முக கவசம், ரூபாய் நோட்டுகளில் கொரோனா வைரஸ் எவ்வளவு காலம் உயிர்வாழும் என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.கொரோனா வைரஸ், முக கவசங்களில் 7 நாட்கள் வரையும், ரூபாய் நோட்டுகள், எவர்சில்வர் மற்றும் பிளாஸ்டிக் தளங்களில் சில நாட்கள் வரையும் உயிர் வாழும் என ஹொங்கொங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளதாக பிரபல மருத்துவ இதழான தி லேன்செட் (The Lancet) கூறியுள்ளது.

அதே சமயம் வீடுகளில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், பிளீச் அல்லது சவர்க்காரம் உபயோகித்து கொரோனா வைரசை கொன்று விடலாம் எனவும் அந்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
அச்சடித்த காகிதம், டிஷ்யூ பேப்பர் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் 3 மணி நேரத்திற்கு குறைவாகவும், மரப்பலகை மற்றும் துணிகளில் 2 நாட்களுக்கும் அது உயிரோடு இருக்க வாய்ப்புள்ளதாகவும் இந்த ஆய்வை நடத்திய லியோ பூன் லிட்மேன், மாலிக் பீரிஸ் என்ற இரு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எனவே முக கவசம் அணிபவர்கள் அதன் வெளிப்புறத்தை தொடாமல் இருப்பது முகவும் முக்கியம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
நேச்சுர் இதழில் கடந்த மாதம் வெளியிடப்பட்ட கொரோனா வைரஸின் சுற்றுச்சூழல் ஸ்திரத்தன்மை குறித்து அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில்,
பிளாஸ்டிக் மற்றும் எஃகு ஆகியவற்றில் 72 மணி நேரம் வரை வைரஸ் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், ஆனால் தாமிரத்தில் நான்கு மணி நேரத்திற்கும் அல்லது அட்டைப் பெட்டியில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கவில்லை. மேலும் மளிகைப் பொருட்கள் போன்ற பொருட்களை தங்கள் வீடுகளுக்கு கொண்டு வரும்போது மக்கள் என்ன வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றால் கை கழுவுதல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும் சமூகமாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டொலர்கள் நன்கொடையாக அளித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ 4800 என்ற தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியை பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர். சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி ஏற்றப்படும். இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்ததாக உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாண்டுக்குள் 10 இலட்சம் தடுப்பூசிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸிற்காக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படும் 2-வது தடுப்பூசி இதுவாகும்.