நூருல் ஹுதா உமர்

அட்டாளைச்சேனை: அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலங்குளம் கிராம மக்கள் தேசிய காங்கிரஸை ஆதரிக்க முடிவு செய்துள்ளனர். கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு பகிரங்க ஆதரவை தெரிவித்துவந்த இக்கிராம மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏமாற்று கதைகளையே கூறிவந்தமையாலும் அக்கிராம மக்களுக்கு தேவையான விடயங்களில் கரிசனை செலுத்தாமையாலும் இந்த முடிவுக்கு அந்த மக்கள் வந்துள்ளனர்.

எனது இசங்கனிச்சீமை கிராமத்திற்கு அண்மைய கிராமமான ஆலங்குளம் கிராமம் எமது அயல் பிராந்திய உறவுகளுடன் அன்புடன் செயற்பட்டாலும் நிர்வாக ரீதியாக பிரிந்திருக்கும் இவ்விரு கிராமங்களையும் இத்தேர்தலில் ஒன்றிணைத்து பயணிக்க வேண்டிய தேவை உள்ளது என அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யுப் தெரிவித்தார்.
.
ஆலங்குளம் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் கடந்த காலங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அக்கிராமத்துக்கு நடந்த அநீதிகளுக்காகவும், முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களை பலப்படுத்த வேண்டும் என்பதனாலும் தேசிய காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்துகொண்ட அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரீ.எம் ஐய்யுப் அவர்கள் மேற்படி கருத்து தெரிவித்தார்.
.
மேலும் அங்கு பேசிய அவர், இக்கிராமத்தின் இளைஞர்கள், முக்கிய பிரமுகர்கள் தேசிய காங்கிரசின் கரத்தை பலப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் தங்களையும் இன்றிலிருந்து அர்ப்பணித்துள்ளனர். எதிர்வரும் தினங்களில் இக்கிராமத்தில் மீதமுள்ள கிராமத்தை நேசிக்கக் கூடியவர்கள், தலைமை தாங்கக்கூடியவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து தேசிய காங்கிரஸின் பக்கம் செயற்படுவதாக ஆலங்குளம் ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் வாக்குறுதி அளித்துள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.