இரண்டாம் உலகப்போரின் பின்னர் முதன்முதலாக ஐரோப்பவை மாத்திரமல்ல அமெரிக்காவையும் கோவிட் 19 வைரஸ் அச்சத்தால் உறையவைத்துள்ளது. இங்கிலாந்தில் இந்நோயினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை நாற்பதாயிரத்தை எட்டும் நிலையில்..ஹரமைன்- இரண்டு ஆலயங்களின் தரிசித்தல் மட்டுப்படுத்தப்பட்டிருக்கையில்…உலகின் அதிகமான நாடுகளில் கல்வி, வர்த்தகம், விமானசேவைகள், அரச நிர்வாக சேவைகள் தொடக்கம் விளையாட்டுப்போட்டிகள் வரை காலவரையின்றி முடங்கிக்கிடக்கின்றன.

சுமார் 11 ஜூம்ஆக்களை இழந்து, பள்ளியின் தொடர்பற்ற வாழ்க்கையை உலக முஸ்லிம்களில் பெரும்பாலானோர் அனுவிப்பதும், வீடுகளில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றி, பெருநாள் தினத்தில் மக்கள் வீடுகளில் முடங்கிக்கிடக்கும் இதுபோன்ற நிலைமை வரலாற்றில் முதற்தடவையாக இருக்கும் என நினைக்கிறேன்.
ஈஸ்டர், சித்திரை மற்றும் வெசக் அவற்றைக்கொண்டாடும் மக்கள் தங்களது வீடுகளிலேயே இந்த விசேட தினங்களை கொண்டாடியது போலவே இந்நேரத்தில் எங்களையும் இப்பெருநாள் வீடுகளில் சந்தித்திருக்கிறது.
1957 இல் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ள அனர்த்தம். தாழ்நிலப்பகுதிகளில் 6 அடிக்கு மேல் ஊரில் வெள்ளம் பாய்ந்து சென்றதாகவும், ஆறும், கடலும் ஒன்றாக இணைந்த அந்த வெள்ளத்தில் மக்கள் தோணிகளிலும், வள்ளங்களிலும் பயணித்தே தங்களது அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றியதாகவும், குடிசைகள் வெள்ளத்தில் மிதந்து சென்றதாகவும், ‘அன்று நாங்கள் எதிர்நோக்கிய கஸ்டத்தைவிடவா இது….?’ என நம் முன்னோர்கள் அன்று கூறிவந்த நிலையில்…
1978 இல் சூறாவளியும் அதன் அனர்த்த வலியும் வருடாந்த வெள்ள அபாயங்களை எதிர்நோக்கும் போது இன்றும் மக்களால் அவை ஞாபகப்படுத்தப்படுவதுபோல்..
1990. நமது மக்கள் சந்தித்த நெடுந்தூரத் துயரம். தொடர்ச்சியாக 3 மாதங்கள் மின் துண்டிப்பு, வர்த்தக முடக்கம், போக்குவரத்து சிரமம், சீரற்ற கல்வி, வறுமை, அச்சம்!’தொன்னூராம் ஆண்டு நாங்க பட்ட கஸ்டத்தைவிடவா இது…?’ என நாங்கள் இலகுவில் மறந்திடாத அந்தத் துயர காலத்தை இன்றுவரை கூறிக்கொள்வது போன்றே…
வருங்கால வடுக்களைச் சந்திக்கும்போது…இந்த நோன்பும், பெருநாளும் நம்மால் அடிக்கடி பேசப்படும்!
(படம்: கல்லடிப்பாலம் 1978 சூறாவளியின்போது)
M. Jalees