செயிண்ட் லூயிஸ்: அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் காவல் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களில் வன்முறை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.செயிண்ட் லூயிஸ் நகரில் நான்கு காவல் அதிகாரிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது என அந்நகர காவல் துறை தெரிவித்துள்ளது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். எனினும் உயிராபத்தை உண்டாக்கும் காயங்கள் அவர்களுக்கு உண்டாகவில்லை.

கலிஃபோர்னியா கடலோரப் பகுதிகளில் இருக்கும் சான் பிராசிஸ்கோ, சான் ஜோஸ், சாண்டா கிளாரா, ஓக்லேண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடக்கின்றன.

அப்பகுதிகளில் வன்முறைச் சம்பவங்களும் சூறையாடல்களும் நடந்துள்ளன.

மினசோட்டா தலைநகர் மினியாபொலிஸில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் மரணமடைந்த சதுக்கத்தில் பல்லாயிரம் போராட்டக்காரர்கள் கூடியுள்ளனர்.

ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணத்தை தொடர்ந்து நடக்கும் போராட்டங்களின்போது வன்முறை ஏற்பட்டுள்ளதாக சியாட்டில் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல் அதிகாரிகளை நோக்கி கற்கள், பாட்டில்கள், பட்டாசுகள் ஆகியவை வீசப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெடிச்சத்தங்களும், கண்ணீர் புகைக்குண்டு பயன்படுத்தப்பட்டதால்தால் உண்டான புகை மூட்டமும் எங்கும் காண முடிகிறது என்று சமூக ஊடகங்களில் சிலர் பதிவிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கை மீறி போராட்டங்கள் நடந்தாலும், அது தொடர்ந்து அமைதியான முறையில் இருப்பதாக போர்ட்லேண்ட் நகர காவல்துறை தெரிவித்துள்ளது.

வால்நட் க்ரீக் பகுதியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் பெண் போராட்டக்காரர் ஒருவர் சுடப்பட்டார்.

காரில் வந்த நபர் சுட்டுவிட்டு தப்பிவிட்டதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.

அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் ஃப்ளாய்ட்டின் மரணம் ஒரு கொலை என அதிகாரப்பூர்வ பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹென்னெபின் கவுண்டி மருத்துவ ஆய்வாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், இறந்தவரின் உடலில் இதய நோய் மற்றும் சமீபத்திய போதைப்பொருள் பயன்பாடு ஆகியவை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாய்ட் எப்படி இறந்தார்?

அவரது உடலின் பின்பகுதி மற்றும் கழுத்து நசுக்கப்பட்டதால், அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டு மரணம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

46 வயதான ஜார்ஜ் ஃப்ளாய்ட் போலிஸாரின் பிடியில் இருக்கும்போது, காவலரின் கட்டுப்பட வைக்கும் முயற்சியால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததார் எனஅவரது மரணம் சட்ட ரீதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத் தலைநகரான மினியாபொலிஸ் நகரில், மே 25 அன்று நடந்த கைது செய்யும் முயற்சியின்போது, அவர் உயிரிழந்தார்.

ஒரு காருக்கு அடியில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் கைவிலங்கிட்டு இருப்பது போன்றும் அவரின் கழுத்தின் மேல் தனது முழங்காலை வைத்து காவலர் ஒருவர் அழுத்துவதும் போன்றும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

கொரோனா வைரஸ் ஊரடங்கை மீறி அமெரிக்காவில் போராட்டம்

ஜார்ஜ் ஃப்ளாய்ட் இறந்ததைக் கண்டித்து ஏழாவது நாளாக நடக்கும் போராட்டத்தால் அமெரிக்காவின் பல மாகாணங்கள் பற்றி எரிகின்றன.

கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியிலும் அமெரிக்காவில் 75 நகரங்களில் போராட்டங்கள் நடக்கின்றன. 40 நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்கள் இந்த உத்தரவை மீறுவது பதற்றமான சூழலை ஏற்படுத்துகிறது.