளையாட முடியாது. காரணம்
தேசிய பாதுகாப்பை ஸ்திரப்படுத்தக் கூடிய
தலைவர் உருவாகியுள்ளார்.