பொதுத் தேர்தலை கட்டம் கட்டமாக நடாத்தலாமா? பாகம்-1

வை எல் எஸ் ஹமீட்


பொதுத்தேர்தல் கட்டம் கட்டமாக நடாத்தப்பட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவுகின்றன. இது தொடர்பான சட்டநிலைப்பாடு என்ன? என்பதை இக்கட்டுரைத் தொடர் ஆராய்கிறது.


தேர்தலை ஒத்திப்போடுவதற்காக இருக்கின்ற ஒரேயொரு ஏற்பாடு பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டம் பிரிவு 24(3) என முன்னைய ஆக்கங்களில் பார்த்தோம். இது முழு நாட்டிற்குமாக தேர்தலை ஒத்திப்போடக்கூடிய ஏற்பாடல்ல; இதனை ஒன்றில் அவசரகால சட்டத்தால் அல்லது சரத்து 70(7) இன்கீழ் பாராளுமன்றத்தைக் கூட்டி முழுநாட்டிற்கும் தேர்தலை ஒத்திப்போடக்கூடிய விதமாக தற்காலிகமாக திருத்தலாம்; எனவும் பார்த்தோம்.


அரசாங்கம் பாராளுமன்றத்தைக் கூட்டவோ, அவசரகால சட்டத்தைப் பிரகடனப்படுத்தவோ முனைப்புக்காட்டாத நிலையில் ஒரு செயற்கை வியாக்கியானத்தின்மூலம் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனியாக 22 மாவட்டங்களுக்கும் வர்த்தமானி வெளியிட்டு முழு நாட்டிலும் தேர்தலை ஒத்திப்போடுவது தொடர்பாக சில சட்ட அபிப்பிராயங்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பாகவும் பார்த்தோம்.


வரலாறு————-1956ம் ஆண்டுவரை கட்டம் கட்டமாக தேர்தல் நடாத்துகின்ற நடைமுறை இந்நாட்டில் இருந்துவந்திருக்கின்றது. அவ்வாறு தேர்தல் நடக்கின்றபோது ஒவ்வொரு கட்டத்தேர்தல் நடந்துமுடிந்தவுடனே வாக்குகளை எண்ணும் நடைமுறையும் இருந்திருக்கின்றது.

1978ம் ஆண்டு யாப்பு—————————-1978ம் ஆண்டு யாப்பு சரத்து 70(5) இன் பிரகாரம் பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியில் தேர்தலுக்கான திகதி குறிப்பிடவேண்டும். அதில் தேர்தலுக்கான “திகதி/ திகதிகள்” என்ற பதம் பாவிக்கப்பட்டிருக்கின்றது. “திகதிகள்” என்ற பன்மைச் சொல்லும் பாவிக்கப்பட்டதன்மூலம் ஒன்றுக்குமேற்பட்ட திகதிகளில் தேர்தல் நடாத்துவதற்கு அரசமைப்பு இடமளிக்கிறது; எனும் முடிவுக்கு வரலாம்.


அதேநேரம், அவ்வாறு ஒன்றுக்குமேற்பட்ட திகதிகளில் தேர்தல் நடாத்துவதற்கு அதன் நடைமுறைகள் தொடர்பாக தேர்தல்கள் சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. மட்டுமல்ல, தேர்தல்கள் சட்டம் பிரிவு 10(1)(b) இல் ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து வெளியிடும் வர்த்தமானியில் தேர்தலுக்கான “ திகதி” குறிப்பிடப்பட வேண்டும்; என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
இதன்மூலம் புரிந்துகொள்வதென்னவெனில் அரசியலமைப்பு ஒரே நாளிலோ, ஒன்றிற்கு மேற்பட்ட நாட்களிலோ, தேர்தலை நடாத்துவதற்கு இடமளித்தபோதிலும் தேர்தலை நடாத்துகின்றமுறை தொடர்பாக பாராளுமன்றம் சட்டம் ஆக்கியபோது ஒரே நாளில் தேர்தலை நடாத்துவதற்கான நடைமுறையைத்தான் சட்டமாக்கியிருக்கின்றது.
எதிர்காலத்தில் பாராளுமன்றம் ஒன்றுக்குமேற்பட்ட நாட்களில் தேர்தல் நடாத்துவதற்கேற்ற வகையில் பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தைத் திருத்தலாம். அது அரசியலமைப்பிற்கு முரணகாது. ஆனாலும் தற்போது ஒரேநாளில்தான் தேர்தலை நடாத்தவேண்டும். அதனால்தான் ஒரே திகதியை குறிப்பிட்டு ஜனாதிபதி வர்த்தமானி வெளியிடுகின்றார்.
தேர்தலை ஒத்திப்போட்டு கட்டம் கட்டமாக நடாத்தல்———————————————————-ஜனாதிபதியின் செயலாளர் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிய கடிதம், ஜூன் 2ம் திகதிக்குமுன் தேர்தலை நடாத்தவே அரசாங்கம் விரும்புவதைக் காட்டுகின்றது. இந்நிலையில் ஏப்பிரல் 25 இற்குமுன் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தலை ஒத்திப்போட்டாகவேண்டும். அதற்குவசதியாக ஜனாதிபதி பாராளுமன்றம் கூடுகின்ற திகதியை ஜூன் 2இற்குப் பிந்தாத ஒரு திகதிக்கு மாற்றவேண்டும்.
அவ்வாறு மாற்றினால், தேர்தல்கள் ஆணைக்குழு மே இறுதிப்பகுதியில் தேர்தலை நடாத்த திகதி குறிக்கலாம். சிலவேளை சில மாவட்டங்களில் அந்தத்திகதியிலும் தேர்தல் நடாத்தமுடியாத சூழ்நிலை தோன்றினால் அந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் ஜூன் 2ம் திகதிக்குப் பிந்தியதாகவும் திகதி குறிக்கலாம்.

