கொழும்பு: இலங்கையில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் பெருமளவிலான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. நாட்டில் மத்திய மற்றும் தென் பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே மழையுடனான வானிலை நிலவிவருகின்றது. இந்த நிலையில், இன்று அதிகாலை முதல் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் இன்று நண்பகல் பல நகரங்கள் நீரில் மூழ்கின. குறிப்பாக ரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகரம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது.

பலாங்கொடை நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. நகர் பகுதிகளில் 5 அடி வரை வெள்ள நீர் உட்புகுந்துள்ளதாகவும், நகரை அண்மித்த பகுதிகளில் சுமார் 10 அடியை விடவும் அதிக உயரத்திற்கு நீர் உட்புகுந்துள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
ரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் பெய்த கடும் மழையுடனான வானிலையினால் களு, கிங் மற்றும் நில்வலா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவிக்கின்றார்.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால் ஏற்பட்ட அனர்த்தங்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது.