கொழும்பு: கொரோனாவைரஸ்‌ காரணமான‌ கொவிட்‌-19 நோயினால்‌ மரணிப்பவரின் பூதவுடலை தகனம் செய்வது தொடர்பில், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய,

கொரோனா வைரஸினால் மரணமடைந்த அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும்‌ ஆளொருவரின்‌ பூதவுடல்‌ சுகாதாரப்‌ பணிப்பாளர்‌ தலைமையதிபதியினால்‌ விடுக்கப்படும்‌ பணிப்புகளுக்கு இணங்க,

ஏதேனும்‌ சாத்தியமான உயிரியல்‌ அச்சுறுத்தலைத்‌ தடுக்கும்‌ நோக்கத்திற்கென அங்கீகரிக்கப்படும்‌ சுடலை அல்லது இடத்தில், முழுமையாக எரிவதற்கென ஆகக்‌ குறைந்தது 45 நிமிடங்கள்‌ முதல்‌ ஒரு மணி நேரம்‌ வரை 800 க்கும்‌ 1200 க்குமிடையிலான பாகை செல்சியஸ்‌ வெப்ப நிலையில் எரிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உரிய உத்தரவு பெற்றவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவ்வுடலை கையளிக்கக் கூடாது என அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், அத்தகைய சுடலை அல்லது இடத்தில்‌ பூதவுடலைக்‌ கையாளுகின்ற ஆட்களினால்‌ பயன்படுத்தப்படும்‌ உடை மற்றும்‌ மீளப் பயன்படுத்த பயன்படாத, தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள்‌ தகனத்தின்போது சவப்பெட்டியுடன்‌ அவற்றை இடுவதன்‌ முலம்‌ எரிக்கப்படுதல்‌ வேண்டும்‌ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூதவுடலின் சாம்பலானது, உறவினரின் வேண்டுகோளின் பேரில் கையளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீளப் பயன்படுத்தப்படக் கூடிய கருவியானது, உரிய முறையில் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.