ஜும்ஆ தொழுகையை நிறைவேற்றுவது தொடர்பில் அகில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வழிகாட்டல்கள்

கொழும்பு: ஜும்ஆவை நிறைவேற்றுவது மார்க்கத்தில் மிகமுக்கிய கடமைகளில் ஒன்றாகும். அதனை நிறைவேற்றுவதற்கு மார்க்கத்தில் பல வழிகாட்டல்களும் நிபந்தனைகளுமுள்ளன. அவற்றைப் பேணிநடப்பது ஒவ்வொரு முஸ்லிமினதும் கடமையாகும். அத்துடன் தற்போது நிலவும் கொவிட் 19 அசாதாரண நிலையைக் கவனத்திற்கொண்டு சுகாதார அமைச்சு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வெளியிட்டுள்ள வழிகாட்டல்களைப்பேணி ஜும்ஆவை நிறைவேற்றுதல் வேண்டும்.

  1. கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்காக, மதஸ்தலங்களில் ஒன்றுகூடுவோரின் எண்ணிக்கையை சுகாதார அதிகாரிகள் மட்டுப்படுத்தியுள்ளதால் அதனை விட அதிக எண்ணிக்கையுடையோர் ஒன்றுகூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.
  2. ஜும்ஆக் கடமை நிறைவேறுவதற்கு நிரந்தரக் குடியிருப்பாளர்கள், பருவவயதை அடைந்த 40 ஆண்கள் சமுகமளித்திருப்பது ஷாபிஈ மத்ஹபின்படி கட்டாயம் என்பதால், நிரந்தரக் குடியிருப்பாளர்கள் 40 ஆண்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். இடநெருக்கடி அல்லது சுகாதார அதிகாரிகளின் அனுமதியின்மை அல்லது வேறு காரணங்களினால், 40 பேரைவிட குறைவான எண்ணிக்கையிருப்பின் அவர்கள் ழுஹ்ர் தொழுதுகொள்ள வேண்டும்.
  3. இடநெருக்கடியின் காரணமாக ஓர் ஊரில் பல இடங்களிலும் ஜும்ஆத் தொழமுடியும் என்ற மார்க்க சலுகையின் அடிப்படையில், தற்போதைய சூழலில் சமூக இடைவெளியை பேணி அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜும்ஆவை நிறைவேற்ற முடியாது என்ற நிலையில், பிரதேசக் கிளை ஜம்இய்யாக்களின் ஆலோசனையுடன் உரிய அதிகாரிகளின் அனுமதியைப் பெற்று ஜும்ஆ மஸ்ஜித்கள் ஏனைய மஸ்ஜித்கள், தக்கியாக்கள், ஸாவியாக்கள் போன்ற இடங்களில் ஜும்ஆவை நிறைவேற்றிக் கொள்ளல். சுகாதார அதிகாரிகள் (PHI) அனுமதியளிப்பின் மத்ரஸாக்கள், மண்டபங்கள், பொது இடங்கள் போன்றவற்றிலும் ஜும்ஆவை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
  4. நோய், பிரயாணம், பயம், மழை தொழுகைக்கு செல்லமுடியாத நிர்ப்பந்தம் போன்ற காரணங்களினால் ஜும்ஆவுடைய கடமையை நிறைவேற்றாமல் விடுவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.
  5. கொவிட் 19 அசாதாரண சூழ்நிலையில், அரசாங்கம் அனுமதிக்கும் எண்ணிக்கையினரை விட அதிகமானோர் ஒன்று சேர்வது தடைசெய்யப்பட்டுள்ள நிலையில், சமூக இடைவெளியைப் பேணி ஊரிலுள்ள அனைவரும் ஒன்றுசேர்ந்து ஜும்ஆவை நிறைவேற்றுவது சிரமம் என்பதால், ஜும்ஆவை நிறைவேற்ற சந்தர்ப்பம் கிடைக்காதவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுது கொள்வது போதுமானது. நிர்ப்பந்த நிலையில் ஜும்ஆவை நிறைவேற்ற முடியாமல் போனதால், ஜும்ஆவை விட்ட குற்றம் ஏற்படாது. மாறாக அதற்குரிய நன்மை கிடைக்கும்.
  6. இவ்விடயத்தில் ஊர் ஜமாஅத்தினர் தமது மஸ்ஜித் நிர்வாகிகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி, முடியுமானவர்கள் ஜும்ஆவை நிறைவேற்றுவதுடன், ஏனையவர்கள் ழுஹ்ருடைய தொழுகையை தொழுதுகொள்ளல் வேண்டும்.
  7. எமது நாட்டில் மஸ்ஜித்களுக்கு பொறுப்பாகவுள்ள வக்ஃப் சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் வழிகாட்டல்களையும் கவனத்திற் கொள்ளவும்.

குறிப்பு : ஓர் ஊரில் பல இடங்களில் ஜும்ஆ நடாத்துவதற்குரிய சலுகை, தற்பொழுது நாட்டில் நிலவும் கொவிட் 19 நெருக்கடி நிலை நீங்கும் வரையாகும். இந்நெருக்கடி நிலை நீங்கி நாடு இயல்புநிலைக்கு திரும்பியதன் பின்பு, இவ்வாறு பல இடங்களிலும் ஜும்ஆக்களை நடாத்துவதை நிறுத்தி, வழமையாக ஜும்ஆ நடைபெற்ற இடங்களில் மாத்திரம் ஜும்ஆக்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதே, மார்க்க விதிகளின்படி ஜுமூஆக்கள் நிறைவேறுவதற்கு காரணமாக அமையும்.

மேற்கூறப்பட்ட முறைகளில் ஓர் ஊரில் பல இடங்களில் ஜும்ஆ நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை செய்துகொள்ள முடியாதவர்கள் பத்வாப் பிரிவின் துரித இலக்கத்தை 0117490420 தொடர்பு கொள்ளவும்.

“அல்லாஹ்வே யாவற்றையும் நன்கு அறிந்தவன்”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s