பாராளுமன்றத்தைக் கூட்டும் திகதி ஜூன் இரண்டிற்கு உட்பட்டதாக இருந்தாக இருந்தால் சில மாவட்டங்களில் அத்திகதிக்குப்பின் தேர்தல் நடாத்த சட்டம் இடமளிக்கின்றதா?—————————————————————ஆம் நடாத்தலாம். சரத்து 69 இன்படி, பாராளுமன்றத்தில் வெற்றிடமிருந்தாலும் பாராளுமன்றம் செயற்படலாம். இங்கு நுணுக்கமாக புரிந்துகொள்ளவேண்டியவை.
ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் தேர்தல் நடாத்த திகதி குறிக்கமுடியாது. ஏற்கனவே, ஒரேநாளில் தேர்தல் நடாத்த திகதி குறித்தாகிவிட்டது. எனவே, இன்னொரு தடவை தேர்தல் நடாத்த, ( ஒரே நாளிலோ, ஒன்றுக்குமேற்பட்ட நாட்களிலோ) “திகதி குறித்தல்” என்ற விடயம் பொருந்தாது.
இப்பொழுது செய்யக்கூடியது தேர்தலை ஒத்திவைத்தல். ஒத்திவைப்பது தவிர்க்கமுடியாத காரணத்தால். மட்டுமல்ல, ( சட்டம் திருத்தப்படாத காரணத்தால்) மாவட்டம், மாவட்டமாகத்தான் தேர்தல் ஒத்திவைக்கப்படப் போகின்றது.எனவே, அந்தந்த மாவட்டத்திற்கு சாத்தியமான திகதிகளில்தான் தேர்தல் நாடாத்தமுடியும்.
எனவே, இது நடைமுறையில் கட்டம் கட்டமான தேர்தலுக்கு இட்டுச் சென்றாலும் இது ஆரம்பத்திலேயே திகதி குறித்து கட்டம் கட்டமாக நடாத்துகின்ற தேர்தல் அல்ல; மாறாக ஒத்திவைக்கப்பட்டு அந்தத்த மாவட்டங்களில் சாத்தியமான திகதிகளில் நடாத்துகின்ற தேர்தலாகும்.
இங்கு எழுகின்ற சட்டப்பிரச்சினை பிரச்சினை எப்போது தேர்தல் நடாத்துவதென்பதல்ல. மாறாக குறித்த திகதியில் ( ஜூன் இரண்டு அல்லது அதற்குட்பட்ட திகதியில்) பாராளுமன்றம் கூடுவதாகும். பாராளுமன்றம் கூடுவதற்கு சகல மாவட்டங்களிலும் தேர்தல் நடைபெற்றிருக்க வேண்டுமென்பதல்ல.
உதாரணமாக, சாதாரண காலங்களில் தேர்தல் நடைபெறுகின்றபோது, தவிர்க்கமுடியாத காரணங்களுக்காக இரண்டொரு மாவட்டங்களில் தேர்தல் ஒத்திவைக்கப்படலாம். அதற்காகத்தான் உண்மையில் பிரிவு 24(3) இருக்கிறது. அவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட மாவட்டங்களில் பாராளுமன்றம் கூடுவதற்குமுன் தேர்தலை நடாத்திவிடவேண்டுமென்ற கட்டாயமில்லை. அது அந்த மாவட்டத்தின் சூழ்நிலையைப் பொறுத்தது.
எனவே, அந்த மாவட்டங்களில் தேர்தல் நடைபெறாமலேயே ஏனைய மாவட்டங்களின் முடிவினை வைத்து பாராளுமன்றம் கூடலாம். அதற்கு மேலே குறிப்பிட்ட சரத்து 69 வழிசெய்கிறது.
எனவே, சுருங்கக்கூறின் கட்டம் கட்டமாக ஆரம்பத்திலேயே திகதி குறித்து தேர்தல் நடாத்த இலங்கைச் சட்டத்தில் இடமில்லை. ஆனால் ஒத்திப்போடும் தேர்தல் நடைமுறையில் கட்டம் கட்டமாக நடைபெறுகின்ற தேர்தலாக அமையலாம். ஆனாலும் அதற்கு “ கட்டம் கட்டமாக தேர்தல் நடாத்துதல்” என்ற பதம் பொருந்தாது. மட்டுமல்ல, ஒரு சில மாவட்டங்களில் பாராளுமன்றம் கூடுகின்ற திகதிக்குப் பிந்தியும் தேர்தல் நடாத்துவது சாத்தியமாகும்.
இங்கு எழுகின்ற இரண்டு பிரதான கேள்விகள்.————————————————————ஒன்று: ஜனாதிபதி ஜூன் இரண்டிற்குள் பாராளுமன்றம் கூடும் திகதியைக் குறித்தாலும் அத்திகதிக்குமுன் தேர்தலை நடாத்துவது நடைமுறைச் சாத்தியமில்லையெனில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு மாற்றுவழி உண்டா? என்பதாகும்.
இரண்டு: அவ்வாறு சாத்தியமெனில் தேர்தல்கள் ஆணைக்குழு வெவ்வேறு திகதிகள் குறிக்காமல் சகல மாவட்டங்களுக்கும் ஒரே திகதியைக்குறித்தால் அதேநேரம், அரசியல் ஆதாயத்திற்காக அரசு வெவ்வேறு திகதிகளில் தேர்தலை நடாத்த விரும்பினால் ஜனாதிபதிக்கு இதில் தலையிடமுடியுமா? என்பதாகும்.
( தொடரும்)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s