இஸ்லாமியர்கள் எரியூட்டப்பட மாட்டார்கள் என்ற அரசியல் வாக்குறுதி எங்கே ? இஸ்லாம் என்ன கூறுகின்றது ?

முகம்மத் இக்பால் , சாய்ந்தமருது

ஒவ்வொரு அரசியல்வாதிகளும் மகா சுயநலவாதிகள் மற்றும் குழப்பவாதிகள் என்ற சிந்தனையை எமது மனதில் நிலை நிறுத்தினால் அரசியல்வாதிகளின் கருத்துக்களைக்கண்டு நாங்கள் கவலைப்படத் தேவையில்லை. ஒவ்வொரு கட்சியின் தலைவர்களிடம் ஒரு கொள்கை இருக்கும். அக்கட்சிகளின் கீழ்மட்டத்தில் உள்ளவர்களிடம் இன்னுமொரு கொள்கை இருக்கும். இவைகள் இரண்டும் சமாந்தரமாக செல்வதில் குழப்பங்கள் நிலைத்திருக்கும்.

அதுபோல் சிங்கள தேசிய கட்சிகளுக்கும் அதன் தலைவர்களுக்கும் சிறுபான்மை பற்றிய ஒரு தெளிவான கொள்கை மனதளவில் இருக்கும். ஆனால் அந்த கொள்கை எவ்வாறானது என்று அந்த கட்சிகளில் பயணிக்கின்ற சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த முகவர்களுக்கும், எடுபிடிகளுக்கும் தெரியாது. இதனை நடைமுறையில் மாத்திரமே அறிந்துகொள்ள முடியும்.  

அவ்வாறு தெரிந்தாலும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அடக்கி வாசிப்பார்கள். தலைவர்களுக்கு ஏற்ப செயல்படவில்லை என்றால் எதிர்காலத்தில் அவர்களது அரசியலும் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற பதவிகளும் கானல் நீராகிவிடும்.   

அதுபோலதான் சட்டத்தரணி அலி சப்ரி அவர்களின் வாக்குறுதியாகும். கொரோனா வைரசின் தாக்கத்தினால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களை எரியூட்டுவதில்லை என்று அலி சப்ரி அவர்கள் வாக்குறுதி வழங்கியதாக கூறப்பட்டது.  

அவ்வாறு அவர் வாக்குறுதி வழங்கியிருந்தும் கொரோனா வைரசின் தாக்கத்தினால் நேற்று மரணித்த இஸ்லாமியர் ஒருவர் அவசர அவசரமாக எரியூட்டப்பட்டுள்ளார். 

இஸ்லாமியர்கள் மரணித்தால் அவர்களது மரணச்சடங்கு பற்றியும், இஸ்லாமியர்களை எரியூட்டுவதில்லை என்று தெரிந்திருந்தும் அவசரப்பட்டு எரியூட்டப்பட்டதன் மூலம் இளவு வீட்டிலும் அரசியல் நடைபெறுகிறது என்பதனை காணக்கூடியதாக உள்ளது.  

இங்கே வாக்குறுதி வழங்கியது அரசாங்கமல்ல. அது அலி சப்ரி என்ற தனிநபர். சிங்கள அரசாங்கத்தின் எடுபிடிகளாக இருப்பவர்கள் அரசாங்கம் வழங்குகின்ற சலுகைகளை மட்டும் அனுபவித்துக்கொண்டு இருக்க வேண்டுமே தவிர, அரசாங்கத்தை வழிநடாத்தவோ, தனது சமூகத்துக்கு சார்பாக செயல்படவோ முற்படக்கூடாது என்ற செய்தியை இந்த சம்பவம் கூறுகின்றது. 

நாங்கள் எவ்வாறு மரணிக்கின்றோமோ அந்த நிலையிலிருந்துதான் எழுப்பப்படுவோம் என்று ரசூலுல்லாஹ் அவர்கள் கூறியுள்ளார்கள். மீனின் வயிற்றுக்குள் இருந்தபோது நபி யூனுஸ் அவர்கள் அல்லாஹ்வை பிரார்த்திக்கவில்லையென்றால் அவர் மீனின் வயிற்றுக்குள் இருந்தவாரே எழுப்பப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது. 

அத்துடன் ரசூலுல்லாஹ்வின் காலத்தில் இஸ்லாமிய பிரச்சாரத்துக்காக என்று அழைத்துச் செல்லப்பட்ட அல்-குர்ஆனை மனனம் செய்த பல நபித்தோழர்கள் திட்டமிட்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டதுடன், அவர்களது உடல்கள் மிருகங்களுக்கிரையாக்கப்பட்டன என்ற வரலாறுகளையும் அறிந்துள்ளோம். 

எனவே எமது சமூகத்தை சேர்ந்தவர் எரியூட்டப்பட்டுள்ளார் என்று கவலைப்படாமலும், அரசியல்வாதிகளின் ஏவல்களையும், பதவிக்காக சமூகத்தை காட்டிக்கொடுப்பவர்களையும் நம்பாமல், இறைவனையும், மறுமையையும் உறுதியாக நம்புவதுடன், தொற்று நோய்க்கு உள்ளாகி மரணிப்பவர்களுக்கு இறைவன் வழங்கியுள்ள வாக்குறுதிகளைக் கொண்டு எங்களது மனதை பலப்படுத்திக்கொள்வோம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s