கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும் போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர்த் துளிகள் 27 அடி வரை வைரஸ் உடன் காற்றில் பாய்ந்து செல்லும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல இலட்சக்கணக்கான மக்களைப் பாதித்துள்ளது. நேற்று வரையில் 9 இலட்சத்து 35 ஆயிரத்து 957 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 47 ஆயிரத்து 745 பேர் மரணமடைந்துள்ளனர். இதுவரை இந்த வைரஸ் தாக்கி ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 286 பேர் குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க சமூக இடைவெளிதான் மிக முக்கியமானது என்று மருத்துவர்கள் கண்டிப்பாக மக்களை அறிவுறுத்தி வருகின்றனர். மக்கள் சமூக விலகலை கடைப்பிடித்தால் இந்த வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க முடியும் என்பதுதான் மருத்துவ விஞ்ஞானிகளின் உறுதியான முடிவாக இப்போதைக்கு இருக்கின்றது.
சமூக விலகலை கண்டிப்பாக பேணும் நோக்குடன் இலங்கை, இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் தும்மும் போது அவரது மூக்கில் இருந்து வெளியாகும் நீர்த்துளி 27 அடி வரை வைரஸ் உடன் காற்றில் பாய்ந்து செல்லக் கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள்.
இது தொடர்பாக அமெரிக்காவின் ‘மசாசூசெட்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர் லிடியா பவுரவுபியா என்பவர் எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை ‘ஜேர்னல் ஒப் தி அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன்’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் ஆராய்ச்சியாளர் லிடியா கூறியுள்ளதாவது,
‘கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க வேண்டும் என்றால் பொதுமக்கள் கட்டாயமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் தும்மும் போது அவரது மூக்கில் இருந்து வெளிப்படும் சளித் துளிகள் 27 அடி தூரம் வரை காற்றில் பரவும். அதன் மூலம் வைரஸும் காற்றில் பரவும் ஆபத்து உள்ளது. அதாவது 23 அடி முதல் 27 அடி தூரம் வரை அவரைச் சுற்றி வைரஸ் காற்றில் பரவி இருக்கும். எனவே இந்த இடைவெளிகளில் யாராவது அப்போது செல்லும் போது அவரையும் வைரஸ் தாக்கக் கூடும். அதாவது அவரது சுவாசம் ஊடாக வைரஸ் நுரையீரலைச் சென்றடையும் ஆபத்து உள்ளது. ஆனால் கடும் வெப்பமான பகுதிகளில் சளித் துளிகள் வேகமாக ஆவியாகி விடும். ஆனால் அதேநேரம் வெப்பநிலை குறைவான பகுதிகளில் அல்லது ஏசி அறைகளில், குளிர்ச்சியான பகுதிகளில் வைரஸ் அங்கேயே பரவியிருக்கும்.’
இவ்வாறு அந்த ஆய்வில் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இந்த ஆய்வு தவறானது என்றும், மக்களை தவறாக வழி நடத்தும் என்றும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தும்மல் இருக்கும் என்று கூற முடியாது என்றும் அமெரிக்காவின் தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் தடுப்பு நிறுவனத்தின் இயக்குனர் டொக்டர் அந்தோனி பாசி என்பவர் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு வகையான தகவல்கள், நாள்தோறும் ஆய்வுகள் என்று வெளியாகி வருகின்றன. இந்த ஆய்வுகள் சில சாதகமாக இருந்தாலும் பல ஆய்வுகள் மக்களை பயமுறுத்தும் வகையிலேயே தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்கிறார் அந்தோனி பாசி.