- இர்ஷாட் ஏ. காதர்
கொழும்பு: உலகளவில் ஏற்பட்டுள்ள கொரணா கோவிட் 19 வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து இலங்கையிலும் மக்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு, ஊரடங்குச்சட்டம் அமுலில் இருந்துவருகிறது.
பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி என உத்தியோகபூர்வமாக தேர்தல் ஆணையாளரால் அறிவிக்கப்பட்டிருந்த வேளையிலேயே இந்த கோவிட் 19 தாக்கம் இலங்கையிலும் வலுப்பெற்றது.

முஸ்லிம்கள் அதாவது சிறுபான்மையினர் இல்லாமல் இலங்கையில் எவரும் ஜனாதிபதியாக முடியாது என எமது அரசியல் வல்லுனர்(?)களின் சிங்கள,தமிழ் தேர்தல் மேடைப்பேச்சுக்களை பன்சாலை ரீதியாககவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் பரவவிட்டு, பெரும்பான்மை மக்களை அதிகமாக ஒன்றிணைத்து மகிந்த ராஜபக்ஸ குடும்பத்தினர் தங்களது ஆரம்பக்கனவை நனவாக்கிக்கொண்டனர். அதிகம் அதிகமான பெரும்பான்மை வாக்குகளைக்கொண்டு 52.25 வீதமான வாக்குகளைப் பெற்று கோட்டபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வரலாற்று வெற்றியைப் புசித்தார்.
இவ்வெற்றிக்கு, முஸ்லிம் விரோதப்போக்கும் மறைமுகமான இனவாதமும் வெற்றியளித்தது.
கடந்த வருட ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதலையடுத்து முஸ்லிம் இனவாதம் முஸ்லிம் அரசியல்வாதிகளை நோக்கித் திரும்பியது. அவற்றுள் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் மற்றும் ரிஷாட் பதியுதீன் முக்கியமானவர்கள்.
இவர்கள் இருவரையும் எக்காரணம் கொண்டும் பொதுஜன பெரமுனையில் இணைக்கக்கூடாது என்ற அக்கட்சி ஆதரவாளர்களின் வாக்குறுதியில் ஜனாதிபதித் தேர்தல் அமைந்தது. அதனைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலும் அமையவிருந்தது.
இதற்கிடையில் ரஊப் ஹக்கீம் எப்போதும் ரணில் விக்ரமசிங்கவையும் பின்னர் சஜித் பிதேமதாசவையும் சார்ந்திருப்பதால் மகிந்த தரப்பு இப்பாராளுமன்றத் தேர்தலில் ஹகீமுக்கு இடம்கொடுக்கவில்லை.
இந்நிலையில் வடக்கு, கிழக்கைத் தவிர்த்தாலும் பரவாயில்லை, ஏனைய மாவட்டங்களிலும் அதிகமான ஆசனங்களை மகிந்த தரப்பு பெற்று, பாராளுமன்றத்தைக் கைப்பற்றும் பாரிய வியூகம் ஒன்றை அமைத்திருந்தது. அது ஏப்ரல் 21!
ஏப்ரல் 21 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நினைவு நாளை நாடு தழுவிய ரீதியில் பிரமாண்டமான முறையில் நடாத்த ஏற்பாடு செய்து பழைய நினைவுகளை மீட்டெடுத்தல் மற்றும் இத்தாக்குதலோடு சம்பந்தப்பட்ட கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்து தண்டனைக் காலத்தை மேலும் அதிகரித்து முஸ்லிம் பயங்கரவாதிகளை மேலும் பொதுமக்களுக்கு அச்சமூட்டி, ஞாபகப்படுத்தி அன்றைய நினைவு நாளோடு இறுதித் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தையும் நடாத்தி முடித்தால் தேர்தல் திரைப்படம் வரலாற்றில் பல வருடங்களைத் தாண்டும் என்ற ராஜதந்திர திட்டத்தில் ஆளும் தரப்பு இருந்தது.
ஆனால் இந்த ராஜதந்திரத் திட்டம் கோவிட் 19 வைரஸால் தடுமாறிக்கொண்டிருக்கிறது.
இலங்கையில் நோய் தொற்றுவீதம் ஏனைய நாடுகளைவிட குறைந்தளவாக இருக்கும் இன்றைய நிலையில் சிங்கள, தமிழ் புத்தாண்டு வாரத்திலாவது ஊரடங்கு முழுவதுமாகத் தளர்த்தப்படலாம் என மக்கள் எதிர்பார்த்திருந்தனர். எனினும் ஊரடங்கு தொடர்கிறது.
ஆளும் தரப்பிற்கு ஏப்ரலில் தேர்தல் நடாத்த வேண்டும் என்ற வலுவான எண்ணம் தொடருமானால், ஏப்ரல் 20 இற்குப் பின்னர் ஊரடங்கு அமுலில் இருக்காது.
இந்தியாவில் கோவிட் 19 வைரஸ் தாக்கத்தின் பின்னணியில் தப்லீக் ஜமாஅத் இருப்பதாக அங்குள்ள இனவாதிகள் சமூகவலைத்தளங்களில் போலிப் பிரச்சாரங்களை பரப்பி வருகின்றனர்.
இலங்கையிலும் இந்த கோவிட் வைரஸிற்குப் பின்னணியில் முஸ்லிம்கள் இருப்பதை நிரூபிக்க எடுத்த இனவாதிகளின் திட்டங்கள் களையப்பட்டிருக்கின்றன.
இந்த முறை ஏப்ரல் 21 நினைவு நாளை அரசாங்கம் ஞாபகப்படுத்தாவிட்டால் அவர்களுக்கு இன்னுமொரு சந்தர்ப்பம் வெற்றிபெறாது.
யுவர்காத்தான்குடிக்காக
இர்ஷாட் ஏ. காதர்