கொழும்பு: நாளை (26) முதல் சமூக இடைவெளியை பேணாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பேணாதவர்கள் மாத்திரமன்றி அதன் உரிமையாளர்கள், முகாமையாளர்கள் ஆகியோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
எமது நாட்டில் கொவிட்-19 நோய் பரவியதைத் தொடர்ந்து முதலாவது நோயாளி கடந்த மார்ச் 11ஆம் திகதி அடையாளம் காணப்பட்டார். அதனையடுத்து மார்ச் 18ஆம் திகதி கொச்சிக்கடை பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் திகதி இன்னும் சில இடங்களிலும் மார்ச் 20ஆம் திகதி முதல் நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இந்நிலையில் இரு மாதங்களுக்கு பிறகு நாளை (26) முதல் கொழும்பு, கம்பஹா உள்ளிட்ட பிரதேசங்களில் ஊரடங்கு தளர்த்தப்படுவதோடு, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் ஊரடங்குச் சட்டம், இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளது.